வேலூர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று( நவம்பர் 16) நடைபெற்றது.
மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலுவிஜயன் (குடியாத்தம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

‘‘இந்தியாவில் நூறாண்டு கடந்த கட்சி காங்கிரஸ். அதற்கு அடுத்து 100 ஆண்டு கண்ட கட்சி நம்முடைய திராவிட இயக்கம். நாம் பெரிய கட்சிக்கு சொந்தக்காரர்கள். இந்த கட்சியால்தான் நாம் படிக்க முடிந்தது, கட்சி பதவியில் நீங்கள் இருக்கீறீர்கள்.
இந்த இயக்கத்தின் வளர்ச்சியில் நாம் இல்லாவிட்டால் இன்னும் பிற்படுத்தப்பட்ட மக்களாகவே நாம் இருந்திருப்போம். ஒரு காலத்தில் 100 பேருக்கு வேலை கிடைத்தால் அதில் 2 பேர்தான் பிராமணர் அல்லாதவர்கள் இருப்பார்கள். அந்த நிலை மாறியதற்கு தந்தை பெரியார், அண்ணா, அவர்களுக்கு முன்னால் இருந்த சர் பிட்டி தியாகராயர் உழைத்த உழைப்பால் நாம் இங்கு வந்திருக்கிறோம்.
நம்மை ஒழிக்க வேண்டும் என்று மேல்ஜாதிக்காரர்கள் வியூகம் வகுக்கிறார்கள். இந்த இயக்கத்தை கட்டிக்காப்பேன் என்று 50 ஆண்டுகள் காத்தவர் கலைஞர். அதை இப்போது தளபதி தாங்கிக் கொண்டிருக்கிறார்” என்று பேசிய துரைமுருகன் தொடர்ந்து…
“நமக்கு முன்னால் ஆட்சியில் இருந்தவர்கள் 7 லட்சம் கோடி கடன் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதற்கு நாம் வட்டி மட்டும் கட்டுகிறோம். நமக்கு இப்போதுதான் மழை வந்துள்ளது. நீர்வளம் வந்து நாடு செழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் ஆட்சிக்கு வந்ததும் முதியோர் பென்ஷன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நிதி இலாகாவில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் பலர் எங்கள் வழியில் நிற்கவில்லை. சில அதிகாரிகளுக்கு நாம் வந்ததே இன்னும் பிடிக்கவில்லை. அவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அந்த நிலையை எல்லாம் மாற்ற வேண்டும். பொங்கலுக்கு வழங்கிய பொருட்கள் சரியில்லை என்றார்கள்.
இந்த முறை வேறு மாதிரி செய்துள்ளோம். இந்தமுறை சேதாரம் இல்லாமல் ஒழுங்காக இருக்கும். ஒரு பிடிஓவிடமே நீங்கள் இவ்வளவு பாடு படுகிறீர்கள் என்றால் நாங்கள் எப்படி பாடுபடுவோம்? நீங்களும் நாங்களும் இல்லாமல் ஆட்சி இல்லை.
இந்த ஆட்சி வந்து ஒன்றரை வந்து ஆண்டாகிறது. அந்த லகான் எங்களிடம் சரியாக வரவி்ல்லை. ஆளுநர் வேறு லகானை பிடித்துக்கொண்டார். இல்லாவிட்டால் எவ்வளவோ செய்திருப்போம்” என்று ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரிகளால் ஏற்படும் சங்கடங்களை சில நாட்களுக்கு முன் அமைச்சர் நேரு பேசியதை போல வெளிப்படையாக பேசினார் துரைமுருகன்.
மேலும் துரைமுருகன், “பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் சில கட்டளைகளை இடுகிறேன். ஒவ்வொரு ஒன்றிய செயலாளர் ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிளை கழகத்துக்கும் போய் கூட்டத்தை நடத்தி ஆதாரத்துடன் வரவேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக மாற்றப்படுவார்கள்.
பூத் கமிட்டி டிசம்பர் மாதத்துக்குள் போட வேண்டும். யார் உழைக்கிறார்களோ அவர்களை பூத் கமிட்டியில் போடுங்கள். இதுவரை நம்முடைய எதிரி அதிமுகவை எதிர்த்தோம். இந்தமுறை நாம் ராட்சசனை பார்க்கப் போகிறோம். பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பிஜேபி.

பண பலம், அதிகார பலம் நம்முடன் சமபலத்துடன் போராடுவார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு பூத் கமிட்டியை ஜாக்கிரதையாக போட வேண்டும். நாம் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்தமுறை 40-க்கு 40 வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் நமக்கும் பயப்படுவார்கள். மத்திய அரசும் நம்மை பார்த்து பயப்படும்.
இந்த முறை நாம் பெரிய பணத் திமிங்கலத்தை எதிர்ப்பதால் யார் கூட்டணி என்பதை எல்லாம் தளபதி பார்த்துக்கொள்வார். என் அனுபவம், என் வயது தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை. ஆனால், என்னை மிஞ்சக்கூடிய அளவுக்கு அவரை என் தலைவர் வளர்த்து விட்டுள்ளார். என்னை வளர்த்த என் தலைவனின் மகனை என் தோளில் சுமப்பதில் எனக்கென்ன வெட்கம்’’ என்று கட்சி ஆட்சி கூட்டணி பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் துரைமுருகன்.
வேந்தன்
செந்தில் பாலாஜியை விமர்சிக்க தடை!
பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு ஒரே சீட்டு: புதிய ஏற்பாடு!