நாம் பெற்ற உரிமைகளை பாஜக அரசு சீரழித்துவிட்டது : சோனியா காந்தி
இந்தியா கூட்டணி மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (அக்டோபர் 14) மாலை திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “மாநில, மொழி, சாதி, மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு எல்லோரையும் சமத்துவமாக பார்த்தவர் கலைஞர். பாலின சமுத்துவத்துக்காக போராடியவர்.
இந்தியாவில் பெண்கள் மிக மகத்தான சாதனைகளை செய்திருக்கிறார்கள். மரபுவ்ழி சமூகம், ஆணாதிக்க சமூகம், கலாச்சாரம் என்கிற தடைகளை மீறி சாதனைகளை செய்திருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் ஏற்ற இறக்கங்களை கண்டிருக்கிறார்கள்.
இன்று அறிவியல் முதல் விளையாட்டு வரை அனைத்து துறைகளிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் இந்த போராட்டம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடைகளை தாண்ட வேண்டும்.
ஒரு ஆணை படிக்க வைத்தால் தனிநபரை மட்டுமே படிக்க வைக்கிறாய் என்று பொருள். பெண்ணுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்றுத் தரப்படுகிறது என்று பொருள். இந்திரா காந்தியின் தலைமைத்துவம், ஆற்றல், வழிகாட்டுதல் ஆகியவை ஒரு பெண் எப்படி தலைமை ஏற்று செயல்பட முடியும் என்பதற்கான உதாரணம்.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். இதுதான் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு முன்னெடுப்பாக உள்ளது.
அதேபோல யுபிஏ ஆட்சியில் பெண்கள் உரிமை சார்ந்து பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 2010ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது இந்த சட்டம் நிறைவேறியிருக்கிறது என்றாலும் இதற்காக நாம் கொடுத்த அழுத்தமும், முயற்சியும் அதிகம். ஆனால் இந்த சட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற தெளிவு இல்லை.
இந்த ஆண்டா, அடுத்த ஆண்டா என எப்போது அமலுக்கு வரும் என்று தெரியாத நிலை இருக்கிறது. நாளை இந்தியா கூட்டணி வந்துதான் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டிய சூழல் இருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையில் 4ல் ஒருவர் பெண்களாக இருக்கிறார்கள். இது பெருமைப்படக்கூடிய செயல். இதற்கு காரணம் கலைஞர் கருணாநிதி. அவர் செய்த முக்கியமான மற்றொரு சீர்திருத்தம் என்வென்றால் அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு.
அதன் விளைவாக அரசுப் பணிகளில் 30 சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். தற்போது ஸ்டாலின் ஆட்சியில், இந்த 30 சதவிகிதம் 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மகளிருக்காக தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்துவதால் தான் தாய் சேய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே இங்கு குறைவாக இருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளில் நாம் பெற்ற அனைத்து உரிமைகளையும் கடந்த 9 ஆண்டுகளாக சீரழித்து வருகின்றனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாம் கூட்டியுள்ள இந்தியா கூட்டணி பெண்களுக்கு உண்மையாகவே ஒரு சமத்துவ உலகை உருவாக்கி கொடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியா கூட்டணி மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிச்சயம் நிறைவேற்றும். நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம். இதுதான் நமது இலக்கு. எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார் : தமிழில் பேசிய பிரியங்கா
திரைப்பட விழாவில் ரிலீசாகும் ஜோதிகாவின் ‘காதல் – The Core’!