டிஜிட்டல் திண்ணை:  பாஜக கூட்டணி-  மாசெக்களிடம் தனித்தனியே கருத்து கேட்கும் எடப்பாடி

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  ஜெயக்குமார், அண்ணாமலை பேட்டிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன, அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் அவரது கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது பாஜக தேசிய தலைவர் நட்டாவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் மூலம் கடந்த சில மாதங்களாக நிலவிவந்த அதிமுக-பாஜக  வார்த்தைப் போர் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வது போல் ஓய்ந்த வார்த்தைப் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

இதைத் தொடங்கி வைத்தவர் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர். அமித் ஷாவுடனான சந்திப்பில் அண்ணாமலையும் இருந்ததை குறிப்பிட்ட அவர் அதிமுக ஆறாக உடைந்திருக்கிறது என்றும் விமர்சித்தார்.

மேலும் அதிமுகவுக்கு கவர்ச்சிகரமான தலைமை இல்லாததால் 25 சீட்டுகளில் போட்டியிடலாம், கேட்கும் நிலையில் இல்லை கொடுக்கும் நிலையில்தான் பாஜக இருக்கிறது’ என்றெல்லாம்  அதிமுக மீது அம்புகளை ஏவினார் சேகர். இதை அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கண்டித்தார்.

BJP Alliance Edapadi

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசித்த ஜெயக்குமார் இன்று (ஏப்ரல் 30)  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘அமித் ஷா அவர்களுடனான சந்திப்புக்குப் பிறகும் பாஜகவினர் அதிமுகவை தொடர்ந்து விமரிசித்து வருகிறார்கள்.

இது அண்ணாமலையின் அனுமதியின் பேரில்தான் நடக்கிறதா? அல்லது அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் பாஜக இல்லையா? இதற்கு அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலை சொல்லித்தான் சேகர் அதிமுகவை தாக்கினார் என்று எடுத்துக் கொள்வோம்’ என்று பேசினார்.

இதையடுத்து இன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘ஊழல் எதிர்ப்பு என்பதில் இந்த கட்சி அந்த தலைவர் என்று எந்த பாரபட்சமும் கிடையாது. எல்லா ஊழல்வாதிகளையும் என் நடைப் பயணத்தின்போதும் அம்பலப்படுத்துவேன்’  என்று அதிமுகவை மறைமுகமாகத் தாக்கியவர், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகம் பிரதமர் மோடிதான். இப்போது கூட்டணியில் எத்தனை சீட் என்பது பற்றியெல்லாம் பேசப்படவில்லை’ என்று நழுவினார்.

இதற்கிடையே டெல்லி சென்று வந்த பிறகு  ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம்,  ‘நாம் பாஜகவின் டெல்லி தலைவர்களிடம் சுமுகமான உறவில் இருப்பது வேறு, தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி என்பது வேறு.

நாம் தமிழகத்தில் பாஜகவை தூக்கி சுமக்க வேண்டாம். அண்ணாமலையும் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. அதனால் அதிமுக தலைமையிலான கூட்டணியோடு நாம் தேர்தலை சந்திப்போம்.  பாஜக சிபிஐ அமலாக்கத்துறை மூலம் நம் மீது நடவடிக்கை எடுத்தால் அதையெல்லாம் எதிர்கொள்வோம். இனியும் பாஜகவுக்கு பயப்பட்டுக் கொண்டிருக்க முடியாது’ என்று கூறியுள்ளார்கள்.

அவர்களிடம் எடப்பாடியும், ‘நாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் இன்னும் ஒரு முடிவுலதான் இருக்காங்க.  நீதிமன்றம் மூலம் ஜெயித்தும் தேர்தல் ஆணையம் மூலம் நாம் ஜெயித்தும் ஓபிஎஸ்-சை சேர்த்துக்கங்க என்று சொல்கிறார் அமித்ஷா. மகாராஷ்டிராவில் ஷிண்டேவிடம் இதைச் சொல்லுவார்களா?’ என்று கேட்டிருக்கிறார். 

BJP Alliance Edapadi

எடப்பாடி பழனிசாமியும் தன்னை சந்திக்க வரும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடமெல்லாம் பாஜக கூட்டணி பற்றி கருத்து கேட்டிருக்கிறார். அதில் பலரும், ‘பாஜக கூட்டணி வேண்டாம். அதிமுக தனியாக கூட்டணி அமைக்க வேண்டும். ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி, பிரேமலதா, தனியரசு போன்றவர்கள் எல்லாம் அதிமுக பக்கம் வந்தால் ஜெயிப்போமா பாஜக பக்கம் சென்றால் ஜெயிப்போமா என்று யோசித்தால் அதிமுக பக்கம்தான் வருவார்கள்.

எனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம் 2024 தேர்தலிலேயே பாஜக கூட்டணி இல்லாமல் நிற்பதுதான் நல்லது’ என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள்.  சில தினங்களாகவே யாரைப் பார்த்தாலும் எடப்பாடி இதே கேள்வியைத்தான் கேட்டு வருகிறார். அவர்கள் சொல்லும் பதிலை கவனித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகிறார்” என்கிற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃல் லைன் போனது வாட்ஸ் அப்.

சதத்தை தவறவிட்ட கான்வே : பஞ்சாப்புக்கு இலக்கு 201

முதல்வரின் கள ஆய்வு : 4 துறை அதிகாரிகள் மாற்றம்!

+1
1
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0