“மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அதே வேளையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதோடு, ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக அண்மையில் செய்திகள் பரவின.
ஆனால் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆனால், ராமர் கோயில் விஷயத்தில் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,
“மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன்.
பாஜக, நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பது கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஜிவி பிரகாஷை இயக்கும் யூடியூப் பிரபலம்!