சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனை பிஜேபியில் சேருமாறு, அக்கட்சி மறைமுக அழைப்பு விடுத்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் நடைபெறும் விழாக்களில் தாம் புறக்கணிக்கப்படுவதாக அத்தொகுதி திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர், ஆகஸ்ட் 26ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்து ராஜ் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.
சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும். அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி.க்கு அழைப்பு கொடுக்க கூடாது.
அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இது, திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அப்பதிவை நீக்கிய எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம்” எனப் பதிவிட்டு, “சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும்.
சேலம் மாநகராட்சி கமிஷனர் சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்” என அதில் தெரிவித்திருந்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் , எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனிடமும், பனமரத்துப்பட்டி ராஜேந்திரனிடமும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அதன் பிறகே முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம் என்று பாசிட்டிவான பதிவை பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் எம்பியை மதிக்காத மாவட்டம்- எகிறிய ஸ்டாலின்: சேலத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தசூழலில், அரசு நிகழ்ச்சிகளின் புறக்கணிப்பால் திமுகவில் அதிருப்தியில் இருந்த எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனை, ’விரைவில் பாஜகவில் இணைய வாருங்கள்’ என பாஜக மாநில தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று (ஆகஸ்ட் 31) தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”சட்டுபுட்டுனு ஒரு நல்ல முடிவை எடுங்க எஸ்.ஆர்.பார்த்திபன். விரைவில் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
பிஜேபியில் சேர பேரம்: அதிரவைத்த டெல்லி துணை முதல்வர்!