BJP introduce ops as ADMK representative
அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசுவார் என்று இன்று (மார்ச் 19) பிரதமர் மோடியின் மேடையில் செய்யப்பட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகும்… ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவின் பெயர், லெட்டர் பேட், கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்தி வந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் இவற்றைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அதிமுகவின் கொடி, லெட்டர் பேட், இரட்டை இலை சின்னம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதன்பிறகு தொடர்ந்து தனி நீதிபதி சதீஷ்குமார் இந்த வழக்கினை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று (மார்ச் 18, 2024) உயர்நீதிமன்றம் அதிமுகவின் சின்னத்தையோ, கொடியையோ ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த மீண்டும் தடை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் செயல்பட தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கான சின்னமாக இரட்டை என்ற அடையாளத்துடனே இருக்க வேண்டும் என்று, தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது பயன்படுத்திய இரட்டை மின்கம்பம் சின்னத்தினை வலியுறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னம் கோரி ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரட்டை இலை தொடர்பான மனுவை தேர்தல் ஆணையம் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் 16 மார்ச் 2024 அன்று உத்தரவிட்டது.
தொடர்ந்து சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ் கலந்து கொண்டிருக்கிறார்.
அக்கூட்டத்தில் ஒவ்வொருவரையும் பேச அழைத்துக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்… ஓ.பன்னீர்செல்வத்தை உரையாற்ற அழைக்கும் போது, ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உரையாற்றுவார்” என்று அறிவித்தது பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
அப்படியென்றால் தேர்தல் ஆணையத்தின் மூலம் ஓபிஎஸ் க்கு சாதகமான முடிவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதற்கான முன்னோட்டம்தான் மோடி மேடையில் வெளியான இந்த அறிவிப்பா என்று அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுகின்றன.
அதிமுகவின் முடிவில் மாற்றம் இல்லையென்றால் இரட்டை இலை சின்னத்துக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று இன்று வரை பாஜக தரப்பிடம் இருந்து எடப்பாடிக்கு மிரட்டல்கள் சென்று கொண்டிருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–விவேகானந்தன்
ராஜ்யசபா சீட்டு எங்கே? கையெழுத்து போட மறுத்த ராமதாஸ்..தனி அறைக்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை
ஒரே மேடையில் இரு ஓபிசி தலைவர்கள் : பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு!
நழுவிச் சென்ற பாமக… நாட் ரீச்சபிள் தே.மு.தி.க…அதிமுக ஷாக்!
“சொந்த மக்களுக்குத் துரோகம்” : பாஜக -பாமக கூட்டணி குறித்து திருமா பேட்டி!