ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை எச்சரிக்கும் தொனியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இதுதொடர்பாக தமிழிசை இன்று (ஜூன் 13) விளக்கமளித்துள்ளார்.
தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழிசை அளித்துள்ள விளக்கத்தில், “ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக நேற்று சந்தித்தேன்.
மக்களவை தேர்தலுக்கு பிறகான பணிகள் மற்றும் தமிழகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார்.
நான் அமித்ஷாவிடம் இதுதொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள மிகுந்த அக்கறையுடன் அறிவுரை கூறினார். தேவையற்ற யூகங்களை பரப்புபவர்களுக்கு இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் பேசியபோது, “ அப்செட்டாக இருப்பதாக சொல்லப்பட்ட தமிழிசை, இன்று காலை முதல் ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் மகிழ்ச்சியான தருணங்கள் என குறிப்பிட்டு பகிர்ந்து வந்தார்.
இதற்கிடையே இன்று அவரிடம் சில பாஜக மேலிட புள்ளிகள் பேசியதாகவும், அப்போது தமிழ்நாடு பாஜகவில் நடப்பது குறித்து அவர் விளக்கமளித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து தான் அமித்ஷா தனக்கு அறிவுரை வழங்கியதாக தனது சமூக தள பக்கத்தில் விளக்கத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழிசையும் அண்ணாமலையும் இருதுருவங்களாக இருப்பதாக கட்சிக்குள் ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை காண்பிப்பதற்காக தமிழிசை, அண்ணாமலை இருவரையும் ஒருசேர பாஜக நிகழ்ச்சியில் நாளையே கலந்துகொள்ளுமாறு தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி இருவரும் இணைந்து பொது நிகழ்வில் பங்கேற்கலாம்” என்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமித்ஷா சொன்னது என்ன? தமிழிசை விளக்கம்!
போன் டேப் வழக்கு: சவுக்கு சங்கர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!