“குறுக்கு வழிகளில் எதிர்க்கட்சிகளையெல்லாம் கவிழ்த்து வந்த பிஜேபிக்குப் பீகாரில் மரண அடி கொடுக்கப்பட்டுவிட்டது. பீகாரைப் பின்பற்றி மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மத்தியில் உள்ள பி.ஜே.பி. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை வீழ்த்திட முன்வரவேண்டும்” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜகவின் திட்டத்தை முறியடித்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் அவரது செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 11) கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று பீகார் மாநிலம். உ.பி.க்கு அடுத்தபடியாக இருந்தது; அதைப் பிரித்தார்கள்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து, பீகாரில் ஜனநாயகம் தழைக்கவும், சமூக நீதிக் கொடி தலைதாழாது பறக்கவும் ஒரு சமூகநீதி ஆட்சியை உருவாக்கிக் காட்டியுள்ளனர்.
மதவெறி – வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுக்கும் வண்ணம் அந்த மாநிலத்தை மதவாதத்திலிருந்து காப்பாற்றி, ஜனநாயகத்தையும், இந்திய அரசமைப்புச் சட்ட பீடிகை வலியுறுத்தும், ‘இறையாண்மையுள்ள சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசினையும் ஏற்படுத்தியுள்ளனர்.
பீகார் மக்களின் நியாயமான இரண்டு ஒருமித்த கோரிக்கைகளை மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய ஆட்சி நிறைவேற்றாமல் பீகார் மக்களின் அவநம்பிக்கையை பெற்றதன் விளைவே இந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணம்.
‘ஆபரேஷன் தாமரை’ என்ற ‘வித்தை’
பீகார் மாநிலத்திற்கு தனிச் சிறப்பு அந்தஸ்து தருவதாகவும், அதற்கென பெரும் நிதி உதவி செய்வதாகப் பல தேர்தல்களில் கூறிய வாக்குறுதி நீர்மேல் எழுத்தாகியது; பீகார் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
அதுபோலவே, அத்துணைக் கட்சிகளும் பீகார் மாநில பா.ஜ.க. உள்பட சமூகநீதி (இட ஒதுக்கீடு) அனைவருக்கும் சட்டப் பாதுகாப்புடன் கிடைக்க ஒரே சரியான வழி, ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதன் விளைவுதான், அதிருப்தி; எதிர்ப்பு மேகங்கள் திரண்டு பா.ஜ.க. ஆட்சியை பீகாரில் காணாமற்போகச் செய்து, சமதர்ம ‘அசோக மக்களாட்சி ’அந்த மண்ணில் மலர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி. பிறகு, இப்போது 17 மாநிலங்களில் ஆட்சி என்பது, ‘ஆபரேஷன் தாமரை’ என்ற ‘வித்தை’யின்மூலம் – எம்.எல்.ஏ.க்களை கட்சி மாறச் செய்து அமைக்கப்பட்ட ஆட்சிகள்தானே ஒழிய, மக்களிடம் வாக்குகள் வாங்கி, அவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட பா.ஜ.க ஆட்சி அல்ல.
மத்திய நிறுவனங்கள், சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு உள்பட இந்தத் ‘திரிசூலம்’தானே ஜனநாயக முறையை வீழ்த்திட பயன்படுத்தப்பட்ட ஆயுதம். ‘முற்பகல் செய்தது; பிற்பகல் விளைகிறது’. அவ்வளவுதான்!
2024இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’ என்று நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்க திருப்பம் – ‘விடியலை நோக்கி வெள்ளி முளைக்கத் தொடங்கிவிட்டது’ என்பதையே காட்டுகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்