“பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸால் எக்காலத்திலும் இந்த தேசத்தைப் பிளக்க முடியாது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று (செப்டம்பர் 7) முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய நடைப்பயணத்தைத் தொடங்கினார். 600 மீட்டர் தூரம் நடந்துசென்ற அவர், இன்றைய நடைப்பயணத்தை முடித்துக்கொண்டார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சசிதரூர், திக் விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை, ஜோதிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ராகுல் காந்தி, “நான் தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வந்து செல்கிறேன் என உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த தமிழ்நாட்டு மண்ணோடு எனக்கு இருக்கும் உறவையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
ஒவ்வொரு முறையும் நான் இங்கு வருகிறபோது அதே உற்சாகத்தோடும், அதே மனநிறைவோடும்தான் தமிழகத்திலிருந்து செல்கிறேன். இந்த அருமையான இயற்கைச் சூழலிலே கண்ணைக் கவர்கின்ற 3 சமுத்திரங்களும் சங்கமிக்கின்ற இந்த அற்புதமான இடத்திலே நின்று ஒரு மாபெரும் புனிதப் பயணமாகிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துகிற இந்தப் பயணத்தை நான் தொடங்குவதிலே மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு, இந்த நாட்டு மக்களுக்கு தேசத்தை ஒற்றுமைப்படுத்துகிற ஒரு பயணம் தேவைப்படுகிறது என்கிற ஒரு கேள்வி எழுகிறது. இந்த நாட்டில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்கள், இந்த தேசத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு இப்போது ஒரு தேவை இருக்கிறது என்று மனமார உணர்ந்திருக்கிறார்கள்; மனமார விரும்புகிறார்கள்.
தேசத்தை ஒற்றுமைப்படுத்தக்கூடிய அவசியம் இப்போது எழுந்திருக்கிற அந்த உணர்வின் காரணமாகத்தான் இந்த பாதயாத்திரை. நமக்கு முன்னால் அசைந்தாடுகிற மூவர்ணக்கொடியாகிய தேசியக் கொடியைப் பார்க்கிறோம்.
இதைப் பார்க்கும்போதெல்லாம் அதனுடைய மாட்சிமைக்காகவும், மகத்துவத்துக்காகவும் அதை வணங்கி வாழ்த்த வேண்டுமென்று மனமார விரும்புகிறோம்.
தேசிய கொடி சாதாரண துணி அல்ல
சில பேர் இந்த மூவர்ணக் கொடியைப் பார்த்து அதில் இருக்கிற சக்கரத்தைப் பார்த்து அதை ஒரு சாதாரண துணி என்று எண்ணலாம். ஆனால், இது மூவர்ணக் கொடி மட்டுமல்ல, ஒரு சக்கரம் மட்டுமல்ல; ஒரு துணி மட்டுமல்ல.
இது, அதைவிட மேலானது. இந்தக் கொடி நம்முடைய கைகளுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடவில்லை.
இது, நமக்கு கொடுக்கப்படவும் இல்லை. இது, ஒரு நன்கொடையாகவும் தரப்படவில்லை. அது இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வென்ற கொடி. இந்தக் கொடி இந்தியாவில் வாழ்கிற ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கொடி.
இந்தக் கொடி இந்தியாவில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனுடைய மதத்தையும் இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தக் கொடி இந்தியாவில் பேசப்படுகிற ஒவ்வொரு மொழியையும் இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்தக் கொடி ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது, ஒரு ஆளுக்கான கொடி அல்ல. ஒரு நபருக்கான கொடி அல்ல. இந்தக் கொடி இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு தனிப்பட்ட குடிமகன்களுக்கும் சொந்தமானது.
இது ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இது, இந்தியா என்கிற தேசத்துக்கு சொந்தமானது. இந்தக் கொடி ஒரு மதத்திற்கோ, மொழிக்கோ, சாதிக்கோ சொந்தமானது அல்ல. இது, இந்திய தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு துகளுக்கும் சொந்தமான கொடி.
இந்தக் கொடி ஒரு நாட்டின் அடையாளம் மட்டுமல்ல. ஒரு மாநிலத்தின் அடையாளம் மட்டுமல்ல. இந்தக் கொடி இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு இந்தியர்களின் அடையாளமாகவும் இருக்கிறது. இந்தக் கொடி ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது, உறுதிப்படுத்துகிறது.
இது, நாட்டில் வாழும் குடிமகன்களுக்கு உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. இது, ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் மொழியை, கலாச்சாரத்தை, வளர்ச்சியைக் கொண்டாடுவதற்கான உரிமையை தந்திருக்கிறது. என் அருமைக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே இன்று இந்த தேசியக்கொடி மிகப்பெரிய தாக்குதலுக்கும் அச்சத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நினைக்கிறார்கள், இந்தக் கொடி அவர்களது தனிப்பட்ட உரிமை என்று. அவர்கள் மட்டுமே இந்த நாட்டின், மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும் என நினைக்கிறார்கள். இந்த நாட்டிலே இருக்கிற எதிர்க்கட்சிகளை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைகளை வைத்து பயம்காட்டலாம் என்று எண்ணுகிறார்கள்.
இதில் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இந்தியர்களை முழுவதுமாக நம்பவில்லை. இந்திய மக்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். அச்சமடைய மாட்டார்கள். அவர்களால் எக்காலத்திலும் இந்த தேசத்தைப் பிளக்க முடியாது. நம் ஊடக நண்பர்கள் வாய்மூடி மெளனமாக இருக்கிறார்கள்.பிரதமரின் முகத்தை மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன.
குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடத்திவருகிறார். தொழிலதிபர்களின் தயவில்லாமல் மோடியால் ஆட்சியில் நீடிக்க முடியாது. இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்றே மோடி ஆட்சியும் நடக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அன்று காந்தி இன்று ராகுல் : கே.எஸ்.அழகிரி பேச்சு!