அண்ணாமலை அரசியலும், ஆளுநர் ரவியின் அரசியலும்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

அரசியல்வாதிகள் என்றால் அரசியல்தானே செய்வார்கள், பிறகு ஏன் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது? அரசியல் செய்யாமல் ஒரு பிரச்சினையைக் குறித்து பேச முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதன் பொருள் என்னவென்றால் எப்படிப் பேசினாலும் அதில் உள்ளடக்கமாக ஓர் அரசியல் நிலைபாட்டைக் காண முடியலாம் என்பதுதான்.

எனவே ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது என்பதன் பொருள் என்ன, அப்படியும் அரசியல் செய்தால் எத்தகைய அரசியல் செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

இப்போது பிரச்சினையாகி இருப்பது கோவையில் கார் வெடிப்பு சம்பவம். அரசியல் கட்சிகள் எல்லாமே வன்முறைக்கு எதிரானவை. அவை தேர்தல் களத்தில் ஒருவரை எதிர்த்து, கண்டித்து, விமர்சித்து பேசினாலும், அனைத்து கட்சிகளின் நோக்கமும் மக்கள் நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் இந்தப் பிரச்சினையில் ஒருவரை ஒருவர் பொறுப்பாக்க நினைப்பது நல்லதாக இருக்காது என்பதுடன், இது போன்ற தீவிரவாதச் செயல்களுக்கு தேவை ஏற்படாதவண்ணம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதனால்தான் இது போன்ற சம்பவத்தில் ஆளும் கட்சியைக் குற்றம் சொல்லி அரசியல் செய்யக்கூடாது என்று கூற நேர்கிறது. அப்படியானால் ஆளும் கட்சி தவறே செய்யாது என்று பொருளா? உண்மையிலேயே ஆட்சியாளர்கள் மெத்தனமாக இருந்தால் அதை கேள்வி கேட்பது தவறா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதையெல்லாம் புரிந்துகொள்ள சில அரசியல் தத்துவ அடிப்படைகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

BJP Annamalai Governor Ravi politics with Coimbatore car blast

ஆட்சியும், அரசியலும்: சுதந்திரவாதம் கண்டுபிடித்த இருமை

ஆங்கிலத்தில் லிபரலிசம் என்று கூறுவதை நான் சுதந்திரவாதம் என்று அழைக்கிறேன். பலர் அதை தாராளவாதம் என்று கூறுகின்றனர். அது அவ்வளவு பொறுத்தமானதாக எனக்கு தோன்றவில்லை.

ஃபிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களான லிபர்டி, ஈக்வாலிடி, பிரடெர்னிடி என்பதை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றுதான் கூறுகிறோம். நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி ஸ்டேச்சு என்பதை சுதந்திர தேவி சிலை என்றுதான் கூறுகிறோம். லிபரலிசம் என்பது லிபர்டி என்ற அரசியல் கருத்தை சார்ந்தது.

அதன் பொருள் யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதுதான். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களே. அவர்கள் விரும்பியபடி வாழ அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்றால் எதன் அடிப்படையில் அவர்கள் சேர்ந்து வாழ்வார்கள்? இயங்குவார்கள்? இதற்கான பதில்தான் சமூக ஒப்பந்தம் (Social Contract). இந்த ஒப்பந்தங்கள் சில எழுதப்பட்டவை; இரு வணிகர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் போல.

பல எழுதப்படாத நியதிகள். குடும்ப உறவுகள் போல. பிள்ளை பெற்றால் பெற்றோர் குழந்தைக்குச் சோறு அளித்து வளர்க்க கடமைப்பட்டவர்கள். அவர்களது வயதான காலத்தில் அவர்களுக்கு சோறு போடுவது பிள்ளைகளின் கடமை.  அதைப்போல பல்வேறு கடமைகள் ஒவ்வொரு நபருக்கும் உண்டு.

அதனால் ஒவ்வொரு நபரும் உரிமைகள் மற்றும் கடமைகளின் தொகுப்பு எனலாம். உரிமை, கடமையை மறுக்கக் கூடாது; கடமை, உரிமையைப் பறிக்கக் கூடாது.

சரி… இதுதான் சுதந்திரவாதத்தின் அடிப்படை என்றால், அரசு என்பது என்ன என்ற கேள்வி எழும். அரசு பொதுவாக அனைவருக்குமான நியதிகளை, சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது. அப்படிப்பட்ட அரசு மக்களின் உரிமைகளை மதிப்பதாகவும், அவர்கள் விருப்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.  

அரசின் செயல்பாடு குடி நபரான எனக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? நான் அரசை விமர்சிக்கலாம். அதற்கான உரிமை எனக்கு உண்டு. ஆனால், அரசின் சட்டத்தை நான் மீறி நடக்கக் கூடாது. தத்துவவாதி இம்மானுவேல் காண்ட் ரத்தினச் சுருக்கமாக “Argue but obey” என்று கூறினார்.

அதாவது கருத்தளவில் ஏற்க மறுக்கலாம்; ஆனால் செயல் அளவில் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். தனக்குப் பிடிக்காத ஒரு சட்டத்தை ஒருவர் பிரச்சாரம் செய்து அனைவர் ஒப்புதலையும் பெற்று மாற்றலாம். ஆனால், அது மாற்றப்படும் வரை அந்தச் சட்ட த்துக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லாவிட்டால் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.

குடி நபர், சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவை இணைந்த ஆட்சி என்பது சட்டத்தின் ஆட்சி. அரசியல்வாதிகள் அடிக்கடி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொல்கிறார்கள் அல்லவா. அதுதான் சட்டத்தின் ஆட்சி. அரசு நிர்வாகம்.

தனி நபர், அவரது சுதந்திரமான கருத்துகள், கருத்து சுதந்திரம், ஆட்சியை விமர்சிப்பது, அரசியல் அணி திரட்டுவது, போராட்டம் நட த்துவது என்பதெல்லாம் மக்களாட்சி. அதாவது அரசியல். அதில் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இருக்கும். கருத்து மோதல்கள் இருக்கும்

ஒரு நபரே குடி நபராகவும், தனி நபராகவும் இருக்கிறார். குடி நபர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவராக, அரசின் சமூக ஒழுங்கினை பேணுபவராக இருக்கிறார். தனி நபர் சட்டத்தை, அரசை, எதையும் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் சுதந்திரத்துடன் இருக்கிறார். அதனால் சுதந்திரவாத அரசியல் அமைப்பில் எல்லோருமே டபுள் ஆக்ட்தான்.

BJP Annamalai Governor Ravi politics with Coimbatore car blast

அண்ணாமலை அரசியல்  

அண்ணாமலை ஓர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கலாம். அவருக்கு அரசை விமர்சிக்க முழு உரிமை இருக்கலாம். தனி நபராக, அரசியல்வாதியாக அவர் அதை செய்யத்தான் வேண்டும்.

அதே சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது என்றால் ஒரு குடி நபராக அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்கு புலனாய்வு செய்வதற்கும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் அவகாசம் தர வேண்டும். அரசின் அந்த முயற்சிகளில் தலையிடுவது போல, நிலைமையைச் சிக்கலாக்குவது போல பேசக்கூடாது.

அவருக்கு அரசின் செயல்பாடுகள் மீதோ, செயலின்மை மீதோ விமர்சனம் தோன்றினால் கூட, நிலைமை கட்டுக்குள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அரசு நிலையைக் கையாள அனுமதிக்க வேண்டும். போதுமான அவகாசம் கொடுத்த பின் அரசின் நடவடிக்கைகளில் போதாமை இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

ஆனால், ஒரு கார் வெடிப்பு நிகழ்ந்தவுடனேயே அரசு புலனாய்வை மேற்கொள்வதற்கு போதிய அவகாசம் தராமலேயே பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்துவது, நிலைமையை பூதாகரமாக்கிப் பேசுவது, மக்களிடையே பீதியைக் கிளப்புவது எல்லாம் மோசமான அரசியல்.

அவர் எப்படிப் பேச வேண்டும்? “அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாரதீய ஜனதா கட்சி அதற்கு முழு ஒத்துழைப்பை தரும்” என்று பேசினால் அது அரசியல் நாகரிகம். அதற்கு பதிலாக எடுத்த எடுப்பிலேயே அரசை குற்றம் சாட்டி பேசுவது என்பது மிகப்பெரிய அநாகரிகம். ஏனெனில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஒட்டுமொத்த குடிமைச் சமூகத்துக்கும் எதிரானது. அந்த இட த்தில் எல்லா குடி நபர்களும் அரசுடன் முதலில் இணைந்து நிற்பதுதான் சரியானது.

போதிய அவகாசம் கொடுத்த பின் அரசு மெத்தனமாக இருந்தாலோ, சரிவர விசாரணை செய்ய தவறினாலோ, குற்றவாளிகளைத் தப்ப விட்டாலோ பின்னர் விமர்சனம் செய்யலாம். அது முறையான அரசியலாக இருக்கும். இங்கு இடம், பொருள், ஏவல்தான் பிரச்சினையே தவிர அரசை விமர்சிக்கக் கூடாது என்பதல்ல.

ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. முதல்வரோ, பிரதமரோ அனைவருக்கும் பொதுவானவர்கள். ஒரு தனி நபர் அவர்கள் சார்ந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதால், ஒரு குடி நபராக அவர்களை மதிக்காமல் இருக்க முடியாது. இது எதிர்க்கட்சிக்காரர்களுக்கும் பொருந்தும்.  

எனவேதான், வழக்கமான ஆட்சியின் செயல்பாடுகளை அவசரப்பட்டு அரசியல் ஆதாயம் கருதி விமர்சனம் செய்யும்போது “இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என்று சொல்கிறார்கள். அதற்கு மாறாக, ஆபத்தான சமயத்தில் ஆட்சிக்கு, பொது நன்மைக்கு ஆதரவாகப் பேசி அரசியல் செய்யுங்கள், அதன் பிறகு தேவைப்பட்டால் மோதல் அரசியல் செய்யுங்கள் என்றுதான் கூற வேண்டும்.

அரசியல்வாதி, அரசியல்தான் செய்ய வேண்டும். ஆனால், அது பொது நன்மைக்கு எதிரான அரசியலாக இருக்கக் கூடாது. குறிப்பாக மத அடையாளவாத அரசியல் செய்யும் பாரதீய ஜனதா கட்சி, மக்களிடையே மோதலை தூண்டும் அரசியலைச் செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.

BJP Annamalai Governor Ravi politics with Coimbatore car blast

ஆளுநரின் அரசியல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தன் கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். கேட்டால் அவரும் ஒரு தனி நபர்; அவருக்குக் கருத்துகள் இருக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள். இது சுத்தமாக அரசியல் தத்துவமே புரியாத, தெரியாத அறியாமைக்காரர்களின் கூற்று.  

குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகிய பதவிகள் குடியரசின் குறியீட்டுத் தலைமைப் பதவிகள். அந்தப் பதவிகளை ஏற்பவர்கள் முதல் குடி நபர்கள் என்று அறியப்படுவார்கள். அவர்கள் அந்தப் பதவியை வகிக்கும் வரை பொதுமன்றத்தில் அவர் தனி நபர்களாக பேசவே கூடாது. அவர்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அரசை பற்றிய கருத்துகளை முதன்மை செயலர், உள்துறை செயலர் ஆகியோரிடமோ, பிரதமர், முதல்வர் ஆகியோரிடமோ கூறலாம்; கடிதம் எழுதலாம். பொதுவெளியில் அவர்கள் தனிப்பட்ட கருத்துகளைப் பேசுவது என்பது குடிமைச் சமூகத்தையே சீர்குலைக்கும் செயலாகும்.

இன்று ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசுகிறார். நாளைக்கு ஒரு நாத்திகர் ஆளுநர் ஆகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தீபாவளி கொண்டாடுவது தவறு: முட்டாள்தனமானது என்று கூறினால் அப்போது பாரதீய ஜனதா கட்சி என்ன சொல்லும்? கோயில்களை எல்லாம் மூடவேண்டும் என்று ஆளுநர் கருத்துக் கூறினால்? ஆளுநர் இப்படிப் பேசலாமா என்று கேட்பார்கள்தானே?

அதனால்தான் அனைவருக்கும் பொதுவான குடிமைச் சமூகத் தலைவரான குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ எந்த சொந்தக் கருத்தையும் பொதுவெளியில் பேசக் கூடாது. கோவை கார் வெடிப்பு வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தாமதமாக வழக்கை தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றிக் கொடுத்ததாக பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

இது அப்பட்டமான விதிமீறல். நேரடியாக அரசியல் செய்வது. அப்படி அவர் நினைத்தால் அவர் அரசுக்கு கடிதம் எழுத வேண்டும், முதல்வரையோ, முதன்மை செயலரையோ நேரில் வரச்சொல்லி விளக்கம் கேட்க வேண்டும். பொதுவெளியில் பேசுவது அரசியலமைப்பை சீர்குலைக்கும் செயல்.    

நாடெங்கும் பாரதீய ஜனதா கட்சி நியமித்த அவர்கள் கட்சியை, இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த ஆளுநர்கள் தேவையற்ற கருத்துகளைக் கூறுவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது என விபரீதமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்க மனம் போனபடி தாமதம் செய்து வருகிறார்.

குடிமைச் சமூகத்தின் குறியீட்டுத் தலைமையாக உள்ளவர்களே அரசியல்வாதிகளாக மாறினால், சட்டத்தின் ஆட்சி என்பது பெரிதும் பலவீனமடைந்து சமூகம் முற்றிலும் பிளவுபட்டுவிடும். சுதந்திரவாத தத்துவத்தில் சட்டத்தின் ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாகவும், மக்களாட்சி என்பது கருத்தியல் மோதும் களமாகவும் இருந்தால்தான் சமூகம் முரண்பட்டாலும் பொது இயக்கம் கொள்ளும்.

அதற்கு மாறாக எல்லோரும் முரண் அரசியல் பேசத் தொடங்கினால் சமூகம் மொத்தமும் அரசியல் மயமாகும்போது தவிர்க்க முடியாமல் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்படும். பாரதீய ஜனதா கட்சி நாட்டை அத்தகைய விபரீதமான பாதையில்தான் அழைத்துச் செல்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

BJP Annamalai Governor Ravi politics Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

சாலைகளில் குப்பை கொட்டும் கடைகளுக்கு ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி

உக்ரைனுக்கு ஆதரவாக புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் வாசகம்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

1 thought on “அண்ணாமலை அரசியலும், ஆளுநர் ரவியின் அரசியலும்!

  1. இவர்களின் நோக்கமே அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தி அதை அழித்துவிட்டு மனுதர்மத்தை சட்டமாக்குவதற்காகவே. ஏற்கனவே வரைவு தயாராகி விட்டது. 2024ல் இவர்களை விரட்டியடித்தாலொழிய அரசமைப்புக் கட்டத்தை காக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *