bjp govt made dollar city into dull city

டல் சிட்டியாக மாறிய டாலர் சிட்டி: முதல்வர் ஆவேசம்!

அரசியல்

”திறனற்ற மத்திய பாஜக ஆட்சியால் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் டல் சிட்டியாக மாறிவிட்டது. மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது. தமிழ்நாட்டில் பாஜகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் சிறிது ஓய்வெடுத்தார்.

பின்னர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் சந்தித்துக் கொண்ட ஊர் திருப்பூர். திருப்பூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கியவர் கருணாநிதி.

திருப்பூர் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஆனால் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் திறனற்ற மத்திய பாஜக ஆட்சியால் டல் சிட்டியாக மாறிவிட்டது.

வெற்றிக்கு முகவர்களே பொறுப்பு!

நாம் மார்ச் 22ஆம் தேதியில் இருந்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். மக்களுக்கு என்ன தேவையோ அதை தெரிந்துகொண்டு நிறைவேற்ற வேண்டும். திமுக அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியதே வாக்குச்சாவடி முகவர்களாகிய உங்களின் முதல் கடமை. வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

வாக்குச்சாவடி முகவர்கள் மீது நம்பிக்கை வைத்தே தேர்தலில் 40க்கு 40 வெற்றி என கூறி வருகிறேன். வெற்றி மட்டுமே நமது இலக்கு.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

வாக்குச்சாவடி முகவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நிர்வாகிகள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பூத் கமிட்டி முகவர்கள் என்னிடம் நேரடியாக புகார் செய்யலாம். நான் நடவடிக்கை எடுப்பேன்.

உரிமைத்தொகையை கொள்ளையடிக்கும் மத்திய அரசு!

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமை தொகையை வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என கூறி கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று கூறி ஏமாற்றியவர் பிரதமர் மோடி. நம்முடைய இளைஞர்களை எல்லாம் பக்கோடா விற்க சொல்கிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, தவறான பொருளாதார கொள்கையினால் திருப்பூர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக காணாமல் போய்விடும்!

அதிமுகவை பயமுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. அதிமுக – பாஜக சண்டை போடுவதாக நடிக்கின்றன. அதிமுகவை ஆதரித்தால் அவர்களின் ஊழலுக்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டி வரும். சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும்.

மூன்றாவது முறை பாஜக ஆட்சிக்கு வராது!

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக, 3வது முறையாக ஆட்சிக்கு வராது. தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்க முடியாது. தமிழகத்தில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. கவலையின்றி மக்களை சந்தியுங்கள். யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை வந்த வந்தே பாரத்: தமிழக அமைச்சருக்கு கேக் ஊட்டிய ஆளுநர்!

சாதனை நிகழ்த்திய ரவுடி பேபி!

வேலைவாய்ப்பு : ரூ.1,30,800 ஊதியத்தில் அரசு வேலை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *