பாஜக ஆபரேஷன் தாமரை என்ற முறையை கடைபிடித்து வருவதாகவும் , பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்சி கவிழ்ந்து வரும் நிலையில் , இதேபோன்ற முறையை டெல்லியிலும் பாஜக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (ஆகஸ்ட் 32 ) புதன்கிழமை சிபிஐ இயக்குநரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் படி கோரிக்கை வைக்க திட்டம் தீட்டியுள்ளனர்.
அண்மையில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , பாஜக எங்கள் எம்.எல்.ஏக்களை வாங்க பல கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் நாடு முழுவதும் இதையே செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முறை பற்றி விசாரிக்குமாறு சிபிஐ இயக்குநரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது கூறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அதிஷி கூறுகையில் “அரசியல் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக சிபிஐ போன்ற மத்திய அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான சலுகைகளாக அவர்கள் பாஜக வில் சேரும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இறுதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க கோடிகளில் பணம் வழங்குகிறார்கள்” என்று கூறினார்.
மேலும், “ஆபரேஷன் தாமரை”யின் ஒரு பகுதியாக அருணாச்சல பிரதேசம், மேகாலயா, கர்நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஆட்சியை மாற்றுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியிலும் இதுபோன்ற முயற்சி மேற்கொண்டுள்ளது பாஜக. நாடு முழுவதும் 277 எம்எல்ஏக்களை பாஜக விலைக்குவாங்கியுள்ளது.
எங்கள் இருபது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூபாய் 20 கோடி விலை வைத்துள்ளது பாஜக. நாடு முழுவதும் ஆபரேஷன் தாமரையின் கீழ் பாஜக இதுவரை 6,300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு இந்த பணம் செலவிடப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார் அதிஷி.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (ஆகஸ்ட் 31 )பிற்பகல் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சிபிஐ இயக்குநரை சந்திக்க இருப்பதாகவும், நாட்டின் ஜனநாயக அமைப்பு பாஜகவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்த நபரின் பெயரை அதிஷி குறிப்பிட வேண்டும் இல்லை என்றால் அவர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றார்.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியதில் இருந்து ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை குற்றவாளியாகக் குறிப்பிட்ட சிபிஐ ஆகஸ்ட் 19 அன்று அவரது வீட்டில் சோதனை நடத்தியது.
நேற்று (ஆகஸ்ட் 30 ) அவரது வங்கி லாக்கர்களையும் சோதனை செய்தது. இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சிபிஐ இயக்குநரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”பாஜகவுக்கு வந்தால் 20 கோடி- வராவிட்டால் வழக்கு”: மிரட்டப்படுவதாக ஆம் ஆத்மி புகார்!