ஹரியானா ஆட்சிக்கு ஆபத்தா? – ஓரணியில் எதிர்க்கட்சிகள்… தடுமாறும் பாஜக!

அரசியல்

ஹரியானா மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக் ஜனதா கட்சி 10, சுயேட்சைகள் 7, ஹரியானா லோக் நிதி 1, தேசிய லோக் தள் கட்சி 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றனர்.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆட்சியமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தலுக்கு பிறகு ஜனநாயக் ஜனதா மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஜனநாயக் ஜனதா, பாஜக இடையே இழுபறி நீடித்ததால், பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா விலகியது.

இதனை தொடர்ந்து ஹரியானா முதல்வர் பதவியிலிருந்து மனோகர் லால் கட்டார் விலகினார். இதனையடுத்து புதிய முதல்வராக நயப் சிங் சாய்னி பதவியேற்றார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் முதல்வர் மனோர்லால் கட்டார் மற்றும், பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேட்சை வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன்காரணமாக, ஹரியானா சட்டப்பேரவை தொகுதியின் மொத்த பலம் தற்போது 88-ஆக உள்ளது.

இந்தசூழலில் தான் சுயேட்சை வேட்பாளர்கள் ரந்திர் சிங் செளதாலா (புண்ட்ரி), சோம்பிர் சங்வான் (தாத்ரி), தரம்பால் கொண்டேர் (நிலோகேரி ஆகியோர் பாஜவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் கடந்த மே 7-ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதனால் பாஜக பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இன்றோ, நாளையோ அவர் எப்போது நேரம் ஒதுக்குகிறாரோ அப்போது ராஜ் பவனுக்கு சென்று அவரை சந்திக்க உள்ளோம். பாஜக அரசை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி அவரிடம் வலியுறுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதேபோல ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஹரியானாவில் நிகழும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் உங்கள் அரசியலமைப்பு சிறப்புரிமையை பயன்படுத்தி பாஜக அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் காங்கிரசுக்கு ஆதரவளிப்போம்.

இதற்கான வேலைகளை காங்கிரஸ் தொடங்க வேண்டும். மேலும், மற்ற எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களும் ஆளுநருக்கு கடிதம் எழுத வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹரியானா கணக்கு!

கடந்த மார்ச் மாதம் ஜனநாயக் ஜனதா கட்சி உடனான கூட்டணி முறிவுக்கு பிறகு, சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் பாஜக புதிய முதல்வராக நயிப் சிங் சைனி பொறுப்பேற்றார்.

அதன்படி பாஜக 40, சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 6, ஹரியானா லோக்நிதி கட்சி எம்எல்ஏ 1 என மொத்தம் 47 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தொடர்ந்தது. பின்னர் சுயேட்சை எம்எல்ஏ-வாக இருந்த ரஞ்சித் சவுதாலா பாஜகவுடன் இணைந்ததால், பாஜக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்தது.

இந்தசூழலில் தான் பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-வாக இருந்து பாஜகவில் சேர்ந்த ரஞ்சித் சவுதாலா ஆகியோர் லோக் சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன்காரணமாக தற்போதைய பாஜக எம்எல்ஏ-க்களின் பலம் 39-ஆக உள்ளது.

மேலும், பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த மூன்று சுயேட்சை எம்எல்ஏ-க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் பாஜக கூட்டணியின் பலம் 42-ஆக குறைந்துள்ளது. ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான பலம் 45 ஆகும்.

“ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால், ஜனநாயக் ஜனதா கட்சியின் 4 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுடைய ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரும்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிமையாக வென்று விடலாம் என்று பாஜக நம்புகிறது.

இந்தியா முழுவதும் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில், பாஜக ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், ஹரியானாவில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது நாடாளுமன்ற தேர்தல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “ஹரியானா ஆட்சிக்கு ஆபத்தா? – ஓரணியில் எதிர்க்கட்சிகள்… தடுமாறும் பாஜக!

  1. தன் வினை தன்னை சுடும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *