மதுரை மாவட்டத்தின் வேளாண் பல்கலைக்கழகம் தனது கையில் உள்ளது என வேளாண் பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டிருந்த செங்கலை பாஜக தலைவர் அண்ணாமலை காண்பித்து நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
நாகர்கோவிலில் பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று (ஜூலை 2) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியபோது, “இந்தியாவை மீன் உற்பத்தியில் உலகின் மூன்றாவது நாடாக மீனவ சமுதாயத்தினர் உயர்த்தியுள்ளனர். 129 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து நாம் மீன் ஏற்றுமதி செய்கிறோம். தமிழகத்தின் மீனவ சொந்தங்களுக்கு மீன் விவசாயிகள் என்று பிரதமர் பெயர் சூட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 1,42,458 பேருக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் கட்டி தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். வீடு கட்டி தந்தார்களா” என மக்களை பார்த்து கேட்ட அண்ணாமலை தன்னிடமிருந்த செங்கலை காட்டி “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவருக்கு கூட வீடு கட்டி தரவில்லை” என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.8000 தருவதாக கூறினார்கள். ஆனால் கொடுக்கவில்லை. மீன்வள கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 511 வாக்குறுதிகள் கொடுத்துள்ளீர்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்று ஸ்டாலினிடம் கேட்டால், எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேட்பார். 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்தார்கள். மதுரை மண்ணில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் எனது கையில் செங்கலாக உள்ளது” என வேளாண் பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டிருந்த செங்கலை அண்ணாமலை காண்பித்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்று செங்கலை காண்பித்து பிரச்சாரம் செய்தார். அதே பாணியில் பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று செங்கலை காண்பித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
செல்வம்