ஐந்து பேர் உயிரிழப்பு… மத்திய அரசு அறிவுறுத்தியும் பாதுகாப்பில் ஏன் குளறுபடி? – பாஜக கேள்வி!

Published On:

| By Selvam

சென்னை மெரினாவில் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற ஐந்து பேர் கடும் வெப்பம் மற்றும் மருத்துவ பிரச்சனைகள் காரணமாக உயிரிழந்தனர்.

இந்தநிலையில், விமான சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தல்கள் வழங்கிய பின்பும், தமிழக அரசு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் இன்று (அக்டோபர் 7) குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு!

உலக சாதனை நிகழ்ச்சியாக சென்னை மெரினாவில் நடந்த விமானப்படையின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யுங்கள் என மத்திய அரசு ஏற்கனவே
தமிழக அரசை தெளிவாக அறிவுறுத்தியது.

அதற்கான முறையான ஏற்பாடுகளை, மக்கள் நலத்தை பேணிக் காக்கும் வகையில் தண்ணீர்,உணவு போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் மிகவும் அஜாக்கிரதையாக தமிழக அரசு செயல்பட்டது, தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு மிகப்பெரிய உதாரணமாய் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் முதல் தற்போதைய விமான சாகச நிகழ்ச்சி வரை தமிழக அரசின் உள்துறையும், பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தங்களுடைய கடமையை உரிய முறையில் செய்யத் தவறியதை தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்க கூடாது.

பொதுப்போக்குவரத்தில் பெரும் குளறுபடி!

கூட்ட நெரிசலில், நிகழ்ச்சி முடிந்து வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்ட மக்களை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நல்ல இளைஞர்கள் கவனமாக செயல்பட்டு தாங்களாகவே பொறுப்புள்ள மக்கள் சேவை அதிகாரிகளாக
மாறி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கு அரணாக செயல்பட்டதால், இறைவன் அருளால்
கூட்ட நெரிசலின் காரணமாக, ஏற்படவிருந்த மிகப்பெரிய மனித உயிர் விபத்து தவிர்க்கப்பட்டு விட்டது.

மேலும் தமிழக அரசு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் , தென்னக ரயில்வேயில் சென்னை மின்சார ரயில் நிர்வாகிகளுக்கு சரியான முறையில் அறிவுறுத்தல் வழங்கி பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவில்லை.

இதனால் கூடுதல் ரயில்கள், பஸ்கள் காலையில் இருந்து இயக்கப்படாததால் நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான மக்கள், நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் பாதி வழியில் திரும்பினர்.
நிகழ்ச்சி முடிந்து சென்ற மக்களும் போக்குவரத்து குறைபாடுகளால் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.

15 லட்சம் பேர் பங்கு கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை குழு தலைவர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், போக்குவரத்து கழகங்களின் செயலாளர்கள் என அனைவரிடமும் பல கட்ட ஆலோசனை நடந்திருக்க வேண்டும்.

 

ஆனால், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பெயரளவுக்கு கூட்டங்கள் நடத்தியது போல், மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டது போல் விமானப்படை நிகழ்ச்சியிலும் அதே முறையை தமிழக அதிகாரிகள் கடைபிடித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள்!

மெரினா கடற்கரையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் விமான சாகசத்தை பார்க்க வந்த ஐந்து பேர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் வெளியேறுவதற்கான வழி தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் சரியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்படவில்லை. சென்னை மாநகர காவல் துறையும் பொதுமக்கள் வெளியேறும் போது உரிய காவலர்களை பாதுகாப்பு பணியில் முறையாக ஈடுபடுத்த வில்லை.

ஏற்கனவே குடிநீரின்றி தவித்த கட்டுக்கடங்காத கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேல் வெயிலில் நின்றிருந்ததுடன் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், மூச்சு விடுவதற்கு கூட சிரமப்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

முதியவர்கள் குழந்தைகளும் பயங்கரமாக பாதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் குடிநீருக்காக தவித்து அந்தப் பகுதியில் இருந்த வீடுகளில் கதவைத் தட்டி குழந்தைகளுக்காக குடிநீரையும், உணவையும் கேட்டு பெற்றனர்.

ராணுவ அமைச்சகம் இது குறித்து ஏற்கனவே 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெளிவாக தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் வந்திருந்த பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. அதிகாலையில் இருந்தே கூட்டம் கூடியது. உணவுக்கான வசதியும் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.

வெயிலின் தாக்கத்தாலும் குடிநீர், குடை கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 250க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் சேவையை சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.

இனியாவது தமிழக முதல்வர் விழித்துக் கொண்டு, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நிர்வாக மேலாண்மை மேம்படுத்த வேண்டும்.அடித்தட்டு மக்களுடைய எண்ணங்களை, தேவைகளை, உரிமைகளை,புரிந்து கொண்டு நிர்வாக சீர்திருத்தத்தை உருவாக்கி மக்கள் நலம் பேண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மெரினா உயிரிழப்பு: விமானப் படை, போலீஸ் இடையே கம்யூனிகேஷன் இல்லை… ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… ஐந்து லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share