ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதிநீக்கம் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.
இதனை அடிப்படையாக கொண்டு வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்துள்ளதாக மக்களவை செயலகம் இன்று (மார்ச் 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல்காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். இந்த தகுதி நீக்க நடவடிக்கையின் மூலம் ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல. நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை கிடையாது என்று மிரட்டும் தொனியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே மத்திய பாஜக அரசு தகுதிநீக்கம் செய்துள்ளது.
ராகுல்காந்தியை பார்த்து பாஜக தலைமை எந்த அளவுக்கு பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. 2ஆண்டு சிறை தண்டனையை இன்னும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை.
ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் பாஜக: கனிமொழி
MI ஜெர்சியை போட்டதும் பாருங்க… சூர்யகுமாருக்கு ஆதரவாய் டிகே