பாஜகவினர் தங்களது வேட்பாளரை கடத்தி விட்டார்கள் என்று டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (நவம்பர் 16) குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
குஜராத் தேர்தலில் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. வழக்கமாக பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ளது. இதனால் குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தங்களது வேட்பாளரை நேற்று முதல் காணவில்லை என்று தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, “குஜராத் மாநிலம் கிழக்கு சூரத் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக கன்சன் ஜரிவாலா அறிவிக்கப்பட்டார். கன்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முதல் காணவில்லை. அவர் தனது வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய சென்றிருந்தார். வேட்புமனுக்களை பரிசீலித்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது, பாஜகவின் குண்டர்களால் கடத்தப்பட்டுள்ளார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
குஜராத் தேர்தலில் தோல்வியை கண்டு பயமடைந்த பாஜக, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியுள்ளது.
இது ஒரு வேட்பாளரை மட்டுமல்ல ஜனநாயகத்தையும் கடத்துவது போன்றதாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் மாநிலம் கிழக்கு சூரத் ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயன்றது.
ஆனால் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அவரது வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு பாஜக அழுத்தம் கொடுத்தது. அவர் கடத்தப்பட்டாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
செல்வம்
2023 ஐபிஎல் கோப்பை இலக்கு: சிஎஸ்கே-வின் முடிவு சரியா? தவறா?
உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மு.க.ஸ்டாலின்