அரசியல் கோமாளி அண்ணாமலை: அமைச்சர் மனோ தங்கராஜ்

Published On:

| By Jegadeesh

பாஜக மகளிர் நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, கௌதமி, நமீதா மற்றும் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது புகார் எழுந்தது.

சைதை சாதிக்கை கைது செய்யக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (நவம்பர் 1 )பாஜக மகளிர்அணி சார்பில் நடந்த போராட்டத்தில்,

பாஜக மகளிர்அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திமுகதுணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம் போல காட்சியளிக்கிறது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று( நவம்பர் 2 ) கூறியுள்ளார்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆளுநர்கள் தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காக பாடுபட வேண்டும்.

ஆனால் அவர்கள் அதைச் செய்கிறார்களா என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு,

கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தண்டிக்கப்படாமல் விடுதலை ஆகி வந்தபோது வரவேற்பு அளித்த பாஜகவினர், பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியானவர்கள் அல்ல.

திமுகதுணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும் தங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம் போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உயிருக்கு போராடிய குழந்தை: தாய்ப்பால் கொடுத்துக் காத்த போலீஸ்

பேருந்து பயணத்தில் பேரிடர்: இன்ஸ்பெக்டர் செய்த இமாலய உதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share