அண்ணாமலை பேட்டி : ஜெயக்குமாருக்கு பாஜக கண்டனம்!

Published On:

| By Kavi


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை விமர்சனம் செய்யும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இதற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, அதிமுக என்பது ஆலமரம் போன்றது. பாஜக செடி போன்றது. பாஜக தேசிய தலைவர் நட்டாவும், அமித் ஷாவும் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்” என்று கூறினார் ஜெயக்குமார்.

இந்நிலையில் ஜெயக்குமாருக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் இன்று (ஜூன் 12) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

தினம் தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநில தலைவரை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அண்ணாமலை ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு புதிய திட்டங்களோடு,மக்கள் வாழ்வு வளம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜெயக்குமார் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை.

தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று அமித்ஷா கலந்து கொண்டது கூட ஜெயக்குமார் அவர்களுக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகிறேன். எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார்.
கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது.

எனவே எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

போர் தொழில் வசூல் எப்படி?

ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அண்ணாமலையை கண்டித்த ஓபிஎஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share