மத்திய பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர் கூட இடம்பெறாத நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8வது முறை மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று(பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.
தனது தொடக்க உரையில், “நமது பொருளாதாரம் அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கான நமது வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. அனைத்து பிராந்தியங்களின் சீரான வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளை ஒரு தனித்துவமான வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சி என குறிப்பிட்ட நிலையில், பீகாரின் மதுபானி சேலையை அணிந்து வந்த நிதியமைச்சர் நிர்மலா, மற்ற மாநிலங்களை விட இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பீகாருக்கு அதிக திட்டங்களை அறிவித்தார். இது எதிர்கட்சிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

பீகாருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்! bihar gets most in budget 2025
🔴பாட்னா விமான நிலையத்தின் விரிவாக்கத்துடன், பீகாரில் பசுமை விமான நிலையங்கள், பிஹ்தாவில் ஒரு பிரவுன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும்.
🔴பீகாரில் மக்கானா வாரியம் நிறுவப்படும். இந்த முயற்சி மாநிலத்தில் ’சூப்பர் ஃபுட்’ மக்கானாவின் (தாமரை விதை) உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
🔴ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக உணவு பதப்படுத்தும் துறையை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு காட்டுகிறது. அதன்படி கிழக்கு இந்தியாவில் உணவு பதப்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பீகாரில் ஒரு தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
🔴நாட்டின் ஐஐடிகளை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் திறன் விரிவுபடுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். இதில் 6,500 மாணவர்களுக்கு இடமளிக்க ஐந்து ஐஐடிகளில் கூடுதல் உள்கட்டமைப்பை உருவாக்குவதும் அடங்கும்.
🔴பீகாரில் உள்ள மிதிலா பகுதியில் 50000 ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு உதவும் வகையில், மேற்கு கோசி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஜேடி(யு) ஆளும் பீகார் மாநிலத்திற்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நிதியமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். bihar gets most in budget 2025
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசுகையில், “இது இந்திய அரசின் பட்ஜெட்டா அல்லது பீகார் மாநில பட்ஜெட்டா என்று எனக்குப் புரியவில்லை? மத்திய நிதியமைச்சரின் முழு பட்ஜெட் உரையிலும் பீகார் தவிர வேறு எந்த மாநிலத்தின் பெயரையும் நீங்கள் கேட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.