“ராகுல் காந்தியின் இந்த வரலாற்றுப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவது தமிழர்களுக்குப் பெருமை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று (செப்டம்பர் 7) முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய நடைப்பயணத்தைத் தொடங்கினார். 600 மீட்டர் தூரம் நடந்துசென்ற அவர், இன்றைய நடைப்பயணத்தை முடித்துக்கொண்டார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சசிதரூர், திக் விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை, ஜோதிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்புரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “இன்றைக்கு நம் தலைவர் ராகுல் காந்தி, வரலாற்றுச் சிறப்புமிக்க நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை இப்படித்தான் அன்று தொடங்கினார். அது, அன்றைய ஆங்கிலேயர்களுக்கு ஒரு சாதாரண விஷயமாக தெரிந்தது.
ஆனால், அந்த யாத்திரையின் நோக்கம் என்பது, மக்களுடைய உணர்வுகளை ஆளுகிறவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களுக்கு ஒரு சிறந்த கொள்கையை விளக்கிக் கூறுவதற்காகவும் இந்த யாத்திரையை அவர் ஆரம்பித்தார்.
அந்த நடைப்பயணத்தின் முடிவு, சர்வ வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தகர்ந்து சுக்குநூறானதை நாம் பார்த்தோம்.
அதுதான் இன்றைக்கும் நடைபெற இருக்கிறது. தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அற்புதமான இளைஞர் அவர்; மிகுந்த லட்சிய உணர்வுடையவர் அவர்; புரட்சிகரமான சிந்தனைகள் உடையவர் அவர்; எளிமையானவர்.
அவர் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பு வந்தபோது அவர் மறுத்தார்.
தோழர்களே ஒன்றைப் பெறுவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறதோ, அதை விட்டுக்கொடுப்பதிலும் அதிக மகிழ்ச்சி இருக்கிறது என்பதை ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.
இன்றைக்கு இந்த நடைப்பயணத்தின் நோக்கமே, இந்திய மக்களுக்கு சில உண்மைகளை மீண்டும் நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். மகாத்மா காந்தி, ’இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியர்கள்’ என்றார்.
ஆனால் அன்றைக்கே ஆர்.எஸ்.எஸ்காரர்கள், சனாதன தர்மத்தை நிலைநாட்ட விரும்பினார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளாக நாம் மக்களை பலவித பிரிவுகளாக பிரித்துவைத்திருக்கிறோம்.
அந்தப் பிரிவுகள் இருக்கும் காரணத்தினால்தான் சமூகம் செயல்படுகிறது. அவரவர் வேலையை அவரவர் செய்கிறார்கள்.
இதைத்தான் மகாத்மா எதிர்த்தார். ‘இங்கு எல்லோருமே ஒன்றுதான்’ என்றார் மகாத்மா. அதே கருத்துடன்தான் நம்முடைய தலைவர் ராகுல் காந்தியும் இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அன்று மகாத்மா ஆரம்பித்தார்; இன்று ராகுல் காந்தி ஆரம்பித்திருக்கிறார். இந்த நாடு முன்னேற வேண்டும். யார் மீதும் வெறுப்பு பேச்சு வேண்டாம்.
யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்கிற ஒரு பிரகடனத்தைச் சொல்வதற்காக ராகுல் காந்தி வந்திருக்கிறார்.
இந்த வரலாற்றுப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவது தமிழர்களுக்குப் பெருமை” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ராகுலின் பாத யாத்திரையை துவக்கிவைத்தார் ஸ்டாலின்