பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு ஊழியர்கள்!

அரசியல்

தேசிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கக் கோரி பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று மத்திய ஊழியர்கள் சங்கம் கேபினேட் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஓபிஎஸ்) நிறுத்த முடிவு செய்து தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) என்ற முறையை அறிமுகப்படுத்தியது.

2004ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியில் (ஆயுதப் படைகள் தவிர) சேரும் அனைத்துப் புதிய பணியாளர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கம் தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு ஓபிஎஸ் திட்டத்தை மீட்டெடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்பதை முக்கிய வாக்குறுதிகளாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாத கணக்கீட்டின் படி, இதுவரை என்பிஎஸ் திட்டத்தின் கீழ் 22.74 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.44 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

என்பிஎஸ் ஒரு பேரழிவு திட்டம்!

இந்நிலையில் குரூப் பி மற்றும் குரூப் சி அதிகாரிகளை உள்ளடக்கிய மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்குமாறும், தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பேரழிவு என்றும் கேபினட் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ”தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) வயதான காலத்தில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது. 13 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி, ஓபிஎஸ் இன் கீழ் பெறக்கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் 15% மட்டுமே பெறுவார்.

bjp govt should abolish nps scheme

அதன்படி ரூ.30,500 அடிப்படை ஊதியம் பெற்ற அதிகாரி, ஓபிஎஸ்-ன் கீழ் அவருக்கு வழங்கப்படும் ரூ.15,250 ஓய்வூதியத்திற்கு பதிலாக என்பிஎஸ்ன் கீழ் ரூ.2,417 மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவார்.

என்பிஎஸ் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்தில் 10% பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. துணை ராணுவப் பணியாளர்கள் உட்பட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் “உத்தரவாத NPS” யை எதிர்ப்பதால் அதனை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை கோருகிறோம்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்பிஎஸ் : ஒரு அட்டூழியம்!

இதுகுறித்து தேசிய கவுன்சில் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ”என்பிஎஸ் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிறது. 01/01/2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் தற்போது சேவையிலிருந்து ஓய்வுபெறத் தொடங்கியுள்ளனர்.

என்.பி.எஸ்-ல் இருந்து ஓய்வூதியமாகப் பெறும் சொற்பத் தொகையில் இருந்து, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முதுமைக் காலத்தில் பேரிழப்பு என்பது நிரூபணமாகி உள்ளது. அது வெற்றிகரமான சூழ்நிலை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

”ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரூ.1,800 ஓய்வூதியத்தில் எவ்வாறு தங்கள் குடும்பத்தை நடத்த முடியும்?” என்று மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அட்டூழியம். அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் கூட்டமைப்பு மிகப்பெரும் போராட்டம் நடத்துவதற்கு தயாராகி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லுமா? – உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *