ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கோம்பல்லா மாதவி லதா, மசூதியை பார்த்து அம்பு விடுவது போல செய்கை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் தனது செயலுக்கு இன்று (ஏப்ரல் 18) மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இதே போன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 13 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானாவில் முக்கிய தொகுதியான ஹைதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கோம்பல்லா மாதவி லதா களமிறங்கியுள்ளார்.
இவர் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அத்தொகுதியில் 4 முறை வென்ற ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசியை எதிர்த்து பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று ராம நவமியை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் சந்திப்பு அருகே திறந்தவெளி ஜீப் ஒன்றில் பாஜக தொண்டர்கள் சூழ வாகனப் பேரணி சென்றார் . அப்போது மசூதி ஒன்றை கடந்து சென்ற போது, அம்பு விட்டு தாக்குவது போல செய்கையால் செய்து காட்டினார் மாதவி லதா.
ராமநவமி கொண்டாட்டத்தில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல பிரசாரம் செய்கிறார். மதம் சார்ந்த பிரசாரம் செய்ய கூடாது என்கிறது தேர்தல் விதி. தேர்தல் கமிஷனின் நீதி எப்படி? pic.twitter.com/dVsLuxnQbi
— Barakath Ali (@sambarakathali) April 18, 2024
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, மாதவி லதாவின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனினும், இதுவரை தேர்தல் ஆணையம் தரப்பில் இது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!
இந்த நிலையில், தனது செயலுக்கு பாஜக வேட்பாளர் மாதவி லதா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், “என்னைப் பற்றிய ஒரு வீடியோ எதிர்மறையான கருத்துக்களுடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ முழுமை இல்லாதது. இருந்தாலும் கூட எனது நடவடிக்கையால் யாருடைய உணர்வுகளும் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தனி நபர்கள் அனைவரையும் நான் மதிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கு எதிரான பாஜக.. மக்கள் நிராகரிப்பார்கள்!
எனினும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி வேட்பாளருமான ஓவைசி, மாதவி லதாவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாதவி லதா இந்த செயல் குறித்து ஓவைசி கூறுகையில், “ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட பாஜக வேட்பாளரின் ’கொச்சையான மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை” மக்கள் நிராகரிப்பார்கள்.
பாஜகவின் நோக்கத்தை ஹைதராபாத் மக்கள் பார்த்துள்ளனர். தேர்தலை விட ஹைதராபாத் அமைதி பெரியது. தெலுங்கானா மாநிலத்தில் அமைதிக்கு எதிரான பாஜகவுக்கு எதிராக தெலுங்கானா மக்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மருத்துவர்களின் அறிவுறுத்தலை மீறி மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ்!
துபாயில் பெரு வெள்ளம் : மேக விதைப்பு காரணமா? காலநிலை மாற்றம் காரணமா?