புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் குழு தமிழ்நாடு வருகை! 

அரசியல்

தமிழ்நாட்டில் பிகார்  மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக  பரப்பப்பட்ட வீடியோக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசும், பிகார் அரசும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

இந்த வகையில் பிகார் மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று (மார்ச் 4) மாலை தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்திக்கிறது.

இன்று (மார்ச் 4) பாட்னாவில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,

“பிகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிகார் அரசின் 4 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு சென்று நிலைமையை இன்று ஆய்வு செய்யும்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பிகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக தளங்களில் வீடியோக்கள் பரவியதை அடுத்து, பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இதுகுறித்து தமிழக அரசுடன் பேச பிகார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இது போலியான வீடியோ என்றும் தமிழ்நாட்டில் அனைத்து மாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பாதுகாப்போடு இருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.

ஒருபடி மேலே போய் டிஜிபி சைலேந்திரபாபு இந்த விவகாரம் குறித்து இந்தி மொழியிலேயே வீடியோவை வெளியிட்டார்.

இந்த நிலையில் பிகாரில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தன, பிகார் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவின் வீடியோவைப் பகிர்ந்து,

‘பாஜக மற்றும் ஆதரவு ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அவர்களால் உண்மைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது’ என்று கூறியிருந்தார்.

ஆனாலும் அங்கே பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாக…  தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்களின் நிலைமை பற்றி ஆராய  பிகார் அரசு சார்பில் நான்கு பேர் கொண்ட அதிகாரிகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

பிகார் மாநில   ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் டி.பாலமுருகன், பிகார் சிஐடி ஐஜியான பி.கண்ணன் ஐபிஎஸ்,  தொழிலாளர் நலத்துறையின் சிறப்புச் செயலாளர்  ஸ்ரீ அலோக் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் சென்னை வருகின்றனர். அவர்கள் இன்று மாலை தமிழக அதிகாரிகளை சந்திக்கிறார்கள்.

நேற்றே இந்த விவகாரம் குறித்து பிகார் டிஜிபியும், தமிழ்நாடு டிஜிபியும் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள்.

“பிகாரின் மூத்த போலீஸ் அதிகாரிகளும் தமிழ்நாட்டில் இருக்கும் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள்.

பரவி வரும் வீடியோக்கள் போலியானவை என்று தமிழக போலீஸ் தெரிவித்துள்ளது” என்று  பாட்னா தலைமையிட கூடுதல் டிஜிபி ஜே.எஸ்.கங்க்வார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வேந்தன்

சாலை விபத்தில் மறைந்த புகைப்பட கலைஞர்: யார் இந்த ஸ்டாலின் ஜேக்கப்?

ஐ.நா.வை அடுத்து அமெரிக்கா… கைலாசாவின் அடுத்த சறுக்கல்?

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர்பலி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *