7 மணி நேரம்… 110 கேள்விகள்!  ஆருத்ரா கோல்டு விசாரணையில் ‘தண்ணி குடித்த’ ஆர்.கே. சுரேஷ்- வெளிவராத முழு விவரங்கள்!

Published On:

| By Aara

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 110 கேள்வி கேட்டு நேற்று (டிசம்பர் 12) ஏழு மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். இன்றும் விசாரணை தொடர்கிறது.

சர்ச்சை என்ன?

ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் வட்டி தருவதாக கவர்ச்சியான விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்தின் மூலம் முதலீட்டாளர்களிடம் சுமார் 2400  கோடி  வரை மோசடி செய்ததாக சர்ச்சை வெடித்தது. இதில் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை செய்வதற்கு தேடி வந்தனர். ஆர்.கே. சுரேஷ் தமிழக பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவராகவும் இருப்பதால் ஆருத்ரா கோல்டு மோசடி சர்ச்சைக்கு அரசியல் பின்னணியும் பலமாக பேசப்பட்டது.

Image

சுரேஷ் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். சம்மனும் பிறப்பித்தனர் என்று தகவல்கள் வந்தன.  இதற்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
‘என் மனைவி துபாயில் மருத்துவமனையில் இருப்பதால் மனைவியையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள துபாய் வந்துள்ளேன்’ என்று கூறி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரினார். உயர் நீதிமன்றமும் அந்த நோட்டீசை நிறுத்தி வைத்தது.

ஆஜரான ஆர்.கே.சுரேஷ் ஆன் செய்யப்பட்ட வீடியோ கேமரா

இந்த நிலையில் டிசம்பர் 10 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஆர். கே .சுரேஷை விசாரணைக்கு அழைத்தனர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்.
அதன் அடிப்படையில் நேற்று டிசம்பர் 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அசோக்நகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி முன்பு ஆஜரானார் ஆர்.கே சுரேஷ்.

Image

அவர் விசாரணைக்கு வரும்போதே வீடியோ கேமராவை ஆன் செய்துவிட்டனர் அதிகாரிகள். அவரை இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி. வரவேற்றனர், வீடியோ கேமரா ஓடிக்கொண்டே இருந்தது.

’ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரிக்க சம்மன் அனுப்பி வரவழைத்துள்ளோம்’

“அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேனே?’

“அது இருக்கட்டும் உங்களிடம் சில தகவல்கள் கேட்கதான் அழைத்துள்ளோம், எங்களுக்கு நீங்கள் கோ ஆபரேட் பண்ணுங்க சார்’

’ஒகே சார் கேளுங்க’ என சிரித்துக் கொண்டே ஜாலியாக இருந்தார் ஆர்.கே. சுரேஷ்.

வழக்கமான கேள்விகளுடன் தொடங்கிய விசாரணை

அதன் பின் விசாரணையை  வழக்கமான கேள்விகளில் தொடங்கினர் போலீஸார்.
உங்கள் பெயர்? வயசு? அப்பா பெயர்? என்ன வேலை செய்யறிங்க? எந்த கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கீங்க? வெளிநாட்டுக்கு என்ன விஷயமா போயிருக்கீங்க? என்ற கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொல்லிவந்தார் சுரேஷ்.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விக்கு ஆர்.கே.சுரேஷ்,

“எனக்கும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையே சார்” என்றார் உடனடியாக.

ஆனால் போலீஸ் அதிகாரிகளோ,

‘ ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் உங்களுக்கும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா?” என்று மீண்டும் கேட்டனர்.

“இல்லையே சார்” என்று மறுத்தார் ஆர்.கே. சுரேஷ்.

ஆருத்ரா.. சுருதி குறைந்த சுரேஷ்

ஆருத்ரா நிறுவனம் பற்றிய அடுத்தடுத்த முக்கிய கேள்விகள் மற்றும் கிளைக் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில்… முதலில் தெம்பாக சவுண்டாக பேசிய சுரேஷின் சுருதி சற்று குறைந்திருக்கிறது.

“தண்ணீ வேண்டும் சார்” என்று கேட்டிருக்கிறார்.

“ஓகே தண்ணீ குடிங்க” என்று சொல்லி தண்ணீர் குடித்ததும், மீண்டும் கேள்விகளை ஏவினார் அதிகாரி. அடுத்த சிறிது நேரத்தில், ‘ ரெஸ்ட் ரூம்க்கு போயிட்டு வரேன் சார்” என்றார் ஆர்.கே. சுரேஷ்.

ரெஸ்ட் ரூம் போய்விட்டு வந்து மீண்டும் அதிகாரி முன்பு உட்காந்தார்.

மீண்டும் கேள்விகள் ஆருத்ரா கோல்டு நிறுவனம் சம்பந்தமாக கேட்கப்பட்டது.

தெரியாது, தொடர்பு இல்லை, தெரியாது என மழுப்பல் பதில்களே தொடர்ந்து சுரேஷிடம் இருந்து வந்தன.

மதியம் சாப்பாட்டு நேரம் வந்தது, சாப்பிட்டதும் விசாரணை துவங்கியது, ஆர் கே சுரேஷுக்கு உறக்கம் கொஞ்சம் கண்ணைக் கட்டியது. இருந்தாலும் விசாரணை அதிகாரிகள் கேள்விகளை விடாமல் துளைத்து எடுத்தனர், அதனால் தூக்கம் கலைந்து விட்டது.

வங்கி ஸ்டேட்மென்ட்டோடு வாங்க- இன்றும் தொடரும் விசாரணை!

மாலை மணி 6 ஆனது..

“உங்களுக்கும் ஆருத்ரா கம்பெனிக்கும் பணப் பரிமாற்றம் இல்லைனு மறுக்குறீங்க. அப்படின்னா இன்னின்ன பேங்க் ( குறிப்பிட்ட வங்கி பெயர்களை சொல்லி) ல இருக்குற உங்க அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் எடுத்துக்கிட்டு நாளை டிசம்பர் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் வாங்க” என்று கூறினார் விசாரணை அதிகாரி.

ஒரு வழியாக ஏழுமணி நேர விசாரணை முடிந்ததும் ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஆர்.கே.சுரேஷை அனுப்பி வைத்தார்கள் போலீஸார்.

ஏழு மணிநேரத்தில் டீ டைம், சாப்பாடு டைம், ரெஸ்ட் ரூம்க்கு போய் வந்த டைம் போக ஐந்து மணி நேரத்தில் 110 கேள்விகள் கேட்டுள்ளனர் விசாரணை அதிகாரிகள்.

இதுவரையில் விசாரணை செய்ததில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடிக்கும் ஆர். கே. சுரேஷுக்கும் தொடர்புகள் இருப்பதும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இன்று நடக்கும் விசாரணையிலும் துளைத்தெடுக்கும் கேள்விகள் சுரேஷுக்கு காத்திருக்கின்றன. இந்த நிலையில் இன்று, டிசம்பர் 13 காலை மீண்டும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் இரண்டாவது நாள் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார் ஆர்.கே. சுரேஷ்

இந்த விசாரணை பாஜக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வணங்காமுடி

 

பொங்கல் 2024 விடுமுறை… இன்று முதல் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு!

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.