திமுக வாக்குறுதியும் ரெட் ஜெயண்ட் பட ரிலீசும்: அண்ணாமலை விமர்சனம்!

அரசியல்

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியதைக் காட்டிலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகளவு படங்களை ரிலீஸ் செய்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இன்று (பிப்ரவரி 19) காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசன் வாக்கு சேகரித்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “ஈரோடு கிழக்கில் 1 லட்சத்து 21ஆயிரம் மகளிர் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதிப்படி 100 ரூபாய் மானியம் கொடுத்திருந்தால் 22 மாதத்தில் 2200 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது வராது.

ஈரோடு கிழக்கில் திமுகவினர் மக்களைப் பட்டி பட்டியாக அடைத்து வைத்துள்ளனர். பட்டிக்குள் உட்கார திமுக கொடியைக் கொடுத்து அனுப்புகின்றனர். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நினைத்தால் திமுக 1950, 60 காலத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

எங்கேயும் இல்லாத அநியாயம் தென்னரசுக்கு நடக்கிறது. அவர் பிரச்சாரம் செய்யச் சென்றால் அவரை எதிர்த்து 30 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

பட்டி பட்டியாய் மக்களை அடைத்து வைத்து 1000, 1500 ரூபாய் கொடுக்கிறார்கள். கொடி பிடித்து நடந்து சென்றால் 500 ரூபாய் கொடுக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு மக்களுக்கு 27ஆம் தேதி வரைதான் திமுகவினர் ராஜ மரியாதை கொடுப்பார்கள். ஆனால் தென்னரசு அதே சாதாரண மனிதராகத்தான் 27ஆம் தேதிக்கு பிறகும் இருப்பார்.

ஆடி மாத காற்றில் பட்டம் பறப்பது போல் பறந்துகொண்டிருக்கிற திமுக அமைச்சர்கள் எல்லாம் தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போவார்கள்.

இன்று சாராய அமைச்சர் ஓடி ஓடி வாக்கு சேகரிக்கிறார். அவர் நின்று பிரச்சாரம் செய்தால், மக்கள் வாக்குறுதி பற்றிக் கேட்பார்கள் என்பதால் ஓடி ஓடி பிரச்சாரம் செய்கிறார்.

தென்னரசு இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அதிமுக ஆட்சியைப் பிடிக்கப் போவது கிடையாது. எனினும் தமிழகத்தை அதள பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கக் கூடிய திமுக அரசு கொஞ்சமாவது சுதாரித்து மக்களுக்கு நல்லது செய்யும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பட்டிக்கு சென்று வந்து என்னிடம் ஒருவர் சொன்னார். பட்டிக்குச் சென்று வந்தது கூட பிரச்சினை இல்லை. 3 மணி நேரம் உதயநிதி படத்தைப் போட்டுவிட்டார்கள் என்கிறார். இதைவிடக் கொடுமை இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்றியதைக் காட்டிலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்கள் தான் அதிகம்.

மொத்தமாக திமுக நிறைவேற்றிய வாக்குறுதி 49. ஆனால் ரெட் ஜெயண்ட் 22 மாதத்தில் 60 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்திருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரியா

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: கேப்டன்சியிலிருந்து கே.எல்.ராகுல் நீக்கம்!

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *