பாஜக அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள் கூட்டத்தில, ‘இன்றைக்கு இல்லை என்றைக்கும் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்று முடிவெடுத்து கட்சித் தலைமை அறிவித்துவிட்டது.
ஆனால் இது நிரந்தரம் அல்ல, தேர்தல் சமயத்தில் சேர்ந்துவிடுவார்கள் என தமிழக அரசியலில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தேஜ கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கூட்டணி முறிவு குறித்து டெல்லியில் உள்ள முக்கியத் தலைவர்களிடம் பேசியிருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் கூட்டணி முறிவு குறித்து இதுவரை மாநில பாஜக தலைவர் வாய் திறக்கவில்லை. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கோவை கவுண்டம்பாளையத்தில் பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, பாதயாத்திரையில் அரசியல் பேசுவதில்லை என்று கூறி பேச மறுத்துவிட்டார்.
இந்நிலையில், பாஜக தலைமையகமான சென்னை கமலாலயத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக பாஜக கூட்டணி முறிந்த நிலையில் பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
Comments are closed.