இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்ட நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார்.
அங்கு பாஜக தலைவர்களுடன் அலோசனை நடத்தவுள்ளார். மீண்டும் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பாஜக மேலிடம் ஆலோசிக்கலாம் என கூறப்படும் நிலையில், பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்தாலும், இன்னும் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று (அக்டோபர் 02) சேலம் மாநகர் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் திருவாக்கவுண்டனூரில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இங்கு அதிகமான இஸ்லாமிய மக்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் எண்ணியபடியே அதிமுக நடந்துகொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
அனைத்து இஸ்லாமிய மக்களிடம் சென்று அதிமுக எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற வாக்குறுதியை நீங்கள் உறுதியாக கொடுக்கலாம். கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை பாதுகாக்க நாங்கள் இருப்போம். நீங்கள் தைரியமாக இதை சிறுபான்மையின மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குசேகரிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் தெரிவிக்கப்பட்டன.
அதன்படி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாஜக கூட்டணியில் இருந்தும், தேஜ கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகிக் கொள்கிறது என்று முடிவெடுக்கப்பட்டது. இது பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நான் எடுத்த முடிவல்ல. ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு.
பத்திரிகைகளில் தனது கருத்தை எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். ஒரு கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதுதான் இறுதி முடிவு.
அதிமுக என்பது வலுவான கட்சி. தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி. அதன்படி தொண்டர்களின் உணர்வின் அடிப்படையில் தான் கூட்டணி முறிவு குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊடகங்களில் பேசும் போது, யார் பிரதமர் என்று முன்னிறுத்தி பேசுகிறார்கள். ஒரிசா, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் யார் பிரதமர் என்று முன்னிறுத்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்கள்.
தங்களுடைய மாநிலங்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் செயல்படுகிறார்கள். அதுபோன்று தமிழ்நாட்டுக்காக நாங்கள் பாடுபடுவோம்.
சில நேரத்தில் நாம் கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம். அவர்கள் தேசிய கட்சியாக இருக்கிறார்கள். தேசிய அளவில் முடிவெடுத்து நமக்கு உடன்படாத சில பிரச்சினைகளில் கூட கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். இனி அந்த நிலை இல்லை என்பதையும் தெளிவுப்படுத்துகிறேன். அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு மக்கள் தான் முதலாளிகள்” என்று குறிப்பிட்டார்.
புள்ளி விவரங்களோடு பேசுங்கள்
மேலும் அவர், “அதிமுக அரசு செய்த திட்டங்களை வாக்காளர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இந்த திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகால அவலங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இதில் 95 சதவிகித வாக்குறுதிகள் நிறைப்பட்டிருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறிகொண்டிருக்கிறார்.
எனவே திமுக அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தப்படவில்லை என்பதையும் புள்ளி விவரத்தோடு மக்களிடம் எடுத்து சொல்வது பூத் கமிட்டியின் பொறுப்பு,
திமுக 10 சதவிகித வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றியிருக்கிறது. 90 சதவிகிதம் நிறைவேற்றவில்லை” என்று குறிப்பிட்டார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாளில் வெளியான இரண்டு அப்டேட்… விஜய் ரசிகர்கள் குஷி!
உதயநிதிக்காக போராடிய திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு!