தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை 

கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தி என்னவென்றால் அது தமிழகத்தில் பணிபுரியும் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உருவான வதந்தியும், அதை நம்பிய பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முற்பட்டதும்தான். உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள்.

இதைத் தொடர்ந்து ஆராயும்போதுதான் வதந்திகளின் மூலம் பீஹார் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் என்பதும், அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வமான பாஜக கட்சி ட்விட்டர் பக்கத்திலேயே இந்த வதந்தி செய்திகள் பதியப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.

வதந்திகளை பரப்புவதும், கலவரத்தைத் தூண்டுவதும் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரத்துக்குப் புதிதல்ல. காலம் காலமாக மதக்கலவரங்களை வாய்மொழியாக பரப்பப்படும் கட்டுக்கதைகள், வெறுப்பரசியல் மூலம் உருவாக்கி வந்தவர்கள்தான் அவர்கள்.

இப்போது ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தொலைத்தொடர்பு வளர்ச்சியில் சாத்தியமான சமூக ஊடகங்களையும் பழைய வதந்தி பரப்பும் அரசியலுக்கே அவர்கள் பயன்படுத்துவது அருவருக்கத்தக்கதானாலும், வியப்பிற்குரியதல்ல.

ஆனால், எதனால் பீஹார் மாநில பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாடு குறித்து இப்படியான வதந்தியைப் பரப்பியது என்பதுதான் வியப்புக்குரிய கேள்வி. திடீரென்று இந்த விபரீத செயல்பாட்டில் அது ஈடுபடக் காரணமாக அரசியல் கருத்தாளர்களுக்கு தெரிவதெல்லாம் பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாட்டு முதல்வரின் பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்து பேசியதுதான்.

Bihar migrant workers attack

தேஜஸ்வி யாதவ் பேசியதன் முக்கியத்துவம்

சென்னையில் மார்ச் முதல் தேதி நடைபெற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றதைக் குறித்து பீஹார் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் கலவரம் செய்துள்ளார்கள். பீஹார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படும்போது, எப்படி முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு தேஜஸ்வி செல்லலாம், எப்படி தனி விமானத்தில் பறக்கலாம் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

இவ்வாறு கலவரம் செய்வதற்கென்றேதான் அவர்கள் வதந்தி பரப்பியுள்ளார்கள். அவர்கள் பரப்பிய வதந்தியைக் காட்டி அவர்களே சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் தேஜஸ்விக்கு அவப்பெயர் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தேஜஸ்வி சென்னையில் சொன்னதுபோல சமூகநீதி அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் ஒருங்கிணையக் கூடாது என்பதும்தான்.

தேஜஸ்வி முதல்வர் ஸ்டாலின் விழாவில் சுருக்கமாகப் பேசினாலும் சில முக்கிய கருத்துகளைக் கூறினார். அதில் ஒன்று என்னவென்றால்… எப்படி சமூகநீதிக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மக்களை அணி திரட்டுவது, கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பதை தி.மு.க-விடமிருந்து வட இந்தியக் கட்சிகள் மீண்டும், மீண்டும் கற்றுத் தெளிய வேண்டும் என்பதுதான்.

சுருக்கமாகச் சொன்னால் பாஜக எதிர்ப்பிற்கு தி.மு.க ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டவேண்டும் என்றே தேஜஸ்வி கூறினார் என்று சொல்லலாம்.

Bihar migrant workers attack

பாஜக ஏன் பதற்றமடைய வேண்டும்?

தேஜஸ்வி தி.மு.க-வை புகழ்ந்து பேசினால், சமூகநீதிக்கான சக்திகள் பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்று பேசினால் ஏன் பாஜக பதற்றமடைய வேண்டும்? அதற்குக் காரணம் 2024 தேர்தலில் அது எதிர்கொள்ளும் சிக்கல்தான்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடைய வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இன்றைய சூழ் நிலையில் பாஜக தனித்து ஆட்சி செய்யும் பெரிய மாநிலங்கள் நான்கு மட்டுமே. அவற்றின் நாடாளுமன்றத் தொகுதிகள் விவரம்: உத்தரப்பிரதேசம் – 80, குஜராத் – 26, மத்தியப்பிரதேசம் – 29, கர்நாடகம் – 28 ஆகியவைதான். மொத்தம் 163 தொகுதிகள்தான்.

இவற்றில் குஜராத் நீங்கலாக மற்ற மூன்று மாநிலங்களிலும் வலுவான எதிர்க்கட்சிகள் உள்ளன. கர்நாடகம், மத்தியப்பிரதேசம் இரண்டிலும் காங்கிரஸ் கூட்டணி சமீபத்திய தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி ஜனதா கட்சி கடும் போட்டியைக் கொடுத்துள்ளது.

இவற்றைத் தவிர கூட்டணியாக ஆட்சி செய்யும் பெரிய மாநிலங்கள் மஹாராஷ்டிரா – 48, அஸ்ஸாம் – 14, ஹரியானா –  10. மொத்தம் 72 தொகுதிகள். இதில் மஹாராஷ்டிராவில் பாஜக உருவாக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு, மக்கள் ஆதரவைப் பெறுமா என்பதில் உறுதியில்லை. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியை வெல்வது சுலபமில்லை.

எனவே, மொத்தத்தில் 185 தொகுதிகள் இழுபறி கடும்போட்டி. ஐம்பது தொகுதிகள்தான் அதற்கு வலுவான அடித்தளம் என்ற அளவிலேயே பாஜக உள்ளது. எல்லாம் சேர்த்தால் கூட 235 தொகுதிகள்தான் அதன் நேரடி செல்வாக்குக்கு உட்பட்டவை எனலாம். வட கிழக்கு சிறு மாநிலங்களையெல்லாம் சேர்த்தாலும் 250 தொகுதிகளில்தான் பாஜக வெற்றிக்கோட்டை எட்ட சாத்தியம் என்ற போட்டியில் இருக்கிறது. ஆனால் அதற்கு பெரும்பான்மைக்குத் தேவை 272.

இந்த நிலையில் பீஹாரில் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி எதிர் அணியில் இணைந்திருப்பது பீஹாரின் 40 தொகுதிகளை எட்டாக் கனிகளாக மாற்றிவிடும் என்பது பாஜகவின் வெற்றிக் கனவினை முற்றிலும் சீர்குலைப்பதாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் தேஜஸ்வி தமிழ்நாட்டுக்கு வருவதும், தி.மு.கவை வழிகாட்டி எனப் புகழ்வதும் அதற்கு பெரும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

பீஹார் மற்றும் தமிழ் நாட்டு வரலாற்றை நாம் இந்த இடத்தில் ஒப்பு நோக்கி புரிந்துகொள்ள வேண்டும்.

Bihar migrant workers attack
பாடலிபுத்திரம்

பீஹாரும், தமிழ்நாடும்: பண்டைய வரலாறு  

இந்தியாவில் மிகத் தொன்மையான நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கியது பீஹார் என்றால் மிகையாகாது. பொது ஆண்டுக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன் (500 BCE) புத்தர் வாழ்ந்த மண் பீஹார். பாடலிபுத்திரம் என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் செழித்து விளங்கிய நகரம். மகத பேரரசு கோலோச்சிய நிலம் பீஹார்.

தமிழ்நாட்டின் கீழடி ஆய்வுகள் நமக்குப் புலப்படுத்தத் துவங்கியுள்ள வரலாறு தமிழகத்திலும் நகர  நாகரிகம் பொது ஆண்டுக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்தது என்பதுதான். எனவே புத்தருக்கு சமகாலத்தில் தமிழ்நாடும் பண்பாடும், கலைகளும் செழிக்கத்துவங்கிய பகுதியாகவே விளங்கியுள்ளது. அதன் காரணமே தமிழ்நாட்டிலும் பெளத்தம், சமணம், அஜீவகம் உள்ளிட்ட சிரமண மதங்களின் பிரிவுகளும், தாக்கமும் இருந்துள்ளன.

ஆரிய வேத மதங்களுக்கு மாற்றான மதங்கள், பண்பாட்டு மூலங்கள் செழுமை பெற்று விளங்கிய மாநிலங்களே பீஹாரும், தமிழ்நாடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆரிய சிந்தனைகளும், பார்ப்பனீய வேத மதமும் இந்தப் பகுதிகளில் ஊடுருவினாலும் அவற்றுக்கு மாற்றான சிந்தனைகளும், எதிர் மரபுகளும் இந்த மாநிலங்களின் பண்பாட்டு வேர்களிலேயே சூல் கொண்டுள்ளன என்றால் மிகையாகாது.

பீஹாரும், தமிழ்நாடும்: சமகால அரசியல் வரலாறு

இப்படியான ஒப்பு நோக்கத்தக்க தொன்மையான பண்பாட்டு வேர்களைக் கொண்டிருந்தாலும், காலனீய ஆட்சிக்காலத்தில் பீஹாருக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகவும் வேறுபட்ட வரலாற்றுப் பாதைகளே உருவாயின. அதற்கு முக்கிய காரணம் என மொழி அரசியலைச் சொல்லலாம்.

தமிழ் நாட்டில் தொன்மையான தமிழ்மொழி பயன்பாட்டில் தொடர்ச்சி நிலவி வந்தது. மக்கள் பேச்சு வழக்கில் அது பல்வேறு வடிவம் கொண்டாலும், அதன் இலக்கிய மரபுகளில் தொடர்ச்சி பேணப்பட்டது. தமிழ் நாட்டின்  அரசியல் அமைப்பு மத்திய காலத்தில் பெரும் வளர்சிதை மாற்றங்களைக் கண்டாலும், அதன் மொழியானது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வல்லமை கொண்டு உள்ளுறை ஆற்றலாக விளங்கி வந்துள்ளது வியக்கத்தக்க உண்மையாகும்.

இதன் காரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சின் பரவலாக்கமும், பண்டைய தமிழ் பிரதிகளின் அச்சாக்கமும் நிகழ்ந்தபோது பரவலான தமிழ் மறுமலர்ச்சி ஒன்று உருவானது. அது தமிழ்நாட்டின் அரசியலமைப்பில் புகுந்திருந்த பிற மொழிகளை எளிதில் அகற்றி, தமிழை பொதுமன்றத்தின் மொழியாக துரிதமாக நிறுவியது.

திராவிட இயக்கம், குறிப்பாக தி.மு.க, பண்டைய தமிழ் மொழிக்கும், சமகால பேச்சு மொழிக்கும் இடையே புதியதொரு நவீன தொடர்பு மொழியை உருவாக்கி மக்களை அதன் மூலம் அரசியல்மயப்படுத்துவதில் பெருவெற்றி கண்டது. உதாரணமாக, வாசகர்களுக்கு அறிவிப்புகளைச் செய்யும்போது “உபயகுசலோபரி” (நலம்; நாடுவதும் அதுவே என இருபுறமும் நலம் நவில்வதற்கான சமஸ்கிருத சொல்) என்று விளித்து எழுதிய ஆனந்த விகடன் பத்திரிகை அறுபதுகளில் “வணக்கம்!” என்று முகமன் கூறி எழுதும் கால மாற்றம் சாத்தியமானது.    

மக்களின் பேச்சு மொழியிலிருந்தே அணுக க் கூடிய அரசியல் மொழி என்பது அரசியல் அணிசேர்க்கைக்கு முக்கியமானது. அந்த மொழியுடன் மக்கள் உளமார உணர்வுரீதியாக பிணைக்கப்படும்போதுதான் சாமானியர்களும், பணக்காரர்களும், தொழிலாளிகளும், முதலாளிகளும், பண்ணையார்களும், பண்ணையாட்களும் தங்கள் அரசியலை பொதுவானதாகக் காண முடியும்.

தமிழ்நாட்டில் மக்களாட்சி அரசியலில் ஜாதி, வகுப்பு, வர்க்க வேறுபாடுகளை கடந்த பொதுவான சுதந்திரவாத அரசியல் களமொன்று சாத்தியமாக மொழி மறுமலர்ச்சியும், மொழிக்களம் சாதித்த பொது மன்றமும் துணை புரிந்தது.  

இந்தி மொழியில் சிக்கிய பீஹார்

பீஹாரில் நடந்தது முற்றிலும் வேறு கதை. அந்த மாநிலத்தில் மக்கள் பேசும் மொழிகள், தொன்மையான மொழிகள் மைதிலி, மஹதி, போஜ்பூரி ஆகிய மொழிகளேயாகும். இவற்றின் பேச்சு மொழி வடிவங்கள் பல மாவட்டங்களில் வேறுபட்டாலும் பொதுவாக போஜ்பூரி, மைதிலி மொழிகளே மக்கள் பேசும் மொழிகள் என்று கூறலாம்.

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பீஹார் இந்தி பேசும் மாநிலமாக  நவீன காலத்தில் கட்டமைக்கப்பட்டது. பொதுவெளியில் புழங்கும் மொழியாக, ஊடக மொழியாக, அரசு மொழியாக உருது மொழி நீக்கம் செய்யப் பட்டு, சமஸ்கிருதமயமான இந்தி மொழி பீஹாரின் அரசியல் மொழியாக  நிலை பெற்றது.

மக்களின் பேச்சு மொழிக்கும், அரசியல் உரையாடலுக்கும் ஏற்பட்ட இந்த இடைவெளி அரசியல் அணி சேர்க்கையிலும், மக்களை ஒரு பொதுமன்றமாக கட்டமைப்பதிலும் கணிசமான சிக்கலை உருவாக்கியதோ என்று கருதாமல் இருக்க முடியவில்லை.

இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பதன் மூலமே தன் அரசியலை, மக்களின் திராவிட-தமிழ் அடையாளத்தை உறுதி செய்தது திராவிட இயக்கம். அது சமூகநீதி அரசியலை சாத்தியமாக்கியது; அது பொருளாதார வளர்ச்சியை மனிதவளத்துடன் பிணைத்ததால் மக்கள் பகிர்ந்துகொள்ளும் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமானது.

நில உடமை கட்டமைப்பு வீழ்ந்து, தொழில்துறையும், சிறு குறு தொழில்களும், சேவைத்துறையும் மேலோங்கின. இவற்றின் விளைவாக மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இட த்திலும், பீஹார் பதினான்காவது இடத்திலும் உள்ளது.  

மொத்த உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும் தனி நபர் வருவாயில் தமிழ்நாடு பத்தாவது இட த்திலும், பீஹார் நாட்டிலேயே கடைசி இட த்திலும் உள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர் எண்ணிக்கையிலும் பீஹார் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியுள்ளது.

இவற்றின் விளைவாகவே பீஹாரிலிருந்து மக்கள் கணிசமான எண்ணிக்கையில் புலம் பெயர்ந்து தமிழ்நாட்டுக்குப் பணிபுரிய வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை வேற்றுமையாக நடத்தாமல், சமூக அரவணைப்பைத் தருவதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

ஆனால் எந்த இந்து, இந்தி அரசியல் பேசி பீஹார் மாநிலத்தின் மக்கள் தொகுதியின் அரசியல் தன்னுணர்வை வளரவிடாமல் செய்தார்களோ… அந்த அரசியலேயே முன்னெடுக்கும் பாஜக இன்று தமிழ்நாட்டை பீஹார் தொழிலாளர்களுக்கு எதிரானதாக சித்திரிக்கிறது.

அதற்குக் காரணம் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலிருந்து பீஹாரின் சமூக நீதி அரசியல் உத்வேகம் பெறக்கூடாது, இந்தி-இந்து-இந்தியா மாயையிலிருந்து விடுபட்டு அதன் மக்கள் தொகுதிகள் தங்களை தன்னுணர்வுடன் கட்டமைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் என்பதே கேள்வி.  

கட்டுரையாளர் குறிப்பு:

Bihar migrant workers attack by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சுறா மீன் புட்டு!

+1
0
+1
0
+1
0
+1
8
+1
1
+1
0
+1
0

1 thought on “தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும்

  1. மிக அருமையான ஆழமான கருத்துக்களை கொண்ட கட்டுரை. நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *