ட்விட் முதல் அரெஸ்ட் வரை: பாஜக பெண் நிர்வாகி விவகாரத்தில் நடந்தது என்ன?

அரசியல்

பாஜக நிர்வாகி சவுதாமணி இன்று ( ஜூலை 9 ) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சவுதா மணி. இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல சர்ச்சை பதிவுகளை பகிர்ந்து வருவதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஜூன் 28 2022 அன்று இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விடியல் ஆட்சி! சட்டம் ஒழுங்கு காற்றில் பற பறக்குது! போலீஸுக்கே தண்ணி காட்டுது! காட்டுது! அதிகாரம் கண்ணைக் கட்டுது! ஆணவம் தலை தூக்குது! கண்டு கொள்ளத்தான் ஆள் இல்லையே…. காவலர்களுக்கே இந்த கதி என்றால் பெண்களின் நிலைமை என்ன மக்களே!’ என்று பதிவிட்டு ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார்.

ஆனால், அந்த வீடியோ பதிவு 2019 ஜூன் 13 ஆம் தேதி, அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது… கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கார்த்திகேயன் என்ற காவலரை மதுபோதையில் இருந்த நபர்கள் தாக்கிய போது எடுக்கப்பட்டது. காவலரை தாக்கிய நான்கு பேரையும் காவல்துறையினர் அப்போதே கைது செய்துவிட்டனர்.

இதைக் குறிப்பிட்ட போலீஸார், “இந்தப் பதிவை நீங்கள் இப்போது பகிர்வது பொதுமக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும். இது போன்ற பொய்யான பதிவுகளை இனி பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என்றும் சௌதாமணிக்கு ட்விட்டரிலேயே பதில் அளித்தனர்.

அதன் பின் சில நாட்கள் கழித்தே இந்த பதிவுகளை சவுதா மணி தற்போது அவரது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கிடையே சௌதாமணி மீது பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில், இந்த புகாரின் பேரில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று (ஜூலை 9) இந்த வழக்கை நீதிபதி பொங்கியப்பன் விசாரணை செய்தார். இந்த விசாரணையில் அவரது பதிவுகள் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாகவும், பொய்பிரசாரங்களை பரப்புவதாகவும் அமைந்துள்ளது என்று கூறி சவுதாமணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி பொங்கியப்பன்.

நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து, பாஜக நிர்வாகி சவுதாமணி மீது மத கலவரத்தை தூண்டுதல், பொய் பிரச்சாரங்களை பரப்புதல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.