ராமர் கோயிலை கட்டி வட மாநில மக்களை பாஜக திசை திருப்புகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “12 வயதில் இந்தி திணிப்புக்கு எதிராக களம் கண்டவர் கலைஞர். அப்படிப்பட்ட அவருக்கு மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள்ளார்.
மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்பட அனைவரும் நின்றனர். உலகத்தில் வேறு எங்கும் இதுபோன்று மொழிப்போர் போராட்டம் நடந்திருக்காது” என்று குறிப்பிட்டார்.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்ற இறுமாப்புடன் நிற்கிறேன் என்று கூறிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், “பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழியை திணிக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது.
கடந்த 9.9.2022 அன்று அலுவல்மொழி நாடாளுமன்ற குழு தலைவரான அமித்ஷா குடியரசுத் தலைவரிடம் ஒரு அறிக்கை கொடுத்தார்
அதில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அந்த மொழிகளை பேசும் மக்களுக்கும் எதிரான பரிந்துரைகள் இருந்தன.
உடனே 2023 அக்டோபர் 18ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்து, இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
பாஜக இந்தி மொழியை திணிப்பதற்கு காரணம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான். பாஜகவுக்கு வாக்களிப்பது யார்? வட மாநில மக்கள். குறைந்தபட்சம் இந்தி பேசும் மாநிலங்களுக்காவது பாஜக எதாவது செய்திருக்கிறதா?
கொரோனா காலத்தில் ஊரடங்கு போடப்பட்டாதால் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றார்கள். அவர்களுக்கு பேருந்து வசதிகளை கூட இந்த பாஜக அரசு செய்து தரவில்லை.
சாரை சாரையாக நடந்து சென்ற மக்கள் மீது பாஜக அரசு காட்டிய இரக்கம் இதுதானா. அந்த மக்களை ராமர் கோயிலை காட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். கொரோனாவை விட கொடியது பாஜக அரசு.
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பரவி வருகிறது. எங்களுக்கு படிப்புதான் தேவை என்று இந்தியில் பேசும் ஒரு சிறுவனின் பழைய வீடியோ அது. இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.
பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட பாஜகவுடன் இவ்வளவு நாளாக கூடவே இருந்து ஆமாம் சாமி போட்டவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டின் உரிமையை டெல்லியில் அடகுவைத்தார். சிறுபான்மை மக்களுக்கு செய்த துரோகத்தை மறைக்க இப்போது நாடகமாடுகிறார்.
இந்தியா கூட்டணியின் ஆட்சி, உண்மையான கூட்டாட்சியாக அமையும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கருடன் : கையில் கட்டுடன் ஒரே டேக்கில் டப்பிங்… சூரி அசத்தல்!
ED அதிகாரி அங்கித் திவாரி வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் : விசாரணைக்கு தடை!
Comments are closed.