முன்னாள் அமைச்சர் ஒருவர், காங்கிரஸில் இணைந்திருப்பது பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை குஜராத்தில், மும்முனைப் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பிரபலங்களும், பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும், ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.
இந்த நிலையில், குஜராத்தில் பல்வேறு கட்சியினரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர். ஆளும் பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ். இவர் இந்த மாத தொடக்கத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பாஜக கட்சியில் இருந்தும் விலகினார்.
பாஜகவில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று (நவம்பர் 28) காங்கிரசில் இணைந்தார். அவருடைய மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார்.
அவருடைய வருகையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வரவேற்றுள்ளார். குஜராத்தில், தேர்தல் சமயத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் திடீரென்று காங்கிரஸில் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஜோடோ யாத்திரைக்கு சிக்கல்: ராஜஸ்தானில் முற்றும் கோஷ்டி மோதல்! “ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமையில்லை”: அமைச்சர் ரகுபதி!