உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!

அரசியல்

அதிமுக கூட்டணியில் பாஜக இனி இல்லை என்று பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை குறிப்பிட்டு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்தார். அதற்கு இதுவரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

அதே வேளையில் தற்போது எதிரும், புதிருமாக மாறியுள்ள அதிமுகவினரும், பாஜகவினரும் தற்போது போட்டி போட்டு கண்டன போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ”கூட்டணியாவது… கூந்தலாவது… நன்றி, இனி வராதீர்கள்!” என்று அம்மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மதுரையின் பல்வேறு இடங்களில் ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு தான் என்ற வசனத்தோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகியின் போஸ்டர், வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “அரசியல் தளத்தில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை முன்னிறுத்துவதோடு, அதற்காக மதுரை மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட்டு வரும் சூழலில் அதை சீர்குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் வகையிலும் இந்த சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை மிரட்டும் வகையில் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதை வெளியிட்ட நபர்கள் மீது மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுவரொட்டி வெளியிட்டதற்காக பாஜக தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இத்தகைய வன்முறையாளர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தி ஜனநாயகம் காக்க மதுரை மக்கள் முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சரவணன்

பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியாவிடை: மயங்கி விழுந்த பாஜக எம்.பி!

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு: முதல்வர் உத்தரவு!

 

+1
0
+1
3
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!

  1. உண்டியல் வேலையை மட்டும் பார்க்கவும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *