அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று நேற்று (செப்டம்பர் 18) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், இதுகுறித்து உறுதியான கருத்து பாஜக தரப்பில் இருந்து வெளிவரவில்லை. அதேநேரம் அதிமுகவில் அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் எதிராகக் குரல்கள் அதிகரித்துள்ளன.
இன்று (செப்டம்பர் 19) காலை கோவை மாவட்ட அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி,
“அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மதுரை மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மதுரை மாநாட்டைப் பார்த்து திமுக பயந்து போயிருக்கிறது.
நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளது. ஆனால் இதில் அதிமுகவில் சிலருக்கு வேறுபட்ட கருத்து உள்ளது என்று சமூக தளங்களில் திமுகவின் தூண்டுதலின் பேரில் பரப்பப்படுகிறது. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
எங்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் தலைவர். அவர் கருத்து என்னவோ அதுதான் எங்கள் கருத்து. சிலர் பாஜக கூட்டணி பற்றி வேலுமணி பேசவில்லை, தங்கமணி பேசவில்லை என்று சொல்லி வருகிறார்கள். எடப்பாடி சொன்னால் நாங்கள் கிணற்றில் கூட குதிப்போம். இதில் திமுகவும், பாஜகவும், ஒரு பத்திரிகையும் எங்களுக்குள் சிண்டு முடிய பார்க்கிறது.
கூட்டணிக்காக எங்கள் தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் எடப்பாடியாரின் பேட்டியை பாருங்கள். நிதானமாக பக்குவமாக பேட்டி கொடுப்பார். அவர்தான் தலைவர். ஆனால் அங்கே அண்ணாமலை எப்படியெல்லாம் பேசி வந்திருக்கிறார்? எங்கள் அம்மாவை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அன்றைக்கே கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினோம். இப்போது பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசுகிறார். பெரியாரை பற்றி பேசுகிறார். பெரியார் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். அண்ணா வந்த பிறகுதான் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு மாணவர்கள் வந்தனர்.
நாம் இத்தனை பேர் சாதாரண மக்கள் அரசியல்வாதிகளாக அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் அண்ணாதான். கிளைச் செயலாளர் கூட பொதுச் செயலாளர் ஆவது நமது எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கத்தில்தான். அண்ணாமலை உண்மைக்கு மாறாக திரித்து பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அன்று அந்த நிகழ்ச்சியில் அண்ணாவோ பிடிஆரோ மன்னிப்பு கோரவும், வருத்தம் தெரிவிக்கவும் இல்லை என்பதுதான் உண்மை.
அண்ணா பெயரில் இருக்கும் கட்சி எங்கள் கட்சி. எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம். தேர்தலுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி பிரச்சினைக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக உறுப்பினர்கள் முடக்கினோம். அன்று பாஜகதான் ஆட்சி செய்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைகிற கூட்டணிதான் 40 இடங்களும் வெல்லும். திமுக ஊடகங்களை வைத்து பிரச்சினைகளை திசை திருப்பப் பார்க்கிறது.
பூத் கமிட்டி பணிகளை தீவிரமாக்க வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல், பாசறை அமைத்தல் பணிகளை உறுப்பினர் சேர்க்கை போல தீவிரமாக செய்ய வேண்டும். மேலோட்டமாக யாரும் வேலை பார்க்காதீர்கள். நமக்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். எல்லா பகுதிகளிலும் முழுமையாக இறங்கி வேலை செய்யுங்கள். தயவு செய்து நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வையுங்கள். ஒற்றுமையாக இருங்கள். நமக்குள் இருக்கும் பிரச்சினை அண்ணன் தம்பி பிரச்சினை. நமக்கு எதிரி திமுகதான்” என்று பேசினார் எஸ்.பி.வேலுமணி.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, “நான், தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்களுக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். டெல்லியெல்லாம் எங்களுக்கு ஒன்றும் கிடையாது” என்று கூறினார்.
-வேந்தன்
உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!