சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. bjp chhattisgarh election manifesto 2023
மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இவற்றில் மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி மற்றும் நவம்பர் 17ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு முறையே நவம்பர் 17, 25 மற்றும் 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கரில் தேர்தலுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் நேற்று (நவம்பர் 3) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராய்பூரில் உள்ள குஷாபாவ் தாக்ரே பரிசாரில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், ‘சத்தீஸ்கர் 2023க்கான மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் பாஜக அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “தேர்தல் அறிக்கை என்பது பாஜகவின் அறிக்கை மட்டுமல்ல. அது ஒரு தீர்மானத்தின் ஆவணம்” என்று குறிப்பிட்டார்.
தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து விளக்கிய அமித் ஷா, “மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ‘கிருஷி உன்னதி திட்டம்’ தொடங்கப்படும், இதன் கீழ் ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் விவசாயிகளிடமிருந்து 3100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
கட்சித் தலைமையிலான அரசாங்கம் ‘மஹதாரி வந்தன் திட்டத்தை’ தொடங்கும், இதன் கீழ் திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 நிதியுதவி வழங்கப்படும், என்றார்.
இதேபோல், தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் யோஜனா தொடங்கப்படும், இதன் கீழ் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ₹10,000 வழங்கப்படும். என்று கூறினார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயுவிற்கு தலா ₹500 வழங்கப்படும், அதே நேரத்தில் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கான மாதாந்திர பயணக் கொடுப்பனவு, நேரடி பயன் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
அவர் கூறுகையில், மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஆண்டுகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ‘கர் கர் நிர்மல் ஜல் அபியான்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு ஆண்டுகளுக்குள் குழாய் நீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சத்தீஸ்கர் மக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள், என்றார்.
தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக ரேவடி கலாச்சாரம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் நிலையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதிர்க்கட்சியினர் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. bjp chhattisgarh election manifesto 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்முகப்பிரியா
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ஐ.டி சோதனை!
மாணவர்களை அடித்த விவகாரம்: நடிகை கைது!
“விக்ரம்”க்கு எதிராக “பில்டப்” உடன் களமிறங்கும் சந்தானம்