அ.இ.அ.தி.மு.க – பாஜக: பகையுறவு பரிதாபங்கள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

திராவிட முன்னேற்றக் கழகம், அதன் கூட்டணி கட்சிகளிடையே கருத்தியல் அடிப்படையிலான பிணைப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை ஒன்றிய அரசில் பாஜக ஆட்சியின் மாநில சுயாட்சி உரிமைகளுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான கொள்கைகள், நடைமுறைகளுக்கு, பாஜக-வின் மத அடையாளவாத சனாதன தர்ம கருத்தியலுக்கு எதிராக முழு மூச்சாக குரல்கொடுக்கின்றன. இணைந்து இயங்குகின்றன.

அதற்கு எதிர்முனையில் இயங்கவேண்டிய கூட்டணியில் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது. அது என்னவென்றால் அ.இ.அ.தி.மு.க-விடம் பரவலான கட்சி அமைப்பு, வலைப்பின்னல் இருக்கிறது. அதற்கான வாக்கு வங்கி, தி.மு.க எதிர்ப்பு வாக்கு வங்கி இருக்கிறது. ஆனால் அதனிடம் தனித்துவமான கருத்தியல் எதுவும் இல்லை. பெருமளவு திராவிட கருத்தியலின் எல்லைக்குள்தான் அது அரசியல் செய்ய இயலும்.

பாரதீய ஜனதா கட்சியிடம் இந்துத்துவம், சனாதன தர்மம், அகில இந்திய தேசியம், ஒற்றை தேசிய அரசில் அதிகார குவிப்பு, பெருமுதலீட்டிய ஆதரவு என்பது போன்ற தீவிரமான கருத்தியல் கலவை உள்ளது. அது திராவிட கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் பாஜக-வுக்கு தமிழகத்தில் வலுவான கட்சி அமைப்பு இல்லை. அதன் கருத்தியலுக்கும் ஆதரவு இல்லாத நிலையில் அதனால் தமிழ்நாட்டில் கட்சி அமைப்பை வலுப்படுத்த முடியவில்லை.

இரண்டு கட்சிகளில் ஒன்றிடம் கருத்தியல் இல்லை, மற்றதிடம் கட்சி அமைப்பு இல்லை. அதனால் இரண்டையும் இணைத்து கூட்டணி வைத்துக் கொள்ளலாமே என்றால் அதில்தான் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஏனெனில் அந்தக் கருத்தியலும், இந்தக் கட்சி அமைப்பும் ஒட்டாது.  

ஏனெனில் பாஜக கருத்தியலை அ.இ.அ.தி.மு.க எதிர்க்காமல் இருக்கலாமே தவிர ஆதரித்து பேச முடியாது. பேசினால், அது திராவிட கட்சியாக, தி.மு.க-வுக்கு எதிரியல் கட்சியாக இருக்க முடியாது. பாஜக கருத்தியலை எதிர்த்துப் பேசினாலும், அதில் தி.மு.க-விடம் போட்டியிடும் அளவுக்கு தீவிரம் காட்டாவிட்டால் எடுபடாது. அதற்கான ஆற்றல் அந்தக் கட்சியில் இல்லை.

பாஜக-வைப் பொறுத்தவரை அது அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும்வரை அதன் கட்சி அமைப்பை அதன் கருத்தியலுக்கு ஏற்ப வளர்க்க முடியாது. அதன் கருத்தியலையும் வளர்க்க முடியாது. உடனடி தேர்தல் கணக்குகளுக்காக கூட்டணி வைக்கலாமே தவிர, நீண்டகால நோக்கில் அது தனித்துவமான கட்சியாக வளர முடியாது.

இதனால் இரண்டு கட்சிகளிலும் உட்கட்சி குழப்பங்களும், ஒரு கட்சி இன்னொரு கட்சிக்குள் ஊடுருவதுமாக பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. ஒரு சந்தர்ப்பவாத, பொருந்தாக் கூட்டணியாக, இந்தக் கட்சிகளுக்கிடையே பகையுறவு நீடிக்கிறது. இரண்டும் ஒன்றையொன்று விட்டு விலகவும் முடிவதில்லை, முழுமனதாக சேர்ந்து இயங்கவும் முடியவில்லை, சேர்ந்து இயங்கினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதும் இயலுவதில்லை.

அ.இ.அ.தி.மு.க பிரச்சினை

அ.இ.அ.தி.மு.க காலம், காலமாக தி.மு.க-வுக்கு எதிர்ப்பு, மாற்று என்ற அளவில் இயங்கி வந்துள்ளதே தவிர, தனக்கென்று தனியான கருத்தியல் எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. மாநில நலன், மக்கள் நலன் என பொதுப்படையாக தி.மு.க கருத்தியலை பிரதியெடுத்து, அதைச் சற்றே நீர்த்துப்போன வடிவில் செயல்படுத்தும் தி.மு.க எதிரியல் கட்சியாகவே விளங்கி வந்துள்ளது.  

இங்கே நாம் எதிரியல் கட்சி என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஜெர்மானிய அறிஞர் கார்ல் ஷ்மிட்டின் சிந்தனைகள் பயன்படும். அவர் அரசியலை நண்பன், எதிரி இணைகளே என்று வரையறுத்தார். அதாவது ஒரு நண்பர்கள் குழு கட்டமைப்பு இன்னொரு நண்பர்கள் குழு கட்டமைப்பை எதிர்க்க வேண்டும். இந்த நட்பு x எதிர்ப்பு முரணே அரசியலின் அடிப்படை.

ஷ்மிட் இந்த நட்பு, எதிர்ப்பு கருத்தியல் அடிப்படையில் அமைய வேண்டும் என்றோ, வேறு நலன்கள், நம்பிக்கைகள் சார்ந்தோ அமைய வேண்டும் என்றுகூட கூறவில்லை. இப்படி நண்பர்கள், எதிரிகள் அணிசேர்க்கை மனிதர்களின் அடிப்படை குணம், அதற்குக் காரணமே தேவையில்லை என்று கணித்தார். காரணங்களை சேர்த்துக் கொள்ளலாம்; ஆனால் அடிப்படையில் காரணமற்றும் இருக்கலாம்.

சமூக வாழ்க்கையின் ஒவ்வோர் அலகுகளிலும், குடும்பத்துக்குள்ளேயே கூட, மனிதர்களுக்கிடையே நட்பும், விரோதமும் உருவாகிவிடும். வாரிசு படத்தில் வருவது போல சகோதரர்களே எதிரிகளாகிவிடுவார்கள். ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்கள், ஒரு சமூக சேவை அமைப்பின் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் எதிரிகளாகிவிடுவார்கள்.

தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபோது அவர் அண்ணா பெயரில்தான் கட்சி தொடங்கினார். அண்ணாயிசம்தான் கொள்கை என்றார். அதனால் தி.மு.க-வுடனான முரண் கருத்தியல் முரணாக உருவாகவில்லை. எதிரியல் முரணாகத்தான் உருவானது. அதனால் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குச் செல்பவர்கள் சுலபத்தில் அதில் முக்கியத்துவம் பெறுவதும் சாத்தியமாகத்தான் இருந்து வந்துள்ளது.

BJP ADMK politics Rajan Kurai

ஆழமாகப் பார்த்தால் தி.மு.க-வில் கொள்கைப் பற்றும், உறுதியும் அதிகம் இருக்கும். அ.இ.அ.தி.மு.க-வில் தனி மனித வழிபாடும், தலைமை வழிபாடும், கொள்கையில் நீர்த்துப் போன தன்மையும் இருக்கும்.

இரண்டு கட்சிகளும் பிரிந்த ஐம்பது ஆண்டுகளில் கலைஞர் கொள்கைக் காவலராக, கோட்பாட்டு வகுப்பாளராக சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகிய லட்சியங்களை நோக்கி தொடர்ந்து பயணிப்பவராக விளங்கி வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவருமே மாநில சுயாட்சி என்ற கொள்கையை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டவில்லை. மாநில உரிமைகளுக்காகப் பேசினாலும், சித்தாந்த அளவிலும், நடைமுறையிலும் ஒன்றிய அரசுக்கு அனுசரணை காட்டுபவர்களாகவும் பல நேரம் விளங்கினார்கள்.

கலைஞரின் லட்சியப் பற்று உறுதியே, அ.இ.அ.தி.மு.க-வும் அதிகம் விலகி சென்றுவிடாமல் செய்தது. ஏனெனில் தேர்தல் களத்தில் தி.மு.க-வைச் சந்திக்க வேண்டுமென்றால் திராவிடக் கருத்தியலை விட்டு அதிகம் விலகி சென்றுவிட முடியாது என்பதே அ.இ.அ.தி.மு.க-வைக் கட்டுப்படுத்தியது. மக்கள் நலத் திட்டங்களிலும், தி,மு.க-வுடன் தொடர்ந்து போட்டி போட வேண்டிய தேவை அ.இ.அ.தி.மு.க-வுக்கு இருந்தது.   சமூக நீதி கொள்கைகளிலும் தி.மு.க-வுக்கு ஈடு கொடுக்க வேண்டியிருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜக ஓர் ஈர்ப்புமிக்க தலைவர் இல்லாத நிலையில், பலவீனமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தலைவர்களை பயன்படுத்தி அ.இ.அ.தி.மு.க-வைப் பிளந்து கையகப்படுத்த நினைத்தது. ஓ.பி.எஸ் அதன் கைப்பாவையானார். சசிகலா சிறைக்குச் சென்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமியும் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள பாஜக வசம் செல்ல தீர்மானித்தார்.  ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆகிய எதிரிகளை பாஜக இணைத்து வைத்து அவர்கள் இருவருக்குமிடையே பஞ்சாயத்து பேசும் இடத்தில் தன்னை இருத்திக் கொண்டது.

இந்தக் உட்கட்சி பூசலினாலும், ஆளுமையற்ற தலைவர்களாலும் ஒன்றிய பாஜக அரசின் தீவிரமான கருத்தியல் முன்னெடுப்புகளை அ.இ.அ.தி.மு.க-வால் எதிர்க்க முடியவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம், நீட் தேர்வு திணிப்பு என்று அலையலையாக நிகழ்ந்த தாக்குதல்களைக் கண்டிக்கவோ, விமர்சிக்கவோ, எதிர்க்கவோ திராணியற்று போயிற்று அ.இ.அ.தி.மு.க.

அதற்கு மேலும் காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம், விசேஷ உரிமைகள் நீக்கம், குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், விவசாய சட்டங்கள், உயர் ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு எனப் பல்வேறு தீவிரமான கருத்தியல் தாக்குதல்களை அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் வெளிப்படையாகவும், மெளனமாகவும் ஆதரித்து நின்றது அதன் திராவிட இயக்க பின்புலத்தையே வேரறுப்பதாக அமைந்தது.  

இன்றைய நிலையில் அ.இ.அ.தி.மு.க அரசியலே அற்றுப்போன வெறும் எதிரியல் கட்சியாக இருக்கிறது. உள்ளூர் அளவில் தி.மு.க உறுப்பினர்களை எதிர்த்து அரசியல் செய்து வந்தவர்களுக்கு ஓர் அமைப்பு தேவை, இரட்டை இலை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தி.மு.க எதிர்ப்புக்கு வாக்களித்து வந்தவர்களுக்கு ஒரு கட்சி தேவை என்பதால் அ.இ.அ.தி.மு.க பல குழப்பங்களுக்கு இடையிலும் ஓர் அமைப்பாக தொடர்கிறது.

ஆனால், தி.மு.க எதிர்ப்பு என்பதற்காக திராவிட கருத்தியலை அது முற்றாகக் கைவிட்டால், அது காலப்போக்கில் தேய்ந்து மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் பாஜக கருத்தியலை எதிர்த்து கொள்கையும், கோட்பாடும் பேசக்கூடிய ஆளுமையுள்ளவர்கள் அந்தக் கட்சி தலைவர்கள் வரிசையில் இல்லை என்பதும் மிகப்பெரிய பலவீனமே.

பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கருத்தியல் பேசினால் நகைச்சுவை  நடிகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவது போல மக்களுக்கு சிரிப்புத்தான் வரும். ஏனெனில் அவர்களுக்கு அதில் பயிற்சியே இல்லை என்பதுடன், பாஜக உறவில் கடந்த ஐந்தாண்டுகளில் கடுமையாக நீர்த்துப் போய்விட்டார்கள் என்பதும் உண்மை.

அ.இ.அ.தி.மு.க-வின் பாஜக-வுடனான முரண்பாடு என்பதெல்லாம் தொகுதி பங்கீடு குறித்துதான். பாஜக-வுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் கட்சி சுத்தமாக பலவீனப்பட்டுவிடும் என்பதால் அவர்கள் உயிரைக் கொடுத்து போராட வேண்டியுள்ளது. நாங்கள்தான் உங்கள் அரசியலை ஆதரிக்கிறோமே, மோடியே பிரதமர் என்று முழங்குகிறோமே, அதிக தொகுதிகளை கேட்காதீர்கள் என்று போராடுகிறார்கள். அங்கேதான் பாஜக-வின் சிக்கல் உருவாகிறது.

BJP ADMK politics Rajan Kurai

பாஜக பிரச்சினை  

பாஜக-வின் அரசியல் சற்றே வித்தியாசமானது. அவர்கள் வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் எதிர் நோக்குவதில்லை. அவர்கள் கருத்தியலை முழுமையாக நாடெங்கும் கோலோச்ச வேண்டும் என்ற பாசிச மனோபாவம் கொண்டவர்கள். அதனால் “காங்கிரஸ் இல்லாத இந்தியா”, “கழகங்கள் இல்லாத தமிழகம்” என்றெல்லாம் லட்சிய முழக்கங்களை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

அப்படியொரு லட்சியம் பேசுபவர்களுக்கு அ.இ.அ.தி.மு.க போன்ற பலவீனமான தலைவர்களைக் கொண்ட கட்சியிடம் ஐந்து சீட்டு. பத்து சீட்டுக்கு பேரம் பேசிக்கொண்டு அவர்களுக்குப் பின்பாட்டு பாடுவது பெரியதொரு முரண்பாடாக தெரிவதில் வியப்பில்லை. அதே நேரம் அவர்கள் கட்சியினை திடீரென்று தமிழகத்தில் வளர்ப்பதற்கான வழிகளும் எதுவும் இல்லை.

அ.இ.அ.தி.மு.க முற்றாக வலுவிழந்தால் தி.மு.க-வின் பலம் அதிகரித்துவிடும் என்ற கவலை ஒருபுறம். அ.இ.அ.தி.மு.க பலமாக இருந்தால் தாங்கள் வளர முடியாது என்ற சிக்கல் மற்றொருபுறம். இதுதான் பாஜகவின் பரிதவிப்பு. அதனால்தான் தி.மு.க நெருப்பை அணைக்க “சாக்கடை ஜலமானாலும்” சசிகலா தேவை என்று குருமூர்த்தி பகிரங்கமாக பேச நேர்கிறது.

தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது ஒரு கட்சியாக அ.இ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி அதன் இடத்தில் தாங்கள் வளர வேண்டும் என்ற திட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதே நேரம் தனியாக தேர்தலைச் சந்தித்தால் இரண்டு சதவிகிதத்திலிருந்து முன்னேறி மூன்று சதவிகித வாக்குகளைப் பெற்று மாபெரும் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வதுடன் திருப்தியடைய வேண்டியுள்ளது.

அப்படியே அ.இ.அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தாலும் அதுவும் வெற்றியை தேடித்தராது என்பதும் தெளிவாகி வருகிறது. போட்டியிட்டோம், வாக்குகளைப் பெற்றோம் என்று காட்டிக்கொள்ளலாமே தவிர, வெற்றி பெற முடியாது. அ.இ.அ.தி.மு.க கூட்டணியால் உடனடிப் பலனும் இல்லை, நீண்ட கால பலனும் இல்லை என்னும்போது என்னதான் செய்வது என பாஜக-விலும் ஒரு குழப்பம் உருவாகத்தான் செய்கிறது.

BJP ADMK politics Rajan Kurai

பகையுறவு பரிதாபங்கள்  

அதனால் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அ.இ.அ.தி.மு.க, பாஜக பகையுறவு பரிதாபமாகவே தோற்றமளிக்கிறது. இப்போதுள்ள தலைமுறை அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் மெல்ல வலுவிழுந்து, ஒரு புதிய தலைமை, திராவிட கருத்தியல் கொண்ட, தி.மு.க-வின் எதிரியல் நோக்கில் இயங்கும் ஒரு வலுவான தலைமை உருவானால்தான் அ.இ.அ.தி.மு.க மீண்டும் உயிர் பெறும். அதற்கு அகில இந்திய அளவில் பாஜக-வும் வலுவிழக்க வேண்டும்.

இன்றைய நிலையில் பாஜக வசம் “வசமாக” சிக்கியுள்ளது அ.இ.அ.தி.மு.க என்றுதான் தோன்றுகிறது. அந்த விதத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவைவிட, அ.இ.அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது என்றால் மிகையாகாது. அதுவரை இரண்டு கட்சிகளுமே பகையுறப் புலத்தில்தான் பயணிக்க வேண்டியிருக்கலாம்.

அரசியலில் எது வேண்டுமானால் நடக்கலாம் என்றும் வாசகம் சொல்வார்கள். அது இந்தக் கட்சிகளுக்கு பொருந்துமா, பகையுறவிலிருந்து விடுவிக்குமா என்று தெரியவில்லை.

கட்டுரையாளர் குறிப்பு:

BJP ADMK politics Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சில்லி பனீர்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *