BJP Annamalai Ramesh Bidhuri hate speech

அண்ணாமலை, ரமேஷ் பிதுரி: பாஜக அரசியல் அநாகரீகத்தின் பரிமாணங்கள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

வெகுஜன அரசியல் என்பது பல கோடிக்கணக்கான மக்களிடம் அரசியல் கருத்துகளை, உணர்வை கொண்டு சேர்ப்பது. அதிலும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் அதில் ஒரு போட்டி அம்சம், கிட்டத்தட்ட ஒரு மல்யுத்தம், குஸ்தி பந்தயம் போல ஒருவரை ஒருவர் அடித்து வீழ்த்தும் வேகம் இருக்கும். அதனால்தான் “தேர்தல் யுத்தம், தேர்தல் களம்” என்றெல்லாம் கூறுவோம். என்ன, உண்மையான யுத்தம் போல இதில் வன்முறை கூடாது. ஆனால், பேச்சில் உணர்ச்சி இருக்கும்; கோபாவேசம்கூட இருக்கும். அதெல்லாம் அரசியலின் ஒரு பகுதிதான்.

கடந்த எழுபதாண்டு தேர்தல் அரசியலில் நாம் ஒன்றை கவனித்திருப்போம். அது என்னவென்றால் ஒவ்வொரு கட்சியிலும், தலைவர்கள், முக்கிய பேச்சாளர்கள் என்பவர்கள் பண்பட்ட முறையில் பேசுவார்கள். கோபமாகப் பேசினாலும், சவால் விட்டாலும் நாகரீகம் கடைப்பிடிப்பார்கள். ஆனால், தலமட்ட பேச்சாளர்கள் என்று இருப்பார்கள். இவர்கள் பேச்சில் சுவாரஸ்யம் கூட்ட மாற்றுக் கட்சித் தலைவர்களை “அடா, புடா” என்று பேசுவார்கள். அநாகரீகமாகப் பேசுவார்கள். நள்ளிரவில், தெருமுனைக் கூட்டங்களில், அத்துமீறியே பேசுவார்கள். மக்களும் ஒரு சுவாரஸ்யத்துக்காகக் கேட்டுவிட்டு போவார்கள். இந்தப் பேச்செல்லாம் எதிலும் பதிவாகாது. செய்தித்தாளில் வராது.

ஆனால், சமகாலத்தில், எல்லா பேச்சுக்களுமே பதிவாகின்றன. செல்பேசி, காணொலி, வாட்ஸ்அப், சமூக ஊடகம் என்று வந்துவிட்டதால், யார் எந்த மூலையில் எதைப் பேசினாலும், அது அடுத்த கணமே நாடெங்கும் பரவும் சாத்தியம் உருவாகியுள்ளது. இப்போது அனைவருமே சற்றே கவனமாகவும், நாகரீகமாகவும் பேச வேண்டிய தேவை உள்ளது. அதுவே அரசியல் பண்பாட்டை உயர்த்தும்.

தெருமுனைப் பேச்சுக்களுக்கே இந்த நிலை இருக்கும்போது, முழுவதும் பதிவாகும் நாடாளுமன்றப் பேச்சுக்கள் நாட்டுக்கே வழி காட்ட வேண்டும். சாதாரணமாகவே ஒருவர் பேச்சில் வசைச்சொற்களைப் பயன்படுத்தினால் அதை ஆங்கிலத்தில் “அவர் அன்-பார்லிமென்டரி வார்த்தைகளில் பேசினார்” என்று கூறுவோம். அதாவது பார்லிமென்டில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த முடியாத வார்த்தைகள் என்றுதான் வசைச்சொற்களையே இடக்கரடக்கலாக கூறுவார்கள்.

ஆனால், கடந்த வாரம், நரேந்திர மோடி மிகவும் பெருமையுடன் திறந்து வைத்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், மிக மோசமான வசைச் சொற்களை ஆர்.எஸ்.எஸ் முக்கிய புள்ளியும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பிதுரி என்பவர் பேசியுள்ளார். தன் சக நாடாளுமன்ற உறுப்பினரான டேனிஷ் அலி என்பவரைத் தரக்குறைவாக ஏசியுள்ளார். தமிழ்நாட்டிலோ பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியுள்ளார். இந்த சம்பவங்கள், இந்த தனிநபர்கள் தொடர்பானது அல்ல. எப்படிப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை, பண்பாட்டை பாஜக பின்பற்றுகிறது, வளர்த்தெடுக்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

BJP Annamalai Ramesh Bidhuri hate speech

முஸ்லிம் வெறுப்பாளர் ரமேஷ் பிதுரி

அரசியல்வாதிகள் உணர்ச்சி வசப்படுவது சகஜம்; சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் கலவரம் செய்வது கூட நடந்துள்ளது என்றெல்லாம் யாரும் நினைக்கலாம். ஆனால் சென்ற வாரம் ரமேஷ் பிதுரி பேசிய தருணம் அவ்வளவு தூரம் கொதிநிலையில் எதுவும் விவாதிக்கப்பட்ட தருணமே அல்ல.

சந்திரயான் நிலவுப் பயணம் வெற்றி பெற்றதை பாராட்டி உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அதில் பேசிய ரமேஷ் பிதுரி பிரதமரை எப்படியெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்று சொல்லிக்காட்டியுள்ளார் போலத் தெரிகிறது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் டேனிஷ் அலி, அவ்வாறு பிரதமரைக் குறிப்பிடுவதை ஆட்சேபித்துள்ளார். உடனே, நிதானத்தை இழந்த ரமேஷ் பிதுரி டேனிஷ் அலியின் மத அடையாளத்தை இழிவுபடுத்தும் சொல்லைக் கூறி அவரை திட்டியுள்ளார். பல்வேறு வசைச்சொற்களையும் பொழிந்துள்ளார்.

இதில் நாம் காணொலியில் காணும் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு அவர் வசைமாறி பொழியும்போது முன்னாள் பாஜக அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தனும், ரவி சங்கர் பிரசாத்தும் அதைச் சிரித்து ரசிக்கின்றனர். அவர்கள் பதற்றமடைவதையோ, கூச்சப்படுவதையோ காண முடியவில்லை. ரமேஷ் பிதுரிதான் நிதானமிழந்தார் என்றால் மற்றவர்கள் அதை ரசிக்கலாமா? அதுதான் பாஜக-வின் கலாச்சாரமா?

பிரச்சினையே அதுதான். பாஜக-வின் அரசியல் கலாச்சாரம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்களை வெறுப்பது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிநாதமாக உள்ளது. பல்வேறு சம்பவங்களில் நாம் முஸ்லிம்கள் சாதாரண மக்களால் அல்லது சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்படுவதைப் படிக்கிறோம். அப்படிப்பட்ட நீண்ட நாள் பழக்கத்தில்தான் ரமேஷ் பிதுரி நாடாளுமன்றத்திலேயே  மத அடையாளத்தை இழிவுபடுத்தும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.

ரமேஷ் பிதுரி தெற்கு டில்லியின் பிரதிநிதி. பெரும்பாலும் படித்தவர்களும், உயர்தட்டு மக்களும் வாழும் தொகுதி இது. தலைநகரின் முக்கிய பகுதி. அதன் நாடாளுமன்ற உறுப்பினரே நாடாளுமன்றத்தை இப்படி இழிவுபடுத்தும்படி நடந்துகொண்டால் அதன் பொருள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். பாஜக இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை எந்த அளவு சீரழிக்கிறது என்பதற்கான உதாரணம்தானே இது?

மேலும், அவர் இவ்விதம் செய்வது இது முதல்முறையுமல்ல. அவர் ஏற்கனவே பெண்களை இழிவுபடுத்தும்விதமாக நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். பொதுவெளியில் டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய அமைப்பாளரான இவர், பிரதமருக்கும் நெருக்கமானவர் என்கின்றன வலைதளங்கள்.

இவர் மட்டுமே இப்படி என்றில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் என்ற மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை உங்களுக்கு நினைவிருக்கலாம். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டுதலில் ஈடுபட்டார் என்று அவர்களால் குற்றம் சாட்டப்பட்டு டில்லி ஜந்தர் மந்தரில் நீண்ட காலம் அவர்கள் போராட்டம் நட த்தியது நினைவிருக்கலாம். இன்று டில்லி போலீஸ் அவர்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையிருப்பதாகக் கூறியுள்ளது. பிரிஜ் பூஷன் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது மேலும் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன.

தங்கள் கட்சியினர் மீது எவ்விதமான கட்டுப்பாட்டை பாஜக கட்சி வைத்துள்ளது என்பது தெரியவில்லை. அவர்கள் கண்ணியமின்றி நடந்தால் அவர்களுக்கு விருது ஏதும் தருவார்களோ என்று வியப்பாக இருக்கிறது. ரமேஷ் பிதுரி மீது சில கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். அதனால் பலன் என்னவிருக்கும் என்பது தெரியாது. அதற்குள் அவர் செயலை நியாயப்படுத்தும் கதையாடல்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

BJP Annamalai Ramesh Bidhuri hate speech

அறிஞர் அண்ணாவை இகழும் அண்ணாமலை

தமிழக வரலாற்றில் முழுக்க, முழுக்க சாமானிய மக்களைக் கொண்டு ஓர் அரசியல் கட்சியை கட்டி எழுப்பிய தலைவர் அறிஞர் அண்ணா. ஆதிக்க வகுப்பினருக்கு எதிராக சாமானிய மக்களை அணிதிரட்டுவதில் உள்ள சவாலை உணர்ந்த அவர் கட்சியினருக்கான ஒரு செல்நெறியாக மூன்று வார்த்தைகளை வழங்கினார்: ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பவையே அவை மூன்றும்.

உலக மக்களாட்சி வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க சாதனையாக, பரம்பரை செல்வச் சீமான்களால் நடத்தப் பெறாத, முதலாளி வர்க்கத்தால், நிலவுடமையாளர்களால் நடத்தப் பெறாத, எளிய மனிதர்களையே தலைவர்களாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் பதினெட்டே ஆண்டுகளில் தேர்தல் களத்தில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த சாதனையை வழிநட த்திய அரசியல் அறிஞர், பண்பாளர் அண்ணா.

அவர் சாதனையின் மகத்துவத்தை மக்களே அறிந்திருந்ததால்தான் அவர் மரணமடைந்தவுடன் அலைகடலென சென்னையில் அவர் இறுதி ஊர்வலத்தில் திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். அந்தத் துயரக் கடலில் நீந்திச்சென்றது அவர் இறுதி யாத்திரை.

அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாமனிதரை எந்த காரணமும் இல்லாமல், கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி பேசுகிறார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. கிட்டத்தட்ட எழுபதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை திரித்துக் கூறி, அபாண்டமான வார்த்தைகளைப் பேசுகிறார்.  

எந்த சந்தர்ப்பத்தில், ஏன் பேசுகிறார் என்பதைக் காண வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதை கண்டித்து பாஜக ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில்தான் இவ்வாறு பேசியுள்ளார். அண்ணாவை சனாதன எதிர்ப்பாளராகவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை ஆதரவாளராகவும் எடுத்துக்கொண்டு வரலாற்றைத் திரிக்கிறார். அண்ணா மன்னிப்பு கேட்டார், தேவருக்கு பயந்து ஓடினார் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நாகரீகமின்றி பேசியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாவின் சனாதன எதிர்ப்பு என்பது மூட நம்பிக்கை, ஜாதீய ஒடுக்குமுறை, பெண்ணடிமை எதிர்ப்புதான். இன்றைய சனாதன ஒழிப்பு மாநாடும் மூட நம்பிக்கைகள், ஜாதீய ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை ஆகிய பழைமைவாத நோக்குகளை ஒழிக்கும் மாநாடுதான். இவ்வாறு ஒழிக்கப்படும் சனாதனத்துக்கும் தெய்வ நம்பிக்கைக்கும் தொடர்பில்லை. இவ்வாறு ஒழிக்கப்படும் சனாதனத்துக்கும் மானுட சமத்துவ சகவாழ்வுக்குத் தேவையான தர்ம,நியாயங்களுக்கும் தொடர்பில்லை.  

அண்ணா உமையவள் பால் கொடுத்தால் குழந்தைக்கு தெய்வீக அறிவு உண்டாகும் என்பன போன்ற கதைகளைத்தான் விமர்சித்தார். மனிதர்களின் முயற்சி, உழைப்பு ஆகியவற்றின் பலன்களுக்கு தெய்வத்தை காரணமாக்குவது மனிதர்களின் முயற்சியை, உழைப்பைக் குறைத்துவிடும் என்பதால்தான் முற்போக்காளர்கள் இதுபோன்ற புராண கதைகளை விமர்சிக்கிறார்கள். “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று கூறினார் வள்ளுவர்.

அந்த நோக்கில் மனிதர்களின் மூட நம்பிக்கை அவர்கள் முயற்சியைக் கெடுத்துவிடக் கூடாது என்பதே அண்ணா அவர்களின் நோக்கம். ஒரு மாணவன் நன்றாகப் படித்து தேர்வில் வெற்றி பெற்ற பின் கடவுளுக்கு நன்றி கூறுவது தெய்வ நம்பிக்கை. படிக்காமலேயே தேங்காய் உடைத்தால் கடவுள் தேர்வு பெறச்செய்வார் என்று நினைப்பது மூட நம்பிக்கை. மூட நம்பிக்கைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே முற்போக்காளர்கள் எண்ணம். மூட நம்பிக்கை எது, தெய்வ நம்பிக்கை எது என்பதை பிரித்தறிவதில் பல கருத்து மாறுபாடுகள் ஏற்படலாம்.

முத்துராமலிங்க தேவர் அண்ணாவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமலோ, ஏற்றுக் கொள்ளாமலோ கண்டித்திருக்கலாம். அது ஒரு கருத்து மாறுபாடு மட்டுமே. அதன் பிறகு அரசியல் ரீதியாக அவர்கள் 1962 தேர்தலில் உடன்படிக்கை கண்டுள்ளனர். இது போன்று கருத்து மாறுபாடுகள், ஒத்திசைவுகள் எல்லாம் சேர்ந்ததுதான் அரசியல் கட்சிகளின் இயக்கம். அதில் ஒரு தலைவரை மிகையாக இழிவுபடுத்தி, மற்றொருவரை உயர்த்திப் பேசுவதெல்லாம் ஒரு பண்புள்ள அரசியல்வாதிக்கு அழகல்ல.

அண்ணாமலை ஆங்கில ஹிண்டு நாளிதழில் அவர் கூற்றுக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறினார். ஹிண்டு நாளிதழ் விரிவாக தன் அன்றைய நாளிதழ் பக்கங்களை ஆராய்ந்து அண்ணாமலையின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஒரு தனிக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அப்போதும் அண்ணாமலை தன் மிகையான, பிழையான கூற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.    

அண்ணாமலை இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல. பல சந்தர்ப்பங்களிலும் உண்மைக்கு மாறான தகவல்களை, மிகையான தகவல்களைக் கூறுகிறார். அதனை எத்தனை பேர் சுட்டிக்காட்டினாலும் வருந்துவதில்லை. தன் கூற்றைத் திரும்பப் பெறுவதில்லை. அவர் ஒரு நகைச்சுவைப் பாத்திரமாகவே அவரது பொறுப்பற்ற பேச்சுகள் காரணமாகக் கருதப்படுகிறார்.

பாஜக ஏன் அண்ணாமலை போன்ற அரசியல் முன் அனுபவமில்லாத மனிதரை நேரடியாக மாநிலத் தலைவராக நியமித்தது என்பது முக்கியமான கேள்வி. காவல்துறை அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றியவர் சில ஆண்டுகளுக்கு முன் திடீரென பணியிலிருந்து விலகி தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஒரு ஆட்டுக்குட்டியை அணைத்தபடி பசுமை விகடன் ஏட்டுக்கு ஒரு பேட்டி தருகிறார். அதில் ரஜினிகாந்த்  தொடங்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார். அது போல் நடப்பதில்லை. பின்னர் சிறிது காலம் கழித்து நேரடியாக பாஜக கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

அதிலிருந்து பாஜக கட்சியினர் பலரும், ஊடகங்கள் சிலவும் அவரால் கட்சி சிறப்பாக வளர்ந்து வருகிறது; அவர் திறமை வாய்ந்த தலைவர் என்றெல்லாம் தொடர்ந்து அவருக்கு ஒரு மெகா பிம்பத்தை உருவாக்க முயன்று வருகிறார்கள். அதே சமயம் தமிழ் மாநில பாஜக கட்சியில் அவருக்கு எதிர்ப்பும் இருக்கிறது.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கு இருக்க வேண்டிய முதிர்ச்சியுடன் அவர் நடந்து கொள்வது இல்லை. பேரறிஞர் அண்ணாவை அவர் இகழ்ந்து பேசியது வன்மையாகக் கண்டிக்க வேண்டிய செயல். ஆனால் பாஜக கட்சித் தலைமை மெளனம் காக்கிறது. அண்ணாவின் பெயரால் செயல்படும் அகில இந்திய அண்ணா தி.மு.க கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஆனால் அண்ணாவையே அவமதிக்கிறார்கள்.

பாஜக-வின் அநாகரீக அரசியலுக்குத்தான் எத்தனை முகங்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை! அவர்களைத் தொடர்ந்து ஆளவிட்டால் இந்தியாவைக் கற்காலத்துக்கே கொண்டு சென்று விடுவார்கள்!  

கட்டுரையாளர் குறிப்பு:

BJP Annamalai Ramesh Bidhuri hate speech Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

1 thought on “அண்ணாமலை, ரமேஷ் பிதுரி: பாஜக அரசியல் அநாகரீகத்தின் பரிமாணங்கள்!

  1. Mister Journalist.. What MP Said is wrong only. but What annamalai anna Said is correct only. it seems minnambalam has got some benefits from DMK..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *