தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் பலம் என்ன? வாக்கு சதவிகிதம் சொல்லும் டேட்டா ரிப்போர்ட்!
தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எத்தனை வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
2014 பாராளுமன்றத் தேர்தல்
2014 பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, கொ.ம.தே.க போன்றவை தற்போது திமுக கூட்டணியில் உள்ளன. தேமுதிக இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை. பாமக 8 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 2014 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரியவில்லை. 2014 தேர்தலின் போது இரண்டு முறையாக தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியும், இந்தியா முழுவதும் மோடி அலை என்று சொல்லப்பட்ட பிம்பமும் வாக்குகளை மாற்றும் முக்கியமான காரணிகளாக பார்க்கப்பட்டன.
கட்சி | வாக்கு சதவீதம் | மொத்த வாக்குகள் |
பாஜக | 5.56% | 22,23,566 |
பாமக | 4.5% | 18,04,812 |
மொத்தம் | 10.06% |
ஐ.ஜே.கே கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட்டதால் அவர்களது வாக்கு எண்ணிக்கை பாஜகவின் வாக்கு சதவீதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தல்
2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், ஐ.ஜே.கேவும் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டது.
கட்சி | வாக்கு சதவீதம் | மொத்த வாக்குகள் |
பாஜக | 2.84% | 12,28,704 |
பாமக | 5.3% | 23,00,558 |
தமாகா | 0.53% | 2,30,711 |
ஐ.ஜே.கே | 0.08% | 36,125 |
மொத்தம் | 8.75% |
2019 பாராளுமன்றத் தேர்தல்
2019 பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தன. இந்திய அளவில் கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்கினாலும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று சொல்லப்பட்டது. எனவே இத்தேர்தலில் பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகளில் அதிமுகவின் வாக்குகள் செலுத்தும் தாக்கம் என்பது அதிகம். பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கட்சி | வாக்கு சதவீதம் | மொத்த வாக்குகள் |
பாஜக | 3.6% | 15,51,924 |
பாமக | 5.3% | 22,97,431 |
அமமுக | 5.2% | 22,29,849 |
தமாகா | 0.5% | 2,20,849 |
ஐ.ஜே.கே | 1.6% | 6,83,697 |
புதிய நீதிக் கட்சி | 1.1% | 4,77,199 |
மொத்தம் | 17.3% |
(ஐ.ஜே.கே திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது)
(புதிய நீதிக் கட்சி வேலூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது)
2021 சட்டமன்றத் தேர்தல்
2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தன. இந்த தேர்தலிலும் இக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் அதிமுகவின் ஆதரவு வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமானது தேமுதிக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கட்சி | வாக்கு சதவீதம் | மொத்த வாக்குகள் |
பாஜக | 2.6% | 12,13,670 |
பாமக | 3.8% | 17,58,774 |
அமமுக | 2.6% | 12,10,002 |
தமாகா | 0.64% | 2,20,849 |
ஐ.ஜே.கே | 0.01% | 6,83,697 |
மொத்தம் | 9.65% |
(ஐ.ஜே.கே மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது)
(தமாகா அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது).
கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற 4 தேர்தல்களில் 2019 பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் இக்கட்சிகளின் வாக்கு சதவீதம் 17 சதவீதத்தை அடைந்திருக்கிறது. அத்தேர்தலில் பாஜகவும், பாமகவும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமல்லாமல் டிடிவி தினகரன் அதிமுகவைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்புடன் இத்தேர்தலில் அமமுக பங்கேற்றதால் அக்கட்சியும் இத்தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் வாக்கு சதவீதம் பாதியாகக் குறைந்து போனது கவனிக்கத்தக்கது.
எனவே இக்கூட்டணி 10% என்பதைத் தாண்டுமா என்பதே இப்போதைய நிலையாக இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பது ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்!
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOLD RATE: மீண்டும், மீண்டும் உயரும் தங்கம்… இதுக்கு ஒரு எண்டு இல்லையா?
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஸ்டாலின்