தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணக்குகள் குறித்து இருதரப்பிடமும் விளக்கி சமரசம் செய்யும் முயற்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து சமரச தூதர் வாசன் என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 24) பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் வாசன் முக்கியமான சில தகவல்களை அனுப்பி உள்ளார்.
“இப்போதைய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் அவசியம். அதுபோன்று தமிழ்நாட்டின் பங்கும் அதில் மிக அவசியம்.
தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை வந்ததிலிருந்து தமிழக பாஜகவுக்கு ஓர் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மை. அதே நேரம் பாரதிய ஜனதா கட்சி நாளைக்கே ஆட்சியைப் பிடித்து விடும் என்பது அரசியல் எதார்த்தத்திற்கு முரணானது.
அண்ணாமலை, தான் தலைவராக இருக்கும் காலத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட எம்பிக்களை பெற்று மோடி ஆட்சிக்கு உதவினோம் என்ற வரலாற்றுப் பெருமை பெறுவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை என்று தெரிகிறது.
தனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அவர் வெவ்வேறு கணக்குகளை போட்டு வருகிறார். தமிழ்நாட்டில் வைகோ புதிதாக கட்சி தொடங்கிய போது அவருக்கு திரண்ட பிரம்மாண்ட கூட்டம் வேறு யாருக்கும் திரளவில்லை. அப்போதைய திமுக தலைவரான கருணாநிதியே வைகோவுக்கு திரண்ட கூட்டத்தை பார்த்து வியந்தார்.
1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போதும்… அதற்குப் பிறகு மீண்டும் நான் தமிழ் மாநில காங்கிரசை தோற்றுவித்த போதும் எங்களுக்கு மிகப் பெரிய கூட்டம் திரண்டது.
ஆனால் கூட்டம் திரள்வதை வைத்து அரசியலில் ஒரு திடமான முடிவை எடுத்து விட முடியாது.
எனவே அண்ணாமலை அண்ணா, முத்துராமலிங்கத் தேவர் என்று பழைய பிரச்சினைகளை கிளறிக் கொண்டிருக்காமல் தற்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி வாய்ப்பை நோக்கி செல்வதற்கு என்ன வழி என்று பார்க்க வேண்டும்.
இதற்கு தேசிய பாஜக தலைமை உடனடியாக ஒரு மேலிட பிரதிநிதியைநியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியை சந்தித்து பேச வேண்டும்.
இல்லையென்றால்… இந்தப்போக்கு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணி முற்று முழுவதுமாக வெற்றி பெறுவதற்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போல் ஆகிவிடும்” என்று பாஜக தேசிய தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார் ஜி. கே. வாசன்.
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக சார்பாகவும் சரி… பாஜக சார்பாகவும் சரி… யார் தங்களை வந்து சந்தித்து விட்டு சென்றாலும் அவர்கள் சொல்லும் விவரங்களை முழுமையாக நம்பாமல்… ஜி கே வாசனிடம் ஒரு வார்த்தை கேளுங்கள் என்று மோடியே அமித்ஷாவிடம் சொல்லி இருக்கிறார்.
வாசன் மீது இவர்களுக்கு இவ்வளவு நம்பிக்கை வருவதற்கு என்ன காரணம் என்று டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம்.
“நான் தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் பெரிய அளவு செல்வாக்கு செலுத்தக் கூடிய அளவுக்கு பலம் பெற்றவன் இல்லை. ஆனால் எங்கள் தந்தையார் காலத்திலிருந்து அரசியலில் நடப்பவற்றையும் திமுக, அதிமுக இரு கட்சிகளின் தொடர் அணுகுமுறைகளையும் கவனித்து வந்திருக்கிறேன். அனுபவமும் பெற்றுள்ளேன்” என்று தன்னைப் பற்றிய உண்மையை மோடியிடம் வெளிப்படையாக தெரிவித்தவர் ஜி. கே. வாசன்.
தமிழ்நாட்டில் தனக்கு இப்படி செல்வாக்கு இருக்கிறது அப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பில்டப் கொடுக்காமல் தன்னுடைய பலம் இவ்வளவுதான் என்று உண்மையைச் சொன்னது தான் வாசன் மீது மோடிக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.
அந்த அடிப்படையில் தான் தொடர்ந்து தமிழ்நாட்டு நிலவரம் பற்றி ஜி. கே. வாசனிடம் கருத்து கேட்பதை மோடி வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இப்போதும் பாஜக தேசிய தலைமை இதில் தலையிட்டு… எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முக்கியமான பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்பதுதான் வாசன் பாஜக தலைமைக்கு வைத்திருக்கும் கோரிக்கை.
இந்த நேரத்தில்தான் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது.
-ஆரா
புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றம்!
உதயநிதியின் சனாதன பேச்சு : டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம்!
Vasan notorius turn coat politician. He is running zamindar politics like his late father.