தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்தல் விதிமுறை அமலில் இருந்தபோது தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது 3 பேரிடம் இருந்து ஆறு பைகளில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கைதானவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதனால் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பாஜகவின் 200 கோடி நெட்வொர்க்…நயினாரின் 4 கோடி விவகாரம்… அம்பலமாகும் வாக்குமூலம்!
இவ்வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் முருகன், ஆசைத்தம்பி ஆகியோர் சிபிசிஐடி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
அதுபோன்று சிபிசிஐடி போலீசார் பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் மற்றும் அவருடைய ஓட்டுநர் கணேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
4 கோடி விவகாரம்…தப்பிக்கிறாரா நயினார்?
சிபிசிஐடியின் தொடர் விசாரணைகளில் நயினார் நாகேந்திரனும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் நாளை மறுநாள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு நடிகை.. புது அப்டேட்..!
பியூட்டி டிப்ஸ்: முகச் சுருக்கங்களைப் போக்க… உங்களுக்கான ஈஸி ஃபேஸ் பேக் இதோ!