சட்டசபையில் பெண்கள் மற்றும் அந்தரங்க விவகாரம் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று (நவம்பர் 8) மன்னிப்பு கோரியுள்ளார். bihar cm nitishkumar apologise
பீகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், “பீகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது.
ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறைகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
பீகாரில் 4.3 ஆக இருந்த கருவுறுதல் விகிதம், இப்போது 2.9 ஐ எட்டியுள்ளது. மேலும், விரைவில் 2.0 ஐ எட்டுவோம்” என கூறினார். இதோடு, கணவன் – மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்களை சைகைளுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் பேசியது சர்ச்சைப் பொருளாக மாறியது.
பாஜக, மகளிர் ஆணையம் கண்டனம்!
இதுகுறித்து,”நிதிஷ்குமார் ஒரு மோசமான ஆணாதிக்கவாதி. பீகார் சட்டமன்றத்தில் இப்படி ஒரு மொழி பேசப்பட்டால், பீகார் பெண்களின் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என்று அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்தது
“சட்டமன்றத்தில் இருந்த பெண்கள் முன்னிலையில் சி-கிரேடு திரைப்பட உரையாடல் போன்று நிதீஷ் குமார் பேசியது கண்டனத்திற்குரியது. அவரது சைகைகள் அசிங்கமாக இருந்தது. நிதிஷ்குமார் பேச்சை சபாநாயகர் நீக்க வேண்டும்” என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கடுமையாக சாடியுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் ஆதரவு!
இதுகுறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில் “நிதிஷ்குமாரின் கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக தான் அவர் விளக்க முயன்றார். மக்கள் இந்த தலைப்பில் பேசத் தயங்குகிறார்கள், ஆனால் இவை பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. பாலியல் கல்வியாக குழந்தைகள் இதைக் கற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். முதல்வர் நிதிஷ் பேசியதை தவறான முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என அவர் விளக்கமளித்தார்.
எனினும் நிதிஷ்குமாரின் பேச்சை கண்டித்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://twitter.com/ANI/status/1722122887178637420
மன்னிப்பு கேட்ட நிதிஷ்குமார்
இதனையடுத்து, சட்டப்பேரவையில் தான் பேசிய வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக நிதிஷ்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “எனது பேச்சுக்கு மன்னிப்பு கோருகிறேன், எனது வார்த்தைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. எனினும் எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
கருவுறுதல் விகிதம் குறைவதைப் பற்றி விளக்கவும், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கு கல்வி அவசியம் என்று வலியுறுத்தவே நான் முயற்சித்தேன். நான் எப்போதும் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறேன். நான் பெண்களை மிகவும் மதிக்கிறேன். எனது பேச்சு தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என நிதிஷ்குமார் விளக்கமளித்துள்ளார். bihar cm nitishkumar apologise
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை: பன்னீர் மேல்முறையீடு!
கலைஞர் ரூட்டில் இருந்து மோடி ரூட்டுக்கு மாறுகிறதா அரசுப் போக்குவரத்துக் கழகம்?