”நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடர்ந்து மாணவர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பாஜக அரசு புறக்கணித்து வருவது ஏன்?” என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
எனினும் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சக மாணவர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் மாணவர்களிடையே சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் முன் மாணவர்களிடையே எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இதுவரை மாணவர்கள் எழுப்பி வரும் கேள்விகளை ‘வெறும் வதந்தி’ என்று கூறி, தேசிய தேர்வு முகமை விரிவான விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறது.
இதற்கிடையே மே 5ஆம் தேதி நடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் இன்று ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக அரசின் இந்த அலட்சிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர், ”கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது, தற்போது நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருவது, நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது உள்ளிட்ட கேள்விகள் நீட் தேர்வில் பலவிதமான முறைகேடுகள் நடந்திருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது,
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது வருத்தமளிக்கிறது.
லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?
நீட் தேர்வு முடிவுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்
நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரித்து தீர்வு காண்பது பாஜக அரசின் பொறுப்பு” என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…