அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 8) அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 1.50 கோடி ரூபாய் வரை பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், தனி உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார். மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளன.
மூன்றில் ஒரு வழக்கு ரத்து!
இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகன் என்பவர் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அரசு தரப்பு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காததாலும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீா்த்துக் கொண்டதாக புகார்தாரர்கள் தரப்பிலும் கூறப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம், அமைச்சா் செந்தில் பாலாஜி, சண்முகன் உள்ளிட்டோர் மீதான ஒரு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை!
ஆனால் இதுதவிர செந்தில்பாலாஜி மீது மேலும் இரண்டு முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. அந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், முறைகேடான பணப்பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கடந்த 2021, ஜூலை 29ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. குறிப்பாக கடந்த மே 13ம் தேதி ஆஜராகும்படி ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவர் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், இடைகாலத் தடை விதிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து!
அமலாக்கத்துறை அனுப்பி சம்மனுக்கு தடைகோரி வரும் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு கடந்த 1ம் தேதி நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ”மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்துள்ள நிலையில் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது” என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவருக்கு எதிராக அமலாக்க பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
செந்தில்பாலாஜி கேவியட் மனுத்தாக்கல்!
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த 6ம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மீண்டும் உயிர்பெறும் பணமோசடி வழக்கு!
இதற்கிடையே எதிர்பாராத திருப்பமாக பணமோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், அமைச்சருக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை தொடர்ந்து நடத்தவும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் திமுகவுக்கு பின்னடைவு!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கு தொடர்புள்ள அனைவருக்கும் புதிய சிக்கல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அனைவரும் உயர்நீதிமன்றம் ரத்து செய்த பணமோசடி வழக்குகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மேலும் கொங்கு மண்டலத்தில் திமுகவை நிலைநிறுத்த தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது வந்துள்ள தீர்ப்பு, ஆளுங்கட்சியான திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா