ராஜன் குறை
பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகள் பரவலாகக் கூறப்படுவதால் பெரிய ஊழல்களைக் குறிப்பிட “இமாலய ஊழல்” என்பார்கள்; “மோசடிகளின் தாய்” என்பார்கள். இப்படியெல்லாம் எந்த வார்த்தைகளைச் சொல்லி பாரதீய ஜனதா கட்சி செய்துள்ள தேர்தல் பத்திர ஊழலை வர்ணிப்பது என்பதே சவாலாகத்தான் உள்ளது.
ஏனெனில், இந்த ஊழல் தனியாக சட்டமொன்றை இயற்றி அதன் அடிப்படையில் செய்யப்பட்ட ஊழல். உங்களுக்கு பட்டுக்கோட்டையார் பாட்டு ஒன்று நினைவில் இருக்கலாம். அதன் வரிகளில் “திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது; அதை சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது” என்ற வரிகள் வரும்.
அதாவது ஊழல் செய்ய, முறைகேடுகளைச் செய்ய திட்டம் போடுவார்கள்; அவற்றை தடுக்க அரசினர் சட்டம் போடுவார்கள். அதுதான் நடைமுறை. ஆனால், ஊழல் செய்வதற்காகவே ஆள்பவர்கள் சட்டம் போட்டால் அதை எப்படி, யார் தடுப்பது?
அப்படிச் சட்டம் போட்டு செய்த மாபெரும் ஊழல்தான் தேர்தல் பத்திர முறைகேடு என்பது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இப்போது தெளிவாக, வெளிப்படையாக உள்ளன. அதற்குக் காரணம் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தையே முறையற்றது என்று தீர்ப்பளித்துதான். இதன் பின்னணியை சற்றே விரிவாகப் புரிந்து கொள்வோம்.
அரசதிகாரமும், மூலதனக் குவிப்பும்
தொழில், வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் லாபம் ஈட்டுவார்கள். அவர்களது முன்முயற்சிக்கு, உழைப்புக்கு, அவர்கள் பொருள் இழப்பை சந்திக்கலாம் என்று தெரிந்தும், ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வதற்கு ஈடாக இந்த லாபமானது கருதப்படுகிறது. அவ்வாறு ஈட்டப்படும் லாபம் மீண்டும் முதலீடாவதால் அது பொருளாதார நடவடிக்கைகளைப் பெருக்கும் என்பதும் முதலீட்டிய நடைமுறை. மூலதன திரட்சி அல்லது குவிப்பு.
இந்த லாபத்தில் உழைக்கும் மக்களுக்கும், பொருட்களை வாங்கி நுகரும் மக்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது வெளிப்படையானது. அவர்களால் உருவாவதுதான் லாபம்.
அதாவது இடுபொருட்கள், உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாகும் பொருளின் மதிப்பு நூறு ரூபாய் என்றால், அதை வாங்குபவர் சந்தையில் இருநூறு ரூபாய் கொடுப்பார். அந்த கூடுதல் நூறு ரூபாய் உற்பத்தி செய்யும் முதலாளி/நிறுவனம், வர்த்தகரின் லாபம்.
சரியாகச் சொன்னால் உழைப்பவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும், நுகர்வாளர்களுக்கு பொருட்கள் கொடுக்கப்பட்டாலும் இந்த இருவருக்கும் இடையே இயங்கும் முதலீட்டாளர்கள் தங்களுக்கென எடுத்துக்கொள்வதுதான் லாபம். அது அவர்கள் பணிக்கான ஊதியம் மட்டுமல்ல. அந்த லாபம் உபரியாக, முதலாளிகளின், நிறுவனங்களின் சொத்தாக மாறுகிறது. மீண்டும் முதலீடாகி மூலதனத் திரட்சியாகிறது.
பல திரைப்படங்களில் கதாநாயகன் சிறியதாக தொழில் தொடங்கி, ஒரு பாடல் காட்சி முடிவதற்குள் பெரும் பணக்காரனாக மாறி சொகுசு காரில் வந்திறங்குவதைப் பார்த்திருப்போம். இதில் கதாநாயகனின் ஆளுமைத்திறனுக்கு பங்கிருந்தாலும், அது உழைப்புக்கும், நுகர்வுக்கும் இடையே அவன் அமைத்த இணைப்பில் கிடைத்த உபரிதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுருங்கச்சொன்னால் அந்த உபரி பணமான லாபம் அந்த தனி நபருக்கும், அதே சமயம் சமூகத்துக்கும் உரியது எனலாம்.
இதனால் பொதுவாகவே பொது நல செயல்பாடுகளுக்கு முதலாளிகள், வர்த்தகர்கள் நன்கொடை அளிப்பது வழக்கம். ஒரு கோயில் கட்டினால், கும்பாபிஷேகம் என்றால் நன்கொடை வசூலிப்பார்கள். அதற்கு முதலாளிகள், வர்த்தகர்கள் நன்கொடை அளிப்பார்கள்.
அதே போலத்தான் அரசியல் கட்சிகளும். அரசியல் கட்சிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக அமைபவை. அவைதான் தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சி அமைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை, நிர்வாகத்தைப் பராமரிக்க வேண்டும். தொழில், வர்த்தகம் போன்றவை சரியாக இயங்க வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு, நாட்டின் நிதி நிர்வாகம் போன்றவை சரியாக இருக்க வேண்டும்.
எனவே, மற்ற பொது நல நடவடிக்கைகள் போலன்றி, அரசியல் கட்சிகள் என்பவை தொழில், வர்த்தக சக்திகளின் ஆதாரமான பங்குதாரர்கள். அரசியல் கட்சிகளை முதலாளிகள் ஆதரித்தே தீர வேண்டும். அரசு மற்றும் நிதி நிர்வாகம் சரிவர இயங்காமல் தொழில் வர்த்தக வளர்ச்சியோ, லாபமோ சாத்தியமே இல்லை. மக்களாட்சி என்ற புதிய ஆட்சி முறையே பூர்ஷ்வா எனப்படும் முதலாளி வர்க்கம் தோன்றிய பிறகு அவர்கள் முன்னெடுப்பில் உருவானதுதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். கூடவே பொருளாதார வளர்ச்சியை, தொழில் வர்த்தக முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
பல நேரங்களில் முதலாளி வர்க்க நலன்களுக்கும், வெகுஜன நலன்களுக்கும் முரண்பாடுகள் நிறைய இருக்கும். யாருக்கு அதிகம் வரி விதிப்பது, யாருக்கு சலுகை கொடுப்பது என்பதிலிருந்து பல்வேறு கேள்விகள் எழும். சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஒருமுறை கூறியபடி “அரசியல் என்பது முரண்பாடுகளை சமன் செய்யும் கலை” என்ற புரிதலே சரியானது.
அதிகாரப் போட்டியும், ஊழலும்
ஒவ்வோர் அரசியல் கட்சியும், அரசியல்வாதியும் தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைக்கும்போது அவர்களுக்கு பணபலம் தேவைப்படும். அதை அவர்கள் லாபம் ஈட்டும் தொழில் வர்த்தக முதலாளிகளிடம்தான் பெற முடியும். முதலாளிகளுக்குத் தேவையான சலுகைகளைச் செய்யும்போது அல்லது வாய்ப்புகளைத் தரும்போது அவர்கள் கட்சிகளுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ பண பலத்தைக் கொடுப்பார்கள்.
இப்படி அரசியல் அதிகாரத்தினை பணபலமாக மாற்றிக் கொள்வதை பொருளாதார ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் (ரெண்ட் சீக்கிங் – Rent seeking), அதாவது அரசியலார் வசூலிக்கும் குடக்கூலி அல்லது வாடகை என்று கூறுவார்கள்.
வேறொரு நாசூக்கான இலத்தீன் மொழி வாசகம் குவிட் புரோ க்வோ (Quid pro quo). அதாவது ஒருவருக்கொருவர் சகாயம் செய்து கொள்வது. ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது. இது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் சங்கதிதான் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இதில் ஊழல் என்ற குற்றச்சாட்டு எப்படி வருகிறது என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகள் அதிகாரப் போட்டியில் அதிக பணபலத்தைப் பெற மக்கள் நலன்களுக்குப் புறம்பாக முடிவுகள் எடுப்பது, முதலாளிகளுக்கு இடையேயுள்ள போட்டியில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஒரு சிலருக்கு உதவி செய்து ஆதாயம் பெறுவது ஆகியவை ஊழலாக கருதப்படுகின்றன.
அதாவது, வெளிப்படையாக நன்கொடையாகத் தருவது தவிர, சில குறிப்பிட்ட உதவிகளை அரசிடமிருந்து பெற ரகசியமான பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவது ஊழல் எனலாம். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பெறுவது. இந்தப் பணத்தை தனிப்பட்ட அரசியல்வாதி கையாண்டாலும், கட்சி கையாண்டாலும் அதை அரசியல் பணம் (Political money) என்று அழைப்பது உண்டு.
இப்படியான ஊழல் காரணமாக தவறான ஒப்பந்தங்கள் தரப்பட்டு தரமற்ற கட்டுமானம், சேவைகள் ஆகியவை உருவாக காரணமாகும்போது மக்களை உடனடியாக, நேரடியாக பாதிக்கும். குஜராத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து மக்கள் மாண்டதைப் போல கோரமான பாதிப்புகள் நிகழும்.
பல நேரங்களில் பாதிப்புகள் அப்படிக் கண்ணுக்குத் தெரியும்படி இருக்காது. பொருளாதார வளர்ச்சியினை, குறிப்பாக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய உபரியினை பாதிப்பதாக இருக்கும்போது அது பொதுவான பிரச்சினையாகப் பார்க்கப்படுமே தவிர அரசியலாளர்கள், முதலாளிகளின் கூட்டணியால் விளைந்ததாகப் புரிந்துகொள்ளப்படாது. இதை ஈடுகட்ட முற்போக்கான அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்கின்றன.
மன்மோகன் சிங் ஆட்சியும், ஊழல் எதிர்ப்புப் புரளியும்
இந்தியாவின் பெருமுதலாளிகள் பெரும்பாலோர் குஜராத்தி பனியாக்கள் மற்றும் மார்வாரிகள் ஆகிய மக்கள் தொகுதிகளிலிருந்தே உருவானார்கள். இவர்களில் பலர் காங்கிரஸ் கட்சிக்கும், அதே சமயம் இந்துத்துவ சக்திகளுக்கும் நெருக்கமாக இருந்தார்கள். காங்கிரஸ் ஆட்சி செய்த வரை அவர்கள் காங்கிரஸுக்கு அணுக்கமாக இருந்தார்கள்.
பின்னர் பாரதீய ஜனதா கட்சி முக்கியத்துவம் பெறத் தொடங்கியபோது அதை ஆதரித்தார்கள். வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் பாஜக அமைச்சர் பிரமோத் மகாஜன் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியை தன்னுடைய தந்தையைப் போன்றவர் என்று ஒரு பொது நிகழ்ச்சியில் பாசம் பொங்க வர்ணித்தார்.
இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தது 2004 முதல் 2014 வரை நடந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance) ஆட்சியே என்பதை பொருளாதார வல்லுநர்களும், பாமர மக்களும் கூட கூறுவதைப் பார்க்கலாம்.
ஆனால், அதற்கு முன் ஆட்சி செய்து வாய்ப்பை இழந்த பாஜக வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துடித்தது. இந்தியாவின் உயர்ஜாதி அதிகார வட்டங்களில் செல்வாக்குள்ள இந்துத்துவ கருத்தியல் அவர்களின் ஆதார விசையாக இருந்தது.
அதன் மூலம் மன்மோகன் சிங் ஆட்சியின் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். நாடே ஊழலால் சீர்கெட்டுப் போவதாக பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். அண்ணா ஹசாரே என்ற பொது நல ஆர்வலர் தலைமையில் டெல்லியில் பெரும் ஊழல் எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்தப்பட்டது.
நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி 2014ஆம் ஆண்டு அமைய இந்த ஊழல் பற்றிய பெரும் புரளியே காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. ஏனெனில் மன்மோகன் சிங் ஆட்சியில் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற முற்போக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சியும், நிதி நிர்வாகமும் சிறப்பாகவே இருந்தன. கடந்த பத்தாண்டுகளில் அந்த ஆட்சி மீது சுமத்தப்பட்ட எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப் படவில்லை.
சட்டம் போட்டு ஊழலை நியாயமாக்கிய பாஜக ஆட்சி
மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக முழுக்க முழுக்க பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இயங்கத் தொடங்கியது. குஜராத்தில் முதல்வராக இருந்தபோதிலிருந்தே மோடிக்கு நெருக்கமானவராக இருந்த கெளதம் அதானியின் நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்றும் மதிப்பிடப்படும் அளவு அவர் வளர்க்கப்பட்டார். இந்த வளர்ச்சி தொடர்பான ஏராளமான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் எழுப்பப்பட்டுள்ளன.
இது போதாதென்றுதான் மற்றொரு நூதனமான சட்டத்தை பாஜக உருவாக்கியது. அதுதான் தேர்தல் பத்திரங்கள் வழங்கும் திட்டம். இதன்படி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் தேர்தல் பத்திரங்களை விற்பனைக்கு அறிவிக்கும். அந்தப் பத்திரங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் நன்கொடையாகத் தரலாம். அந்தக் கட்சி, அந்தப் பத்திரங்களை காசாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் யார் எந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்பது வங்கியைத் தவிர யாருக்கும் தெரியாது.
அதாவது, ஒரு கட்சிக்கு பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் வந்தது என்பது பொதுவெளியில் தெரியும். எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவலைக் கூட அறிந்துகொள்ள முடியும். ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை கொடுத்தது என்பதை அரசு வங்கியான ஸ்டேட் பேங்க், அதை நிர்வகிக்கும் நிதித்துறையைத் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பாஜக ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகப் பெற்றது. மற்ற கட்சிகளெல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூட அவ்வளவு பெறவில்லை.சரி, ஆளும்கட்சிக்கு அதிக பணம் கிடைப்பது இயல்புதானே என்றாலும், யார் எதற்குக் கொடுத்தார்கள் என்பது புதிராகவே இருந்தது.
இந்த நிலையில்தான் ஒரு பொது நல வழக்காக இந்தச் சட்டத்தை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, எனவே செல்லாது என்று அறிவித்தது. அத்துடன் யார், யார் பத்திரங்களை வாங்கினார்கள், எந்தக் கட்சி அவற்றை காசாக்கியது என்று தகவல்களை ஸ்டேட் பாங்கை வெளியிடச் சொன்னது. வங்கி தாமதம் செய்ய பார்த்தது, அரைகுறை தகவல்களை தந்தது. உச்ச நீதிமன்றம் விடாமல் கடிந்துகொண்டு அனைத்து விவரங்களையும் வெளியிட வைத்தது.
அதன் விளைவாக இப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, பாஜக-வுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான அரசுப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது, அரசின் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிறுவனங்கள் உடனே தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை அளித்துள்ளன. பல அநாமேதயமான கம்பெனிகள் அவர்கள் அறியப்பட்ட தொழில் வர்த்தகத்தைவிட மிக அதிகமான அளவில் நன்கொடைகள் தந்துள்ளன. அநேகமாக அவை வேறு முக்கிய நிறுவனங்களின் பினாமியாக நன்கொடை தந்துள்ளன.
சுருங்கச் சொன்னால் கறுப்புப் பணமாக வாங்கி, பிற கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதைப் பார்த்த பாஜக, அதையே சட்டபூர்வமாக வாங்குவதற்கு உருவாக்கிய சட்டம்தான் தேர்தல் பத்திர விற்பனை சட்டம். இந்தச் சட்டம் யார், யாருக்குக் கொடுத்தார்கள் என்பதை ரகசியமாக வைக்க வகை செய்ததால் எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழுவதற்கே வாய்ப்பிருக்கவில்லை.
ஆனால், உச்ச நீதிமன்றம் இடையில் புகுந்து எல்லா விவரங்களையும் வெளிக்கொண்டுவந்து விட்டது. அந்த விவரங்களை விரிவாக ஆராயும்போது பாஜக அரசு தன் அதிகாரத்தை பல வகைகளில் பயன்படுத்தி கட்சிக்கு நன்கொடை சேர்ந்திருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இதில் முத்தாய்ப்பான நகைச்சுவை என்னவென்றால், தான் தேர்தலில் போட்டியிடாததற்குக் காரணம் தன்னிடம் பணம் இல்லாததுதான் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதுதான். வசூலித்த ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர் தேர்தல் செலவுக்கு கட்சி பணம் தராதா என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி
CSKvsDC : டெல்லிக்கு முதல் வெற்றி… தோற்றாலும் தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!
மக்களவை தேர்தல்: இந்திய எல்லையில் அதிகரிக்கும் ஊடுருவல்!
பலாப்பழத்த பிதுக்கிட்டாங்களே : அப்டேட் குமாரு