தேர்தல் விளம்பரம் தொடர்பான திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 15) உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “தேர்தல் ஆணைய விதிகளின் படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்களை இரண்டு நாட்களில் பரிசீலிக்க வேண்டும்.
ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்களாக காலதாமதம் செய்து வருகிறது. ஒரு சில விளம்பரங்களை அற்ப காரணங்களை சுட்டிக்காட்டி நிராகரிக்கின்றனர். எனவே, தேர்தல் ஆணையம் நியாயமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும்.
திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் என்று கடந்த 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
திமுக தரப்பில், தேர்தல் ஆணைய வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு 2004-ஆம் ஆண்டிற்கு மட்டுமே பொருந்தும். அதன்பின்னர் வந்த தேர்தல்களில் அந்த உத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய விளம்பரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு 2004-ஆம் ஆண்டிற்கு மட்டும் தான் பொருந்துமா அல்லது மற்ற தேர்தல்களுக்கும் பொருந்துமா என்று தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
புதிய பிசினஸ் ‘ஆரம்பித்த’ அறந்தாங்கி நிஷா… குவியும் வாழ்த்துகள்!
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?