பாஜக நிர்வாகி கொலை… திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது : அண்ணாமலை கண்டனம்!

Published On:

| By christopher

வேலூரில் பாஜக பிரமுகர் விட்டல் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகன் தரணி குமார் ஆகியோர் நேற்று (டிசம்பர் 21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்டச் செயலாளர் விட்டல் குமார், கடந்த 16ஆம் தேதியன்று சென்னாங்குப்பம் பகுதியில் மர்மநபர்களால் இரும்பு ராடால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நாகல் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(26), கீழ் ஆலத்தூரை சேர்ந்த கமலதாசன்(24) ஆகியோர் காட்பாடி சார்பு நீதிமன்றத்தில் கடந்த 20ஆம் தேதி சரணடைந்தனர்.

தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த கொலைக்கு தூண்டியது நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலாசேட்(55), அவரது மகன்களான வழக்கறிஞர் ராஜேஷ்(30), ஊராட்சி மன்ற செயலாளர் தரணிகுமார்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கொலையான பாஜக நிர்வாகி விட்டல் குமார்

இந்த நிலையில்,  கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார், சின்ன நாகல் மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த பாலாசேட் (55), தரணிகுமார்(28) இருவரையும் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் பாலா சேட்டின் மற்றொரு மகனான  வழக்கறிஞர் ராஜேஷை (30) போலீசார் தேடி வருகின்றனர்.

ஊராட்சி மன்றம் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் ஒரு பிரிவு – போலீஸா?

இந்த நிலையில் பாஜக நிர்வாகி கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த16ஆம் தேதி வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு நிர்வாகி விட்டல் குமார், திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான N.பாலாசேட்டு என்ற நபருக்குத் தொடர்பிருப்பது தெரிந்து, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை, நேற்று நாங்கள் கண்டித்த பிறகு, இன்று திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவையும், அவரது மகனையும் கைது செய்திருக்கிறது.

ஒவ்வொரு முறை திமுகவினர் குற்றம் செய்யும்போதும், காவல்துறை நடவடிக்கை எடுக்க, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியுள்ளது. பாஜகவினர் உயிருக்கு ஆபத்து நிலவும் நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், திமுக கட்சியின் ஒரு பிரிவைப் போல காவல்துறையினர் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் பணி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதே தவிர, திமுகவினர் அராஜகத்துக்குத் துணை நிற்பதல்ல. ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல்துறையின் கடமை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எடைக்குறைப்புக்கு உதவுமா வெஜிடபிள் ஜூஸ்?

பியூட்டி டிப்ஸ்: ஃபவுண்டேஷன் பல வகை… உங்களுக்கேற்றது எது?

டாப் 10 நியூஸ் : திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல் தேசிய கணித தினம் வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… கருவாடு பிரியரா நீங்கள்? ஒரு நிமிஷம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share