வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பில் மோடி, அமித் ஷா தமிழக விசிட் பற்றிய புகைப்படங்கள் மொத்தமாக வந்து விழுந்தன. சிறிது நேரம் விட்டு தனது மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“நவம்பர் 11, 12 தேதிகளில் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டு அர்சியலை மிகவும் சூடாக்கிவிட்டிருக்கும் இந்த இருவரின் விசிட்டுகள் குறிப்பாக அதிமுகவுக்குள் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் வருகையின் போது எடப்பாடியும், பன்னீர்செல்வமும் வரவேற்றனர். வழியனுப்பும்போதும் இவர்கள் இருவரும் மதுரை விமான நிலையத்தில் ஆஜராகினர்.
மோடி இவர்கள் இருவரையும் அருகருகே சேர்த்து வைத்துக் கொண்டு பூக்களை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் மதுரை விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் அருகே சுமார் இருபது நிமிடங்கள் நின்றும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொள்ளவில்லை என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியானது.
அதுமட்டுமல்ல… பன்னீரையும் எடப்பாடியையும் பிரதமர் சேர்த்து வைக்க முயன்றார் என்ற தகவல் பரவியதைப் பார்த்து முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் சொல்லி தனி பிரஸ்மீட்டே நடத்தச் சொன்னார் எடப்பாடி. அதில், ‘நாமக்கல்லில் எடப்பாடி பேசியதைப் போல நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்’ என்று அதிரடியாக கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் போலவே மறுநாள் நவம்பர் 12 ஆம் தேதி அமித் ஷா கலந்துகொள்ளும் சென்னை கலைவாணர் அரங்கிலும் நடந்துவிடக் கூடாது அதாவது பன்னீர் அருகே இருக்கும் சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதால்தான் அந்த நிகழ்ச்சியையே தவிர்த்தார் எடப்பாடி.
இந்த பின்னணியில் கடந்த ஓரிரு தினங்களாக அதிமுகவின் மூத்த மாசெக்கள், முன்னாள் அமைச்சர்களிடம் எடப்பாடியே தொடர்புகொண்டு, ‘நம்ம கட்சித் தொண்டர்கள் என்ன நினைக்கிறாங்க?’ என்று கேட்டிருக்கிறார். அதாவது, ‘பிரதமர் மோடி வந்தபோது மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம், அமித் ஷா நிகழ்வுக்கு தான் போகாமல் தவிர்த்தது பற்றி கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள்?’ என்பதுதான் எடப்பாடியின் கேள்வி.
அதற்கு பல மாசெக்கள், ‘அண்ணே… நீங்க மதுரை விமான நிலையத்துக்கே போயிருக்கக் கூடாது. அம்மா இருந்தப்ப யாரா இருந்தாலும் போயஸ் கார்டன் வீடு தேடிப் போய்தான் பாப்பாங்க. இன்னிக்கும் தமிழ்நாட்ல நாமதான் திமுகவுக்கு இணையான பெரிய கட்சி.
இந்த நிலைமையில பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில உங்களை சந்திக்க நேரம் கொடுத்திருந்தா நீங்க போயிருக்கலாம். ஆனா ஏர்போர்ட்ல போய் காத்திருந்து, மோடிக்கு பூ கொடுத்து அதை வச்சி பன்னீரையும் எடப்பாடியையும் பக்கத்து பக்கத்துல நிப்பாட்டி வச்சாருனு செய்திகள் கிளம்பினதுதான் மிச்சம்.
அமித் ஷா நிகழ்ச்சியை எப்படி தவிர்த்தீங்களோ அதேபோல மோடியை வரவேற்பதையும் தவிர்த்திருக்கணும். இதைத்தான் கட்சிக்காரங்க விரும்புறாங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் அவர்கள், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிச்சாரு. ஆனா அதுக்கப்புறமும் குடியரசுத் தலைவர் தேர்தல்ல நாம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தோம்.
இப்பவரைக்கும் அதிமுக பாஜக அதிகாரபூர்வ கூட்டணினு எதுவும் கிடையாது. இப்படி இருக்கும்போது எதுக்காக பன்னீரோட நாம போட்டி போட்டுக்கிட்டு மோடி அமித் ஷாவை பாக்க ஓடணும்? பன்னீருக்கு எந்த பலமும் கிடையாது. அதனால மோடியையும் அமித் ஷாவையும் தேடி ஓடுறாரு.
நம்மகிட்ட மக்கள் பலமும் தொண்டர் பலமும் இருக்கு. அதனால நாம இனிமே மோடி, அமித் ஷா பின்னாடி ஓட வேணாம்னு கட்சிக்காரங்க நினைக்கிறாங்க. மதுரை ஏர்போர்ட்ல நீங்க அப்படி நின்னதை கட்சித் தொண்டர்கள் விரும்பவே இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக மாசெக்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பாஜகவை விட்டு மெல்ல மெல்ல தள்ளி செல்லும் முடிவில்தான் இருக்கிறார். இந்த நிலையில் கட்சித் தொண்டர்களின் விருப்பம், கட்சி நிர்வாகிகளின் விருப்பமாக மாவட்டச் செயலாளர்கள் சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
எடப்பாடியே கேட்டது போல அதிமுகவின் சில மூத்த நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து, ‘இனிமே பாஜகவோட நீக்கு போக்கா பாலிஷா போக வேண்டிய தேவை நமக்கு இல்லை. இப்பவே பாஜககிட்டேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிடுவோம்.
அப்பதான் திமுகவுக்கு எதிரான பலமான கூட்டணியை நீங்க நாமக்கல்லில் சொன்னதைப் போல நாம உருவாக்க முடியும். பாஜகவை விட்டு நாம் முற்றிலும் விலகிட்டா காங்கிரஸ் கூட மீண்டும் அம்மா காலம் போல நம்ம கிட்ட கூட்டணி அமைக்கறதை பத்தி யோசிக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
தொண்டர்களின் எண்ணங்களை நிர்வாகிகள் மூலமாக அறிந்து கொண்டிருக்கும் எடப்பாடி, தனது அடுத்த கட்ட நகர்வுகளை எப்படி வைக்கப் போகிறார் என்பதை அதிமுகவினர் மட்டுமல்ல, பாஜக மட்டுமல்ல, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கூட ஆர்வமாக காத்திருக்கின்றன, ஏனென்றால் எடப்பாடி எடுக்கப் போகும் முடிவால் தமிழ்நாட்டில் அதிமுக- பாஜகவில் மட்டுமல்ல அதற்கு வெளியே மற்ற கட்சிகளின் முடிவுகளும் மாறலாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
சானியா மிர்சாவை வாழ்த்திய சோயிப் மாலிக்
எடப்பாடிக்கு புதிய சிக்கல்: மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடா?