கேசிஆர் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குதிரை பேரம்: சிக்கிய கோடிகள்!

அரசியல்

தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரிடம் கட்சி மாற பேரம் பேசியதாக பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சில வாரங்கள் முன்பு பாரத் ராஷ்டிர சமிதி என கட்சியின் பெயரை மாற்றி தேசிய அரசியலில் சந்திர சேகர ராவ் களமிறங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்க சந்திர சேகர ராவ் முயற்சி செய்து வரும் நிலையில், அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. திட்டம் தீட்டியதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 103 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த அச்சம்பேட் எம்.எல்.ஏ. குவ்வல பால்ராஜ், தந்தூர் எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி, கொல்லப்பூர் எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ரெட்டி, பினபாகா எம்.எல்.ஏ. ரேக காந்த ராவ் ஆகியோரிடம் பா.ஜ.க. சார்பில் சிலர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சைபராபாத் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ரெய்டு நடத்திய சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரன் தலைமையிலான போலீசார், நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் பேரம் பேசப்பட்டதாகவும் பதவிகள் கொடுப்பதாக ஆசை காட்டியதாகவும் காவல் ஆணையர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக தேசிய துணை தலைவர் டி.கே. அருணா, இது முதலமைச்சர் சந்திர சேகர ராவின் மற்றொரு நாடகம் என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஏஜெண்ட்டுகள் என விமர்சித்துள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ரெட்டி, கைது செய்யப்பட்டவர்கள் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கர்நாடகா, கோவா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதன் மூலம் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் கூட பா.ஜ.க.வினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சித்ததாக அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது தெலங்கானாவில் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் ராஃபிக்

கோவை கார்வெடிப்பு: மவுனம் கலைத்த திமுக பாஜகவை விளாசிய முரசொலி

அம்பேத்கர் சிலை: திருமா கொடுக்க ஸ்டாலின் திறந்தார்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *