நெருங்கும் தேர்தல்: பணம் திரட்ட பாஜக போட்ட புது உத்தரவு!

அரசியல்

மத்திய அரசால் தேர்தல் பத்திரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்த அரசாணை கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டப்பேரவை தேர்தல்களின் போது தேர்தல் பத்திரங்களை விற்பதற்கு கூடுதலாக 15 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் கூடுதலாக 30 நாட்கள் மட்டுமே கால அவகாசம் மத்திய அரசால் வழங்கப்பட்டு இருந்தது.

2022 ஆம் ஆண்டின், தேர்தல் பத்திரத் திருத்தத் திட்டத்தின்படி, மாநிலத் தேர்தல்கள் நடக்கும் ஆண்டுகளில் கூடுதலாக 15 நாட்கள் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சில நாட்களுக்கு முன் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது பலரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

23வது தவணை!

அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, மத்திய அரசு, பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் இருந்து 23வது தவணையின் கீழ் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதாகவும் அறிவித்தது.

வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகள் மூலம் நவம்பர் 9 முதல் நவம்பர் 15, 2022 வரை பத்திரங்கள் விற்பனை நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு பெயரை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்கும் ஒரு வட்டி இல்லாத பத்திர திட்டமாகும். மேலும் அந்த பத்திரத்தில் நன்கொடையாளர் பெயர் பற்றிய எந்த தகவலும் இருக்காது. எனவே, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு யாரிடம் இருந்து நன்கொடை பெற்றோம் என்பது தெரியாது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கும் பெற முடியும். இந்த பத்திரங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என விற்கப்படுகின்றன.

மேலும் அவற்றை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆகும். இந்தப் பத்திரங்களை எஸ்பிஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், ஒரு தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்பு ஒன்றால் வாங்க முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் உள்ள பத்திரங்கள் பொதுவாக ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் என ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்குக் கிடைக்கும். வங்கி மூலமாகவே அதை அவர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்.

இதுவரை பெற்ற நன்கொடை தொகை!

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை பத்திரங்களின் வெளிப்படைத்தன்மைக்காக கடந்த 2017ம் ஆண்டு இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை 90 சதவீத நிதியை நன்கொடையாக வசூலித்துள்ளன.

கடந்த 2019-20ஆம் ஆண்டில், பாஜகதான் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களின் மூலம் 75 சதவீதம் அளவிற்கு நன்கொடை பெற்று இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2018ஆம் ஆண்டு முதல் 22 கட்டங்களாக இதுவரை பல்வேறு தரப்பு நன்கொடையாளர்களிடம் இருந்து கட்சிகள் வசூலித்த மொத்தத் தொகை ரூ.10,791 கோடியாக உள்ளது.

இமாச்சல், குஜராத் தேர்தலை முன்னிட்டு…

25 கட்சிகள் தேர்தல் பத்திரங்களை விற்பதற்கு தங்களது கணக்குகளை பதிவு செய்து கொண்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து அக்டோபர் 29ஆம் தேதி வரை மத்திய அரசு 1000 தேர்தல் பத்திரங்களை ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அச்சிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் 12ம் தேதி இமாச்சலப் பிரதேசத்திலும் மற்றும் அடுத்த மாதம் குஜராத்திலும் சட்டபேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள உள்ளன.

இதனை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 10ஆம் தேதி வரை பெயர் வெளியிடாமல் நடத்தப்பட்ட 22வது தேர்தல் பத்திர விற்பனை மூலம் அரசியல் கட்சிகள் 545 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடை பெற்று இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

லோகேஷ் கே பத்ரா என்பவர் இதுகுறித்த தகவல்களைக் கேட்டு ஆர்டிஐ-யில் விண்ணப்பித்து இருந்தார். இதன் மூலம் கிடைத்த தகவலின்படி, பல்வேறு கட்சிகள் 738 தேர்தல் பத்திரங்கள் மூலம் 542.25 கோடி ரூபாய் நன்கொடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிதியை இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வசூலித்து இருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டில் 1056.73 கோடிக்கும், 2019ஆம் ஆண்டில் 5071.99 கோடிக்கும், 2020ஆம் ஆண்டில் 363.96 கோடிக்கும், 2021ஆம் ஆண்டில் 1502.29 கோடிக்கும், 2022 ஆம் ஆண்டில் 2,797 கோடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.

வழக்கில் தேர்தல் பத்திரம்!

இத்திட்டத்தின் மூலம் அதிக சதவீத நிதி ஆளும் பாஜகவுக்கு சென்று வருவதால் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் பெயர் வெளியிடப்படாமல் தேர்தல் பத்திரங்கள் வெளியிட்டு நன்கொடை பெறலாம் என்ற 2017ஆம் ஆண்டின் நிதித்துவ சட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் சிபிஐ (மார்க்சிஸ்ட்) சார்பில்5 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் ஆண்டுகளில் கூடுதலாக 15 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது எதிர்கட்சிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பிரியாணி சண்டை : கணவரும் உயிரிழப்பு!

T20 WorldCup 2022: முதல் அரையிறுதியில் முத்திரை பதிக்க போவது யார்?

+1
1
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *