bjp 2nd candidate list

ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்திற்கு எதிரான பாஜக வேட்பாளர் இவர்தான்!

அரசியல் இந்தியா

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இன்று(செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது. இதில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. முதலில் அக்டோபர் 1 –ஆம் தேதி ஹரியானா தேர்தல் நடக்கவிருந்தது.

ஆனால் அக்டோபர் 2-ஆம் தேதி  தங்கள் சமூகத்திற்கு முக்கியமான  பண்டிகை இருப்பதால், தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்று ஹரியானா மாநிலத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தினர், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, தேர்தலை அக்டோபர் 5-ஆம் தேதிக்கும், வாக்கு எண்ணிக்கை நாளை அக்டோபர் 8-ஆம் தேதிக்கும் தள்ளி வைத்தது இந்தியத் தேர்தல் ஆணையம்.

இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர்-4 ஆம் தேதி 67 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்திருந்தது. ஆனால், இதில் தற்போது உள்ள ஹரியானா சட்டமன்றத்தின் 8 பாஜக உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதில் 2 அமைச்சர்களும் அடக்கம்.  இந்த அறிவிப்பு ஹரியானா பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

bjp 2nd candidate list

இந்த நிலையில் இன்று மதியம், 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜுலானா தொகுதியில் போட்டியிடும் மல்யுத்த வீரர் வினேஷ் போகத்திற்கு எதிராக கேப்டன் யோகேஷ் பைராகியை நிறுத்தியிருக்கிறது பாஜக.

கேப்டன் யோகேஷ் பைராகி, ஹரியானா மாநிலம் பாஜக இளைஞரணியின் துணைத் தலைவர் ஆவார். 35 வயதான இவர், இதற்கு முன் இந்திய விமானப் படையில் பைலட்டாக இருந்துள்ளார். கோவிட் நோய் தொற்றின் முதல் அலையின் போது, வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட இந்தியர்களை, திரும்ப இந்தியாவிற்குக் கூட்டிவந்த  ‘வந்தே பாரத்’ திட்டத்தில் பங்கேற்றார்.

மேலும் 2015 சென்னை வெள்ளத்தின் மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் மேல் உள்ள பற்றால், இவர் பாஜகவில் இனைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீரர் வினேஷ் போகத், சில தினங்களுக்கு முன்பு தான் காங்கிரஸில் இணைந்தார். இவருடன் பஜ்ரங் பூனியாவும் காங்கிரஸில் இனைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற ஐபிஎல் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரதீப் சங்வான் பரோடா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஹரியானா முதல்வர் நயாப் சைனிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிற பவன் சைனி, நராய்ங்கர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ராயன் பட நடிகர்தான் நடிகர் விஜய் மகனின் முதல் ஹீரோ?

விசிக எங்களுக்கு எதிரியல்ல: ஜெயக்குமார் பேட்டி!

சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ… பணிகள் விறுவிறு!r

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *